முதல் தர மருத்துவ கல்லூரிகளில் 'சீட்' டாக்டர்களுக்கு கை கொடுத்த 'நீட்
பதிவு செய்த நாள்: மே 20,2017 22:01
' கோவை, 'நீட்' தேர்வின் பலனால், கோவையைச் சேர்ந்த, ஒன்பது டாக்டர்களுக்கு, தேசிய அளவில், முதல் தர கல்லுாரிகளில், முதுகலை படிப்புகளுக்கான ஒதுக்கீடு கிடைத்துள்ளது.
தமிழகத்தில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு, 'நீட்' நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி, மத்திய அரசு உத்தரவிட்டது.
எம்.டி., - எம்.டி.எஸ்., போன்ற அனைத்து முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், 'நீட்' தேர்வின் அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமின்றி, மாநில இடங்களுக்கும், 'நீட்' மதிப்பெண் தேவை என, அறிவிக்கப்பட்டது. இதற்கான தேர்வுகள், 2016 டிசம்பரில் நடத்தப்பட்டன. பல்வேறு பிரச்னைகள் காரணமாக, முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து, கடந்த மாதம் இம்முடிவுகள் வெளியிடப்பட்டன.
தரம் உயரும்
தமிழகத்தைச் சேர்ந்த, பல டாக்டர்கள் முதுகலை படிப்புக்கு தேர்வாகினர். இவர்களில், கோவையைச் சேர்ந்த ஒன்பது டாக்டர்கள், டில்லியில் உள்ள முதல்தர கல்லுாரிகளில் தேர்வு பெற்றுள்ளனர்.
அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில், 'நீட் தேர்வால், அகில இந்திய அளவில், நம் மாணவர்கள் இடங்களை பிடிக்க முடியும் என்பதற்கு இது உதாரணம்.
'கடந்த ஆண்டுகளில், முதுகலை படிப்பு பயில விரும்புவோர், தமிழகத்தில் உள்ள கல்லுாரிகளை மட்டும் தேர்வு செய்தனர். போட்டி, மாநிலத்துக்கு உள்ளேயே முடிந்துவிடும். தற்போது அதிக எண்ணிக்கையில், முதல்தர மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
'இதன் மூலம், நம் மாணவர்களின் திறமை வெளி வந்துள்ளது. 'நீட்' தேர்வால், மாணவர்களின் கல்வித்தரம் உயரும்' என்றார்.
No comments:
Post a Comment