Thursday, March 1, 2018

தேர்வு பயம் தேவையில்லை!

DINAMALAR




பதிவு செய்த நாள் 25 பிப்  2018   00:00

தேர்வு என்பது, படித்தவற்றை எந்த அளவிற்கு நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்பதை சோதிப்பதற்காக நடத்தப்படுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்போதுதான், தேர்வு குறித்து, பயமோ, பதற்றமோ ஏற்படாது. அத்துடன், வகுப்பில் நடக்கும் மாதாந்திர தேர்வைப் போலவே, பொதுத் தேர்வையும் சாதாரண தேர்வாக நினைத்து, இயல்பாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன், புதிதாக எதையும் படிக்கக் கூடாது; அதற்கு முன்பே, அனைத்து பாடங்களையும் படித்து விடுங்கள். தேர்வுக்கு படிப்பதற்காக அட்டவணை தயாரிக்கும்போதே, இதை மனதில் வைத்து தயாரிப்பது முக்கியம். தேர்வுக்கு முந்தைய ஒரு வாரம், அதுவரை படித்த பாடங்களை மறுபடியும், 'ரிவைஸ்' செய்ய வேண்டும்; இது, உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்... உங்களால் முடியாதது எதுவுமே கிடையாது; ஆர்வமும், கடின உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் உங்களால் நிச்சயம் சாதிக்க முடியும்.
கணிதத்தை பொறுத்த மட்டில், மற்ற பாடங்களை போல், அதை மனப்பாடம் செய்ய முடியாது; புரிந்து படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெற முடியும். ஆனால், சமன்பாடுகள் மற்றும் சூத்திரங்களை மனப்பாடம் செய்துதான் ஆக வேண்டும். இவற்றை தனியாக நோட்டில் எழுதி வைத்து, மனப்பாடம் செய்ய வேண்டும். சந்தேகம் வரும் போதெல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை ஒப்பிட்டு பார்ப்பதற்கு, இக்குறிப்பு உதவும்.
இனி, தேர்வை எதிர் கொள்வதில் கவனம் செலுத்துங்கள்; துணிச்சல் வந்து, பயம் பறந்தோடி விடும்.
* தேர்வு அறைக்கு செல்வதற்கு முன், உங்கள் நண்பர்களில் சிலர், ஏதேதோ சொல்லி குழப்புவர். நீங்கள் படிக்காத ஒரு கேள்வி கேட்கப்பட இருப்பதாக கூறுவர். இதைக் கேட்டு, அவசர அவசரமாக அந்தக் கேள்விக்கான விடையை பதற்றத்துடன் படிப்போர் அதிகம். ஆனால், இது தவறானது; வீண் வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பதற்றத்தை அதிகரித்து கொள்ளாதீர்
* தேர்வு அறைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் படித்தவற்றை மட்டும் மனதில் அசை போடுதல் நல்லது
* ஹால் டிக்கெட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் எடுத்துச் செல்லும் பென்சில், பேனா வைக்கும் பாக்ஸ்சில் ஏதேனும் துண்டு சீட்டுகள் இருந்தால், அதை, உடனடியாக துாக்கி எறிந்து விடுங்கள்
* தேர்வு அறைக்கு சென்று, உரிய இடத்தில் அமர்ந்த பின், வினாத்தாளை வாங்கியதும், கவனமாக படியுங்கள்
* கேள்விகளின் எண்களை சரியாக எழுத வேண்டும். தவறாக எழுதினால், மதிப்பெண் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அதேபோல், விடைத் தாள்களின் பக்கங்களின் எண்களை சரியாக எழுதவும்
* விடைத்தாளில் அடித்தல், திருத்தல் இல்லாமல் இருக்க வேண்டும்; விடைத் தாளை சேதப்படுத்துதல் கூடாது
* விடைத்தாளில், மார்ஜின் விட்டு எழுத வேண்டும்
* விடைத்தாளின் முகப்பில், மறக்காமல் உரிய இடத்தில், உங்கள் கையெழுத்தை பதிவு செய்யுங்கள்
* ஒரு பக்கத்தில் குறைந்தது, 20 முதல் 25 வரிகள் எழுத வேண்டும்; இருபுறமும் கண்டிப்பாக எழுத வேண்டும்
* ஒரு கேள்விக்கான விடை எழுதி முடித்ததும், சற்று இடைவெளி விட்டு, அடுத்த கேள்விக்கான விடையை எழுதத் துவங்குங்கள்
* எழுதாத பக்கங்கள் இருந்தால், அவற்றின் குறுக்கே நீண்ட கோடு இடுவது அவசியம்
* கணிதத் தேர்வின்போது, விடைத்தாளின் கீழ் பகுதியில், கணக்கை செய்து பார்ப்பதற்கு ஒதுக்க வேண்டும்
* துணை தலைப்புகள் தெளிவாக தெரியும் விதத்தில், அடிக்கோடிட வேண்டும்
* வரை படத்தில், வண்ண நிறத்தாலான பென்சிலை பயன்படுத்துங்கள்
* கிராப் வரையும்போது, அளவுகளை மறக்காமல் குறியுங்கள்
* கண்காணிப்பாளரின் அனுமதியோடு, 'லாக்' புத்தகத்தை பயன்படுத்தலாம்
* சீக்கிரம் எழுதி முடித்துவிட்டால், உடனே கண்காணிப்பாளரிடம் கொடுத்துவிட்டு வெளியேறாமல், எழுதியவற்றை, நிதானமாக ஒருமுறை சரிபார்ப்பது நல்லது
* பத்து மாதங்களாக நீங்கள் உழைத்த உழைப்பை பரிசோதிப்பதற்காக, உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கால அளவு, இரண்டரை அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே!
இதை நினைவில் வைத்து, தெரிந்த வினாக்கள் என்னென்ன இருக்கிறதோ, அவற்றை முதலில் தேர்ந்தெடுத்து, பதில் எழுதுங்கள்
* ஒரு வினாவை தேர்வு செய்யும்போது, அதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை முன்கூட்டியே கணிப்பது மிக முக்கியம்
* பதில் எழுதும் போது, வார்த்தைக்கு வார்த்தை போதிய இடைவெளி விட்டு எழுத வேண்டும். அதேபோல், வரிக்கு வரி போதிய இடைவெளி விடுவது முக்கியம்
* கையெழுத்து தெளிவாக, அழகாக இருக்க வேண்டும்
* தேர்வு முடிந்ததும், நண்பர்களுடன் ஊர் சுற்றாமல், நேராக வீட்டிற்கு சென்று, நன்றாக ஓய்வெடுத்து, பின், அடுத்த தேர்வுக்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.
இதையெல்லாம் கடைப்பிடித்தால், வெற்றி நிச்சயம்!

ஆ.ஜெயசூரியன்

No comments:

Post a Comment

Vande Bharat Sleeper ticket cancellation to be costly affair Indian Railways has introduced stricter cancellation charges for its new Vande Bharat Sleeper trains.

Jan 19, 2026, 2:19 IST Vande Bharat Sleeper ticket cancellation to be costly affair Indian Railways has introduced stricter cancellation cha...