தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடம்... களையெடுக்கப்படும் கடலூர் மாவட்டக் கல்வித்துறை!
இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்திலேயே
கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது கடலூர் மாவட்டம். ஏற்கெனவே
நோய்வாய்ப்பட்டிருக்கும் கடலூர் மாவட்டம் கல்வியிலும் பின்னோக்கிப் போவது
சமூக ஆர்வலர்களிடையே பெரும் குமுறலை ஏற்படுத்தியிருக்கிறது
இதுகுறித்து
சமூக ஆர்வலர் நிஜாமுதீன், "எப்போதும் கடைசி இடத்தைப் பிடிப்பதற்கு
விழுப்புரம் மாவட்டமும், கடலூர் மாவட்டமும்தான் போட்டிபோடும். இந்த முறை
அந்த இடத்தை கடலூர் மாவட்டம் பிடித்துவிட்டது.
அரசுப் பள்ளிகளில் அதிகளவில்
ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதும், கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள்
பெருமளவில் கடற்கரையோரங்களிலும், கிராமப் புறங்களிலும்
அமைந்திருப்பதும்தான் இதற்குக் காரணம்.
அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் நகர்ப்புறங்களில் குடியிருப்பதால் சரியான
நேரத்துக்கு அவர்கள் பணிக்குச் செல்வதில்லை. ஏதோ கடமைக்கு வந்து
செல்கிறார்கள். அதை அதிகாரிகளும் கவனிப்பதில்லை. இரண்டு வருடத்துக்கு முன்
ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை எஸ்.எம்.எஸ் மூலம் அதிகாரிகளுக்குத்
தெரியப்படுத்தும் முறை இருந்தது. அப்போது ஓரளவுக்கு ஆசிரியர்கள்
பயந்துகொண்டு பள்ளிக்கு வந்தார்கள். அதை மீண்டும் கொண்டுவரவேண்டும்.
அதேபோல், ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் பகுதிகளிலேயே குடியமர்த்த அரசு
ஏற்பாடு செய்யவேண்டும். மேலும், அரசு ஆசிரியர்கள் தனியார் பள்ளி
மாணவர்களுக்கு மணிக்கணக்கில் தனி வகுப்பு நடத்தி தங்கள் வருமானத்தைப்
பெருக்கிக்கொள்வதில்தான் குறிக்கோளாக இருக்கிறார்கள். எனவே, அரசு
ஆசிரியர்கள் தனி வகுப்பு நடத்த தடை விதிக்கவேண்டும்.
அரசுப்
பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்காக அரசு சிறப்புக் கவனம் செலுத்துவதில்லை.
தனியார் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தைப் பதினொன்றாம்
வகுப்பிலேயே நடத்தி முடித்துவிடுகிறார்கள். இரண்டு வருடம் ஒரு பாடத்தைப்
படிப்பதால் அந்த மாணவர்கள் அதிக மதிப்பெண்களை வாங்கி அரசுப் பள்ளி
மாணவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறார்கள். இந்நிலை மாறவேண்டுமானால்,
மாவட்ட நிர்வாகமானது அரசுப் பள்ளிகள்மீதும், ஆசிரியர்கள்மீதும் சிறப்புக்
கவனம் செலுத்தி கல்வி வளர்ச்சிக்கு வழிவகை செய்யவேண்டும்" என்றார்.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேஷ், "மாவட்டத்தில் கல்வித்தரம் இவ்வளவு
மோசமானதற்கு என்ன காரணம் என்று, கல்வித்துறை அதிகாரிகளுடன் கூட்டம்
நடத்தவுள்ளோம். அதன் மூலம் அடுத்த ஆண்டு கல்வி வளர்ச்சிக்காக அனைத்து
நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படும்" என்றார்.
No comments:
Post a Comment