Saturday, May 13, 2017

நன்றி குங்குமம் டாக்டர்

உளவியல் தொடர்


சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். 40 வயதான அவரைப் பார்த்த எனக்கு அடையாளமே தெரியவில்லை. 60 வயதையொட்டிய தோற்றம். நரை கூடியிருந்தது. பாதி கேசம் காணோம். விரக்தியாகச் சிரித்தார். அவருக்கு காலை எழுந்ததிலிருந்து ஓட்டம்... ஓட்டம்... ஓட்டம்... இரவு 10 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தால் தூக்கம்...மீண்டும் காலை 8 மணிக்கு ஓட்டம் ஆரம்பம். கிடைக்கும் ஒரே ஒரு விடுமுறை நாளும் பாதி நாள் படுக்கையிலேயே கழியும். வீட்டு வாசலில் போடப்பட்ட செய்தித்தாளை எடுக்காமல் அடுத்த நாள் இரண்டு செய்தித்தாள்களாகச் சேர்த்து உள்ளே எடுத்துப்போவார்.

இதற்கெல்லாம் காரணம் மேற்சொன்ன நண்பருக்கு Premature aging பிரச்னை. காரணம் ஸ்டிரெஸ்(Stress) என்னும் மன அழுத்தம். இயல்பை, இயற்கையை மீறிய வாழ்க்கையை வாழ்கிறார். மன அழுத்தம் மிகுதியால் தலைமுடி உதிர்ந்து போவது மருத்துவ ரீதியான ஓர் உண்மையே.இப்போதெல்லாம் திடீரென்று சாலையில் நிறைய ஃப்ளக்ஸ் போர்டுகளை பார்க்க முடிகிறது.இன்னார் காலமாகிவிட்டார் என்று அறிவிக்கும் பேனர்கள். அதிர்ச்சியாக இருக்கும் நமக்கு. நேற்று நன்றாக நடமாடிக் கொண்டிருந்தவர் இன்றைக்கு இல்லை. என்ன ஆயிற்று? 40 வயதைக்கூட தாண்டியிருக்க மாட்டாரே என்று ஆதங்கமாக இருக்கும். என்ன காரணம்? மாரடைப்பு, பக்கவாதம், குடிநோயால் கல்லீரல் பாதிப்பு, குடிநோயால் கணைய அழற்சி நோய் ஏற்பட்டு உயிரிழப்பு, பான்பராக், சிகரெட் பழக்கங்களால் வாய் புற்றுநோய் - இப்படியாகதான் நீள்கின்றன காரணங்கள்.

எங்கே போகிறது நமது இளைய சமுதாயம்? தீய பழக்கவழக்கங்கள்தான் காரணங்கள் என்றில்லை. ‘நேற்று ஒரு டெத் பார்த்தேன், அவருக்கு 35 வயதுதான் இருக்கும். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று தொழிலில், குடும்பத்தில் உச்சத்திலிருக்கும் ஆளுமை அந்த நபர். ரத்தக்கொதிப்பு, சர்க்கரை என எந்த நோயும் இல்லை. கடுமையான மாரடைப்பு. அதற்கும் காரணம் அவருடைய தொடர்ந்த மன அழுத்தம்’ என்றார் எனது நண்பர். அவர் இதய நோய் மருத்துவர்.

உழைப்பு வாழ்வில் முக்கியம்தான்; ஆனால் உழைப்பு மட்டுமே முக்கியம் அல்ல. பணமும் வெற்றியும் தேவைதான்; ஆனால், அவை மட்டுமே வாழ்க்கை அல்ல. புகழும் பாராட்டும் தேவைதான்; அவை வரும்போது அனுபவிக்க நாம் உயிருடன் இருக்க வேண்டாமா?
சிறிது நேரம் நண்பர் இதய சிகிச்சை மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். நகரம், நரகமாகி வருவதையும் மாறிவிட்ட எந்திரமயமான வாழ்க்கை முறைகள் மரண தேசத்துக்கு வாயிற்படிகளாக மாறிவிட்ட அவலத்தையும் அவரும் நானும் பகிர்ந்து புலம்பி பின் விடைபெற்றோம்.சரி.... இந்த மன அழுத்த அரக்கனிடமிருந்து தப்பிப்பது எப்படி?உபயோகமான சில டிப்ஸ்...

