Sunday, May 21, 2017

Vikatan


Last updated : 18:26 (20/05/2017)

காந்தி, நேதாஜியை விமர்சித்த மார்க்கண்டேய கட்ஜு ரஜினியை விட்டுவைப்பாரா?

 எம்.குமரேசன்

'முத்துக்களோ கண்கள்... தித்திப்பதோ கன்னம்... சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை... ' என்ற காலத்தைக் கடந்து ஒலித்துக்கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்பட பாடல் வரிகள், அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. `அவருக்கும் தமிழுக்கும் தொடர்பே இல்லையே!' என உற்று நோக்கினால், 'நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கம்பர் விடுதியில் தங்கிப் படித்தவன். என் ஃபேவரைட் தமிழ்ப் பாடல் இது'  என்றது அவரது பதிவு. இது யாருடைய ட்விட்டர் பக்கம் எனப் பார்த்தால், நம்ம மார்க்கண்டேய கட்ஜு. இந்த கட்ஜு யார்?, இவர் ஏன் அடிக்கடி தமிழகம் பற்றியும் தமிழர்கள் பற்றியும் சகட்டுமேனிக்கு கருத்து வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்?

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1967-68 காலகட்டத்தில் கட்ஜு படித்துள்ளார். தமிழகத்தில் தங்கிப் படித்ததோடு கட்ஜுவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள பந்தம் முடிந்துவிடவில்லை. கடந்த 2004- 05ஆம் ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இருந்துள்ளார். அதனால்தான் தமிழ்நாடு தொடர்பாக அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறார். 

இந்த மார்க்கண்டேய கட்ஜு யார்... அவரின் பின்னணி என்ன?

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் கட்ஜு. தாத்தா கைலாஷ் நாத் கட்ஜு, அலகாபாத்தின் புகழ்பெற்ற வக்கீல். அரசியல்வாதியும்கூட. மேலும், மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்ததோடு, மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களின் கவர்னராகவும் இருந்துள்ளார்.  தந்தை சிவநாத் கட்ஜு அலகாபாத் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். குடும்பமே வாழையடிவாழையாக நீதித்துறையில் பணியாற்றியுள்ளது. மார்க்கண்டேய கட்ஜுவின் ரத்தத்திலேயே சட்டம் ஊறியிருந்தது. சட்டம் பயின்ற அவர், அலகாபாத் நீதிமன்றத்தில் பயிற்சி எடுத்து, வக்கீலாகப் பணியாற்றினார். 

கடந்த 1991ம் ஆண்டு, அலகாபாத் நீதிமன்றத்தில் (பொறுப்பு) தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2004ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், விரைவிலேயே டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியானார். பிறகு, 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பதவி. சுமார் 20 ஆண்டுகள் நீதிபதியாக பதவி வகித்த கட்ஜு, 2011ம் ஆண்டு ஓய்வுபெற்றார். பிறகு  பிரஸ் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ச்சியாக வெளியிட்டுவந்தார். ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்ட பல பதிவுகள், அதிர்ச்சி ரகம். மார்க்கண்டேய கட்ஜுவின் விமர்சனத்திலிருந்து மகாத்மா காந்தி முதல் ரஜினிகாந்த் வரை எவரும் தப்ப முடியாது.


கடந்த 2015ம் ஆண்டு கட்ஜு ஃபேஸ்புக் பக்கத்தில், 'பிரிட்டிஷாரின் ஏஜென்ட்தான் காந்தி. அவர் செய்யவேண்டியதைச் செய்துவிட்டார். இந்திய தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர், பிரிட்டிஷாரின் கைக்கூலி. நேதாஜி, ஜப்பானிய பாசிஸவாதிகளின் ஏஜென்ட்' எனப் பதிவிட்டிருந்தார். ஒருமுறை, 'வெளிநாட்டிலிருந்து பத்து மில்லியன் டாலர் எனக்குக் கொடுத்தால், நானும்தான் சேவை செய்வேனே' எனப் பதிவிட்டு, மதர் தெரசாவை வம்புக்கு இழுந்தார். டெல்லி சட்டமன்றத் தேர்தலின்போது, ஆம் ஆத்மி கட்சியின் ஷாஷியா இல்மியாவின் அழகைப் போற்றிப் புகழ்ந்தார். 'கிரண்பேடிக்குப் பதிலாக இல்மியாவை டெல்லி முதலமைச்சர் வேட்பாளராக பா.ஜ.க அறிவித்தால், எளிதாக வெற்றி பெற்றுவிடும்' என ஜொள்ளியிருந்தார். 'இந்தியர்களில் 90 சதவிகிதம் பேர் முட்டாள்கள்' என்றும் ட்விட்டியிருந்தார்.

