Sunday, June 17, 2018

தொழில் தொடங்கலாம் வாங்க! - 11: யாரைக் கண்டும் பயப்பட வேண்டாம்!

Published : 18 Apr 2017 11:09 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்



எதுவும் எழுத்து மூலம் இருக்க வேண்டும் என்று சொல்வது சட்டரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் மிக அவசியம்.

வெற்றிக்கான வழிமுறைகளில் ஒன்று உங்கள் இலக்கை எழுத்துக்களாய், எண்களாய் எழுதிவைப்பது. அதையும் ரகசியமாக வைக்காமல் வெளிப்படையாக்குங்கள். சுவரில் தொங்க விடுங்கள். வீட்டிலும் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். எண்ணத் தெளிவு வரும். வைராக்கியம் வரும். உங்களுக்கு இலக்கு நோக்கி நகரத் தேவையான ஊக்கம் கிடைக்கும்.

தொடர்ந்து கவனம் செலுத்த…

மாணவர்கள் முதல் நிறுவனங்கள் வரை பின்பற்றுகின்ற உத்தி இது. 490 / 500 மதிப்பெண்கள் என்று எழுதிப் படிக்கும் மேஜை மேல் ஒட்டி வைத்தால் அது படிக்க உட்காரும்போதெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். பல உற்பத்தி நிறுவனங்கள் தரத்துக்கு, உற்பத்திக்கு என்று ஒரு இலக்கை நிர்ணயித்து அதைப் பணியிடமெல்லாம் ஒட்டி வைத்திருப்பார்கள். அது அங்குள்ள அனைவரையும் ஊக்கமாகப் பணி செய்ய வைக்கும். விற்பனைத் துறையிலும் இதைப் பின்பற்றுவார்கள்.

நிதியாண்டு தொடக்கத்தில் ஒரு இலக்கை நிர்ணயித்து அதை மந்திரம் போல ஜெபிக்கத் தொடங்குவார்கள் வருடம் முழுவதும். ஒவ்வொரு மீட்டிங்கிலும் இது அலசப்படும். நினைவூட்டப்படும். சற்றுப் பதற்றம் அளித்தாலும் மனதை இலக்கில் தொடர்ந்து கவனம் செலுத்த இத்தகைய உத்திகள் பயன்படும்.

ஒரு ஐடியா கொடுங்கள் சார்!

இதை ஒவ்வொரு தொழில் முனைவோரும் பயன்படுத்தலாம். தொழில் தொடங்கும் முன்னரே தெளிவு பெற உங்கள் திட்டத்தை முதலில் எழுதிப் பாருங்கள். எப்படி எழுதுவது என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். ஒரு கதைபோலக்கூட எல்லாவற்றையும் விவரமாக எழுதுங்கள். பின் உங்கள் நெருங்கிய வட்டத்திடம் கொடுத்துப் படிக்கச் சொன்னாலே அவர்கள் சில தகவல்கள் இல்லாததைச் சுட்டிக் காட்டுவார்கள். ஓரளவு எல்லாத் தகவல்களும் வந்த பின் இதைச் சுருக்கி ஒரு பக்கத்தில் எழுத முடியுமா என்று பாருங்கள்.

என்னிடம் தொழில் பற்றி ஆலோசனை கேட்டு வரும் பல கேள்விகள் மிகவும் மேம்போக்காக வரும். “ நான் நாகப்பட்டினத்தில் இருக்கிறேன். என்ன தொழில் செய்யலாம்?” “மெயின் ரோட்டில் இடம் உள்ளது. என்ன செய்யலாம்? “வேலையில் நாட்டமில்லை. தொழில் பண்ண ஒரு ஐடியா கொடுங்கள் சார்!” “கோடி ரூபாய் வருமானம் வரும் தொழில்கள் என்னென்ன?” இவை அனைத்தும் தொழிலைப் பரிசீலிக்கும் ஆரம்ப நிலை எண்ணங்கள். இதற்கு ஆலோசனை சொல்வது கடினம்.