பிரச்னைகளை முதலில் எழுதுங்கள். எது முக்கியம்? எது மிக, மிக முக்கியம்? எதற்கு முன்னுரிமை கொடுத்துத் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்பதை வரிசைப்படுத்தி எழுதுங்கள். பாதிப் பிரச்னையை அப்போதுதான் இனம் கண்டுகொள்ள முடியும். குடும்பப் பிரச்னை, தொழில் ரீதியான பிரச்னை, உறவுகளில் சிக்கல், உடல்நலக் கோளாறு என்று அனைத்து சிரமங்களையும் ஒரு குப்பைத் தொட்டியில் போட்டு அடைத்தது போன்று உங்கள் மூளையில் சேகரம் செய்யாதீர்கள்.

பிரச்னைகளின் தீவிரத்தைப் பகுத்தாய்ந்து பார்க்கும்போது பாதி பிரச்னைகளுக்கு இப்போது நாம்  உடனடியாகக் கவனம் செலுத்தத் தேவையில்லை என்பது புரியும். உண்மையில் அங்கே நீங்கள் தேவையில்லாமல் போட்டு குழப்பிக் கொண்டிருந்திருக்கிறீர்கள். 2 ஆண்டுகளுக்குப் பின்பு வரும் பிரச்னையை விட நாளை நாம் எதிர்கொள்ளப்போகும் பிரச்னையே முக்கியமானது.நீங்கள் பயந்ததைப் போன்று எத்தனை விஷயங்கள் நடந்து முடிந்திருக்கின்றன? 2 வாரத்திலிருந்து 2 ஆண்டுகள் வரைஉங்கள் பயங்களை பின்னோக்கி கவனித்துப் பாருங்கள். 85 சதவிகிதம் நீங்கள் பயந்த அளவுக்கு மோசமான பின்விளைவுகளை கொண்டிருப்பதில்லை என்பதை உணர்வீர்கள். பாதிப் பேருக்கு மேல் தாங்கள் கற்பனை செய்ததைவிட அந்தப் பிரச்னையை மிக நன்றாகவே கையாண்டு இருப்பதாக
தெரிவிக்கிறார்கள்.

மூச்சுப் பயிற்சிமன அழுத்தம் அதிகமாக இருக்கும் வேளைகளில் ஓரிடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். 4 வரை எண்ணிக்கொண்டே ஆழமாக மூச்சை இழுங்கள். மீண்டும் 4 வரை எண்ணிக்கொண்டே இழுத்த மூச்சை உள்ளேயே தக்க வைக்கவும். இப்போது மீண்டும் 4 வரை எண்ணிக்கொண்டு அந்த மூச்சை மெதுவாக வெளியேற்றவும். இப்படி தொடர்ந்து 5 நிமிடங்கள் செய்து பாருங்கள். உங்கள் மன அழுத்தம் லேசாகக் குறைந்திருப்பதை உணர்வீர்கள்.கடின வேலையின் போதோ கோபம் கொந்தளித்து கிளம்பும்போதோ இதனை முயற்சி செய்யலாம். இடம் முக்கியம் அல்ல. செய்வதுதான் முக்கியம். கவனிக்கவும்... சாதாரணமாக மூச்சை இழுப்பது போன்ற செயல் அல்ல இது. நமதுஉதரவிதானம்(Diapharagm), அதாவது நமது நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் இடையிலுள்ள ஒரு பகுதி - நன்கு மேலும் கீழும் வரும்படியாகச் செய்யும் பயிற்சி இது. இதனை Diapharagmatic breathing என்பார்கள். கிட்டத்தட்ட பிராணாயாமம் போன்றதே இது.