கட்ஜுவும் அருண் ஜெட்லியும் நெருங்கிய நண்பர்கள். கடந்த 2013ஆம் ஆண்டு அவர் எழுதிய கட்டுரையில், 'குஜராத் கலவரத்தில் மோடியின் கைங்கர்யம் இல்லை என்று நம்பவில்லை ' என எழுதியிருந்தார்.  இதனால் அருண் ஜெட்லிக்கும் கட்ஜுவுக்கும் பெரும் வார்த்தைப்போர் மூண்டது. ‘குஜராத் கலவர வழக்கிலிருந்து உச்ச நீதிமன்றம் மோடியை விடுவித்தது. `உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தவரை, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியே விமர்சிக்கலாமா?' என்றும் கேள்வி எழுந்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை, உச்ச நீதிமன்ற நீதிபதியே நம்பவில்லையா?' எனவும் கண்டனம் குவிந்தது. இதனால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கும் கட்ஜு ஆளானார். 

2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு ஒருநாள் முன்னதாக கட்ஜு கொடுத்த பேட்டி, தேர்தல் ஆணையத்தையே ஆட்டிவைத்தது. 'அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்' எனத் தேர்தல் ஆணையம் கூவிக்கொண்டிருக்கையில், ``இந்தத் தேர்தலில் நான் வாக்களிக்கப்போவதில்லை. இவர் ஜாட்டா... இஸ்லாமியரா... யாதவரா... இந்துவா எனப் பார்த்து வாக்களிப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகமா? எனது ஒரு வாக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது. நான் ஏன் அந்த ஆட்டுமந்தைக் கூட்டத்தில் போய் நிற்க வேண்டும்?'' என்று கூலாக பேட்டி கொடுத்தார் கட்ஜு.

பெண்களையும் கட்ஜு விட்டுவைத்ததில்லை. ''பெண்களால் பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் வீழ்ந்திருக்கின்றன. இளம் பெண்களின் உடல் அழகைப் பார்த்து விட்டில்பூச்சியாக விழுந்து எரிந்துபோகாதீர்கள்'' என்றும் இளைஞர்களுக்கு அறிவுரையும் கட்ஜுவிடமிருந்து கிடைத்திருக்கிறது.

கட்ஜு சமீபத்தில் ரஜினியைச் சீண்டியிருந்தார். ட்விட்டரில் அவர், ‛‛தென்னிந்தியர்கள் மீது எனக்கு மதிப்பு அதிகம். ஆனால், அவர்கள் நடிகை, நடிகர்கள் மீது முட்டாள்தனமான பக்தி வைத்திருப்பதுதான் எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏன் இப்படி சினிமா நட்சத்திரங்களை மிகைப்படுத்துகிறார்கள்? அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது, தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து சிவாஜி கணேசனின் படம் ஒன்றைப் பார்க்கச் சென்றேன். படத்தின் துவக்கத்தில், சிவாஜி கணேசனின் காலை மட்டும்தான் காட்டினார்கள். அதற்கே ரசிகர்கள் அரங்கையே அதிரவைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 

ரஜினிகாந்த் ரசிகர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் ஏன் முதல்வர் ஆக வேண்டும்... அவர் ஏன் ஜனாதிபதி ஆக வேண்டும்? வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பசி, பட்டினி. இதற்கெல்லாம் ரஜினியிடம் தீர்வு உள்ளதா? ரஜினியிடம் ஒன்றுக்கும் தீர்வு இல்லை என்று நினைக்கிறேன். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் மண்டையிலும் ஒன்றும் இல்லை’ என குறிப்பிட்டிருந்தார்




No comments:

Post a Comment

Air India cancels flights to New York and Newark

Air India cancels flights to New York and Newark Press Trust of India New Delhi  25.01.2026 Air India has cancelled its flights to New York ...