Thursday, May 25, 2017

திருப்பூரை புகழ்ந்த அமைச்சர்... பெருமிதம்! தொழில் துறையினர் உற்சாகம்
பதிவு செய்த நாள்25மே2017 01:44




திருப்பூர் : "திருப்பூரை போல் தொழில் நகரங்கள், நாடு முழுவதும் அமைக்க உரிய ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது,' என்று, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் அறிவிப்பு, திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் திருப்பூர் வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, திருப்பூர் பகுதியில் ஆய்வு செய்தார். இங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சிகள் குறித்து கேட்டறிந்த அவர், திருப்பூரை பின்பற்றி, நாடு முழுவதும் தொழில் நகரங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்."நேற்றைய தொழிலாளர்கள்; இன்றைய தொழிலதிபர்கள்' என்று, திருப்பூரின் வளர்ச்சியை புகழ்ந்துள்ள அவர், திருப்பூர் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு கள், ஏற்றுமதி வாய்ப்பு கள், தொழில் முதலீடுகள் ஆகியன குறித்து, ஜவுளி துறை ஆணையத்தின் மூலம், புள்ளி விவரங்களை சேகரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.அவ்வகையில், திருப்பூரில் தொழில் நிறுவனங்களின் முதலீடு, உற்பத்தி முறை, வேலை வாய்ப்பு, மூலப்பொருட்களின் தேவை, மாதாந்திர உற்பத்தி அளவு உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். இதன் மூலம் நாடு முழுவதற்குமான ஜவுளி கொள்கை வகுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஜவுளி தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்களை ஒன்றிணைக்கும் வகையில், "டெக்ஸ்டைல் இந்தியா 2017' என்ற தலைப்பில், ஜூன், 30 முதல், ஜூலை, 2 வரை குஜராத்தில், ஜவுளி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் துவக்கி வைக்கும் இக்கண்காட்சியில், 20 நாடுகளில் இருந்து, 2,500 சர்வதேச வர்த்தகர்களும்; 15 ஆயிரம் உள்நாட்டு வர்த்தகர்களும் பங்கேற்க உள்ளனர். இதில் ஏராளமான வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படும் எனவும், மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், "இக்கண்காட்சி, திருப்பூர் தொழிற் துறையினருக்கு நல்ல வாய்ப்பாக அமையும். திருப்பூர் தொழிற்துறையை சுட்டிக்காட்டி, நாடு முழுவதும் தொழில் நகரம் உருவாக்கவும், ஜவுளி கொள்கை வகுக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது திருப்பூருக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது,' என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025