Saturday, May 6, 2017

நிர்பயா வழக்கில் தீர்ப்பு குறித்து நிர்பயா தாய், தலைவர்கள் கருத்து

தாமதமானாலும், கடைசியில் நீதி வழங்கப்பட்டு இருக்கிறது” என்று தீர்ப்பு குறித்து நிர்பயா தாய், தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் மீதான மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த அவரது தாயும், தலைவர்களும், “தாமதமானாலும், கடைசியில் நீதி வழங்கப்பட்டிருக்கிறது” என்று கூறினர்.

தாய் உருக்கம்

நிர்பயா வழக்கின் இறுதி தீர்ப்பை அறிவதற்காக, சுப்ரீம் கோர்ட்டுக்கு அவரது தாயார் ஆஷா தேவி, தனது கணவர் பத்ரி சிங்குடன் வந்திருந்தார். கோர்ட்டு அறை நிரம்பி வழிந்தது. நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பை ஆங்கிலத்தில் வாசித்து முடித்தபோது நிர்பயாவின் பெற்றோர், வக்கீல்கள், பொதுமக்கள் எழுந்து நின்று கை தட்டி வரவேற்றனர்.

நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், “நீண்டதொரு சட்ட போராட்டத்தால், தாமதமானாலும் கடைசியில் நீதி வழங்கப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது திருப்தி அளிக்கிறது” என்று உருக்கமுடன் கூறினார்.

நிர்பயாவின் தந்தை பத்ரி சிங், “இது தாமதமாக கிடைத்திருக்கிறது. ஆனாலும் இறுதியில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று உருக்கமுடன் கூறினார்.

இந்த வழக்கில் தார்மீக ஆதரவு தெரிவித்த அனைத்து தரப்பினருக்கும் நிர்பயாவின் பெற்றோர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மத்திய மந்திரிகள்


மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி தீர்ப்பு பற்றி கூறும்போது, “கீழ் கோர்ட்டு தீர்ப்பு தாமதமாக உறுதி செய்யப்பட்டிருந்தாலும் கூட நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என குறிப்பிட்டார்.

மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், “சட்டத்தின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி இது” என பெருமிதத்துடன் கூறினார்.

சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தீர்ப்பு குறித்து கருத்து கூறுகையில், “இந்தியாவின் ஆன்மாவை துயரத்துக்கு ஆளாக்கி கலங்கடித்த நிர்பயா வழக்கில், 4 ஆண்டுகளுக்கு பின்னர் நீதி வழங்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறைக்கு எதிரான ஒவ்வொரு பெண்ணின் போராட்டத்துக்கும் சின்னமாக மாறிய அந்த வீர மகளின் குடும்பம், தைரியமானது என்பதை நான் ஆழமாக உணர்கிறேன். பெண்களுக்கு ஒரு பத்திரமான, பாதுகாப்பான சூழலை உருவாக்குவது தொடர்பாக நாம் ஒவ்வொருவரும் ஓய்வு ஒழிச்சலின்றி உழைப்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு நினைவூட்டலாக அமையும். இந்தியாவின் ஒவ்வொரு மகளும் கண்ணியத்துடனும், கவுரவத்துடனும், மதிப்புடனும், சமத்துவத்துடனும் வாழ்வது என்பது உரிமை” என குறிப்பிட்டார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, “நீதி காப்பாற்றப்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்கு மறைந்த நிர்பயா என்றென்றும் ஒளியாக இருப்பார்” என கருத்து தெரிவித்தார்.

மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஷர்மிஸ்தா முகர்ஜி (ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள்) கருத்து கூறும்போது, “நிர்பயா வழக்கில் இறுதியில் நீதி வழங்கப்பட்டுள்ளது. குற்றத்துக்கு பின்னர் தண்டனை என்பது முற்றிலும் தேவையான ஒன்று. ஆனால் குற்றம் நடக்காமல் தடுப்பது இன்னும் முக்கியம்” என்று கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.12.2025