உடற்பயிற்சி நல்ல ஒரு மன அழுத்த போக்கிஅமைதியான சூழலில் நடைபயிற்சி என்பதில் தொடங்கி ஒரு ஹைடெக் உடற்பயிற்சி கூடத்தில் அரை மணி நேரம் ஒர்க் அவுட் செய்வது வரை எல்லாமே இதற்கு உதவும். நீச்சல் மிகச் சிறந்தது. கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு உடலில் சுரக்கும் எண்டார்பின்ஸ்(Endorphins) ஹார்மோன்கள் மன அழுத்தத்துக்கு காரணமான கார்ட்டிசால்(Cortisol) ஹார்மோன்களை குறைக்கும் தன்மை கொண்டது.மசாஜ் என்னும் அற்புதக்கலைமுறையாக, அறிவியல்பூர்வமாக அளிக்கப்படும் மசாஜ் என்பது மருந்து சீட்டில் நாங்கள் மாத்திரை எழுதிக்கொடுப்பதற்கு சமம். ‘தரமான, முறையான மசாஜுக்காக செய்யும் செலவு நல்வாழ்வுக்கான முதலீடாகவே கருதுவேன்’ என்பார் சுயமுன்னேற்ற நூலறிஞரும் பேச்சாளருமான ராபின் சர்மா. உடலின் மீது ஆயுர்வேத எண்ணெய்களும் மூலிகைகளும் உபயோகித்து மசாஜ் செய்யும்போது உடலில் சேகரமாகி இருக்கும் நச்சுப் பொருட்கள் எல்லாம் வெளியேறிவிடுகின்றன. அதனுடனே மன அழுத்தமும்!

ஒரேமாதிரியான பணிகளை ஒரேமாதிரியான பாணியில் தினமும் செய்யாதீர்கள்அதே காரியம், அதே கவலை, அதே பயம், அதே மன அழுத்தம் அப்படியே தொடரும். பணி இடையே சில விஷயங்களை மாற்றிச் செய்யப் பழகுங்கள். உதாரணத்துக்கு நீங்கள் அமர்ந்திருக்கும் இருக்கையை வேறு திசையில் மாற்றிப்போட்டு அமருங்கள்.இளையராஜாவோ, ரஹ்மானோ பிடித்த இசையை மென்மையாக ஒலிபரப்புங்கள். நகைச்சுவை காட்சிகளை தொலைக்காட்சியில் பாருங்கள். வேலையின் அழுத்தம் தீவிரமாகும்போது திடீரென்று அதற்கு ஒரு பிரேக் போடுங்கள். சிறு நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். இசையும் கேட்கலாம். மனதுக்கு இதமான மெல்லிசை மன அழுத்தத்துக்கான சிறந்த மருந்து என்பது அறிவியல் உண்மை.

மிதமான சூட்டில் கிரீன் டீ அருந்துவதும் பலன் அளிக்கும். பிரியமானவர்களை போனில் அழையுங்கள். வெறுமனே ஒரு ஹாய் போதுமானது. அழுத்தம் நொடியில் உருகிவிடும். அதுவும் இல்லாவிட்டால் கண்ணை மூடி இருக்கையில் தலை சாய்த்து சிறு உளச்சுற்றுலா(Mental tour) செல்லுங்கள். அதாவது, உங்கள் மனதுக்கு பிடித்த இயற்கை சூழல், பிரியமானவர்களுடன் கழிந்த இனிய பொழுதுகள், மன நிறைவு மிக்க அற்புத தருணங்களை அசை போடுங்கள். 5 நிமிடம் போதும், அத்தனை அழுத்தமும் அழிந்தேபோகும். மனம் லேசாகிவிடும்.இந்த ஆக்கப்பூர்வமான காரியங்களைச் செய்தாலே மன அழுத்தத்தை வரவிடாமல் விரட்டிவிடலாம். கனி இருப்ப காய் கவர்வது என்பது போல, இந்த நல்ல வழிகளை விட்டுவிட்டு டென்ஷனை குறைக்கிறேன் பேர்வழி என்று புகைப்பிடித்தால் அதிலுள்ள நிகோடின் இன்னும் மூளையைத் தூண்டி டென்ஷனை அதிகரிக்கவே செய்யும்.மதுவைத் தொட்டாலும் அது தற்காலிக நிவாரணமே அளிக்கும். போதை இறங்கியவுடன் நேற்றைய மன அழுத்தம் இன்று இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்பதை உணருங்கள். ஆல்கஹால் ஒரு கவலை நீக்கி அல்ல. அது ஒரு பதற்றம் கொடுக்கும் பொருள்(Anxiogenic) என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டால், கவலையாக இருக்கிறேன் என்ற பெயரில் அதை நாடவே மாட்டீர்கள்!

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025