“இந்தத் தொழில், இவ்வளவு முதலீடு, இது என் அனுபவம், இந்தச் சந்தையில் இப்படிச் செய்யலாமா?” என்று எழுதினால் ஓரளவு தொழில் பற்றி யோசித்திருக்கிறார்கள் என்று புலப்படும். பின் ஒரு நல்ல தொழில் திட்டம் எழுதவைத்தால் அவர்களுக்குத் தொழில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

ஆலோசனை கேளுங்கள்

எழுதாமல் பேசிக்கொண்டே இருந்தால் தினம் ஒரு புது எண்ணம் வரும். யாருக்குமே முதலில் பல தொழில் எண்ணங்கள் வருவது இயற்கை. பல தொழில்களைப் பரிசீலிப்பதும் நியாயமானதுதான். ஆனால் ஒரு கால கட்டத்தில்

“இதுதான் உகந்தது” என்று ஒன்றை முடிவு செய்து தொழில் திட்டம் எழுதுவது நல்லது. எழுதும் போதுதான் உங்களுக்குப் பல கேள்விகள் வரும். படிப்பவர்களுக்கும் பல கேள்விகள் வரும். தொடர்ந்து அந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடுவதும், திட்டத்தை மெருகேற்றுவதும் நடக்கும்.

உங்கள் திட்டத்தை மற்றவர்களிடம் படிக்கக் கொடுத்து ஆலோசனை கேளுங்கள். அவர்கள் நிபுணர்களாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் எதிர்மறை உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் பயப்படாதீர்கள். அவர்கள் சொல்கிற விஷயம் தர்க்கரீதியாக உள்ளதா என்று மட்டும் பாருங்கள். யாரைக் கண்டும் பயப்பட வேண்டாம். யாரையும் உதாசீனப்படுத்தவும் வேண்டாம். உங்கள் ஐடியா களவு போய்விடும் என்று பயப்படாதீர்கள். அப்படி ஒரு மனிதராக இருந்தால் அவர் இந்நேரம் பெரிய தொழிலதிபராக ஆகியிருப்பார். அப்படிக் களவு கொள்ளத் தக்க தொழில் திட்டம் ஒன்று கையில் இருந்தால் அதை விடச் சிறப்பான இன்னொரு தொழில் திட்டத்தையும் உங்களால் உருவாக்க முடியும். அதனால் கவலை வேண்டாம்.

சட்ட உதவியை நாடலாம்

“எனக்கு நம்பிக்கை இல்லை சார். ஆரம்பிக்கும்வரை யாரிடமும் சொல்ல மாட்டேன்!” என்கிறீர்களா? நீங்கள் தொழில் முறை ஆலோசகர்களிடம் செல்லலாம். “அவர்களும் என் ஐடியாவை யாருக்காவது விற்றுவிட்டால்?” அதற்கும் வழி உள்ளது. பெரிய நிறுவனங்கள் Non Disclosure Agreement என்ற ஒன்றில் கண்டிப்பாக ஆலோசகர்களிடம் கையெழுத்து வாங்குவார்கள். நீங்களும் அப்படி ஒன்றை (சட்ட உதவியுடன்) தயார் செய்து, அதை ஆலோசனையின்போது ‘இந்தத் தொழில் திட்டம் சம்பந்தப்பட்ட எந்தத் தகவலும் என் மூலம் வெளியே போகாது என்று உறுதியளிக்கிறேன்’ என வாங்கிக்கொள்ளலாம்.

ஆலோசனை பெறுவதன் நோக்கம் உங்கள் தொழில் திட்டத்தைத் திடமானதாக ஆக்குவது. சரி, எழுதலாம். அதற்கான படிவம் என்று ஏதாவது உண்டா? உண்டு. ஆனால் அதற்கு முன் ஒரு பால பாடம். உங்கள் ஒரு பக்கத் திட்டத்தில் இந்த 7 கேள்விகளுக்குப் பதில் உள்ளதா என்று பாருங்கள்.

என்ன? (What?)

ஏன்? (Why?)

யார்?/ யாருக்கு? (Who?/ Whom?)

எப்போது? (When?)

எங்கு? (Where?)

எப்படி? (How?)

என்ன கணக்கு? (How much?)

5W2H என்ற இந்தச் சின்னச் சூத்திரத்தை வைத்துக்கொண்டு ஒரு பக்கத் தொழில் திட்டம் தயார் செய்யுங்கள். பின் விரிவான திட்டம் தீட்டலாம்!


தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...