Tuesday, May 23, 2017

மெரினா பீச்சில் பஜ்ஜி சாப்பிட விருப்பமா? இந்த செய்தியைப் படித்துவிட்டு பதில் சொல்லலாம்

By DIN  |   Published on : 20th May 2017 02:46 PM  
beach_day

சென்னை: சென்னை மெரினா பீச்சில் கால் நனைத்து நேரத்தைப் போக்க மட்டும் சென்றால் பிரச்னை இல்லை, அங்கே சாப்பிட நினைத்தால் உங்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படலாம்.
மெரினா கடற்கரையில் காய்கறி பஜ்ஜி, மீன் வறுவல், ஐஸ்க்ரீம் போன்றவை வெகு பிரபலம்.
இவை எல்லாம் உண்மையிலேயே தரமான உணவுகள்தானா? என்றால் இல்லை என்பதுதான் ஒரே பதில். ஒரு நாள் சாப்பிடுவதால் ஒன்றும் ஆகிவிடாது? என்று சப்பைக் கட்டுக் கட்டினால் நிச்சயம் நீங்கள் ஏமாந்து போவீர்கள்.
மெரினா கடற்கரையில் உள்ள ஏராளமான உணவகங்களில் வெள்ளிக்கிழமை, உணவு பாதுகாப்பு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய சோதனயில் சுமார் 140 கிலோ கிராம் கெட்டுப் போன உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் வருவாய் துறைக்கு, மெரினா கடற்கரையில் விற்கப்படும் உணவு குறித்து பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார் வந்ததை அடுத்து, அண்ணா சதுக்கம் முதல் களங்கரை விளக்கம் வரை உள்ள 300 உணவுக் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
10 குழுவினர் அனைத்துக் கடைகளிலும் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை பரிசோதித்த போது, கெட்டுப் போன மீன், காலாவதியான ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், அங்கீகாரமற்ற உணவுப் பொருட்கள், அழுகிய பழங்கள், பல முறைப் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் என அனைத்தையும் பறிமுதல் செய்து அகற்றினர். ஆனால், எந்த வியாபாரிக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை.
இவர்கள் யாருக்குமே உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகள் குறித்து எதுவும் தெரியவில்லை. இவர்களை எச்சரித்த விட்டுவிட்டோம் என்று ஒரு அதிகாரி கூறினார்.
இந்த ஆய்வில், 24 கிலோ கிராம் கெட்டுப் போன் மீன், 7 கிலோ காலாவதியான ஐஸ்க்ரீம், பிஸ்கட், 40 லிட்டர் காலாவதியான குளிர்பானம், மீண்டும் பயன்படுத்தப்பட்ட 31 லிட்டர் எண்ணெய், 4 கிலோ கலர்பவுடர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஏற்கனவே 2014ம் ஆண்டு இதுபோன்றதொரு ஆய்வு நடத்தப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு விற்பனையாகும் குடிநீரின் தரமும் கேள்விக்குறியாக இருப்பதால் பொதுமக்கள் இதுபோன்ற இடங்களில் உணவுகளை வாங்கி சாப்பிட வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதுபோன்ற உணவுகளை விற்கும் கடைகளில் இருக்கும் பொருட்களை மட்டும் பறிமுதல் செய்துவிட்டால் நடவடிக்கை எடுத்ததாக மாறிவிடுமா? இதுபோன்ற வியாபாரிகளை வெறும் எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டால், இவர்கள் திருந்திவிடுவார்களா?
ஏன் இந்த உணவுக் கடைகளை மாநகராட்சி சீல் வைத்து மூட உத்தரவிடவில்லை. பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற உணவு வழங்கும் செயலுக்கு மறைமுகமாக அரசு அதிகாரிகளும் ஆதரவு கொடுப்பதாகவே பொதுமக்கள் கூறுகிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் காலூன்றி இருப்பதும், கடைகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காததற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
'காற்று வாங்கப் போனாள்... அந்த கன்னி என்ன ஆனாள்...' என்ற பாடலுக்கு இப்போது இப்படி பதில் சொல்லலாம், அவள் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டிருந்தால், டைபாய்ட் போன்ற மிக மோசமான நோய் தாக்கி நிச்சயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பாள் என்று.
இப்படி அரசு அதிகாரிகள் கைவிரித்துவிட்டதால், எல்லாவற்றுக்குமே பொதுமக்கள் தான் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும் என்ற தாரகமந்திரத்தை நாம் மனதில் கொண்டு, காற்று வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்தால் மறுநாள் வீட்டில் காற்று வாங்கலாம். இல்லையேல் மருத்துவமனையில்தான் மாத்திரை வாங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...