Sunday, June 17, 2018

தகவல் அனுப்ப வாட்ஸ்அப்பை நம்பும் வங்கிகள்... முடிவுக்கு வருகிறதா SMS காலம்?

ஞா.சுதாகர்


எஸ்.எம்.எஸ் பூஸ்டர்கள் போட்டு, நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிய காலம் கிட்டத்தட்ட முடிந்தேவிட்டது. முதலில் நாளொன்றுக்கு 100 குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்த நாம் இன்று, ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு அனுப்புவதே அரிதாகிவிட்டது. ஆனாலும்கூட, இன்றும் நம் மொபைல் இன்பாக்ஸ் காலியாக இருப்பதில்லை. கால் டாக்ஸி கம்பெனியில் இருந்து வங்கிகள் வரைக்கும் எல்லா நிறுவனங்களின் குறுஞ்செய்திகளும் அங்குதான் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. சின்னச் சின்ன OTP-யில் இருந்து முக்கியமான தகவல்கள் வரைக்கும் அத்தனையும் இன்பாக்ஸிற்குத்தான் வருகின்றன. இந்த ட்ரெண்டை சில மாதங்களுக்கு முன்னர் கொஞ்சம் மாற்றியமைத்தது வாட்ஸ்அப். அந்நிறுவனம் புதிதாக தொடங்கிய வாட்ஸ்அப் பிசினஸ் என்ற வசதியின்மூலம், சேவை நிறுவனங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை வாட்ஸ்அப்பிற்கு அனுப்பவைத்தது. புக்மைஷோ, மேக்மை ட்ரிப் போன்ற நிறுவனங்கள் வாட்ஸ்அப் பிசினஸ் சேவையைத்தான் குறுஞ்செய்திகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துகின்றன. தற்போது அந்தப் பட்டியலில் வங்கிகளும் இணையவிருக்கின்றன.

வங்கிகளில் இருந்து நாம் பணம் எடுக்கும்போதோ, பணம் போடும்போதோ அதை உறுதிப்படுத்தும்விதமாக நம் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும். தற்போது இந்தக் குறுஞ்செய்திகளுக்கு மாற்றாக, வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளன சில வங்கிகள். எஸ்.பி.ஐ., ஆக்சிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ, கோடக் மஹிந்திரா, இண்டஸ்இண்ட் ஆகிய வங்கிகள் இந்த முயற்சியில் இறங்கியுள்ளன.



எந்த மாதிரியான குறுஞ்செய்திகள் அனுப்பப்படும்?

வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் சேவை வழங்க வேண்டும் எனில், வாட்ஸ்அப் பிசினஸ்தான் இப்போதைக்கு ஒரே வழி. இதன்மூலம் வங்கிகளுடன் இணைந்திருக்கும் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணுக்கு வங்கிகளால் வாட்ஸ்அப் செய்யமுடியும். வங்கிகளின் Verified வாட்ஸ்அப் கணக்கை வாடிக்கையாளர்களும் பதிவு செய்துவைத்துக்கொள்ளலாம். இப்போதைக்கு சில குறிப்பிட்ட சேவைகளை மட்டும்தான் வங்கிகள் பரிசோதித்து வருகின்றன. ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் விவரங்கள், பிற டெபிட் /கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் போன்ற தகவல்கள் மட்டும் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பப்படும். இப்போதைக்கு கோடக் மஹிந்திரா மற்றும் இண்டஸ்இண்ட் ஆகிய இருவங்கிகள் மட்டும்தான் சோதனை முறையில் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் சேவைகளை அனுப்பத்தொடங்கியுள்ளன. எஸ்.பி.ஐ, ஆக்சிஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகள் இன்னும் களத்தில் இறங்கவில்லை.

குறுஞ்செய்திகள் அவ்வளவுதானா?

குறுஞ்செய்திகளோடு மட்டுமின்றி, வாட்ஸ்அப்பிலும் வங்கிகள் செய்திகளை அனுப்ப முடிவெடுத்திருப்பதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, வாடிக்கையாளர்களின் வசதி. இன்று வங்கிகளின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இணைய வசதியுடனும், தினசரி வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களாகவும் இருக்கின்றனர். எனவே, செய்திகளை வாட்ஸ்அப்பிலேயே அனுப்புவது மிகுந்த பயனுள்ளதாக அமையும். இரண்டாவது, செலவு. தற்போது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்புவதற்கு ஆகும் செலவைவிடவும், வாட்ஸ்அப் செய்ய குறைவான செலவே ஆகும். மேலும், குறுஞ்செய்தி மூலமாக இருவழி தகவல் தொடர்பு என்பது கடினம். ஆனால், வாட்ஸ்அப்பில் வங்கிகளும், வாடிக்கையாளர்களும் எளிதாக உரையாட முடியும். இதன்மூலம் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள் மட்டுமின்றி, கூடுதலான வங்கி சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கமுடியும்.



 உதாரணமாக, அக்கவுன்ட் பேலன்ஸ் செக் செய்வது, வங்கிக்கணக்குகளில் தகவல்களை அப்டேட் செய்வது, புகார்களைப் பதிவு செய்வது போன்ற சேவைகளை வாட்ஸ்அப் மூலம் எளிதாக வழங்கிவிடலாம். எனவே, வங்கிகளின் இந்த வாட்ஸ்அப் என்ட்ரி வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் என இருவருக்குமே பயனளிக்கக்கூடியதுதான். ஆனால், இந்த முயற்சியால் தற்போது வங்கிகள் நமக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளில் எந்த மாற்றமும் இருக்காது. காரணம், வங்கி பரிவர்த்தனைகள் குறித்து எஸ்.எம்.எஸ் மூலம் வாடிக்கையாளர்களை அலர்ட் செய்ய வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதி. அதில் மாற்றங்கள் வரும்வரைக்கும் இப்போதைய நடைமுறையும் அப்படியே தொடரும்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...