Saturday, April 22, 2017

தலையங்கம்
‘ஆமாம் சாமி’ போடாதீர்கள்


ஏப்ரல் 22, 02:00 AM

‘ஜனநாயகம் என்ற மாளிகை’ சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம், பத்திரிகை ஆகிய 4 தூண்களால்தான் தாங்கப்படுகிறது. ஒவ்வொரு அமைப்பும் தனித்தனி அங்க மாக தனக்குரிய தனித்துவத்துடன் செயல்படுகிறது என்றாலும், சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களா னாலும் சரி, நீதிமன்றங்களில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளா னாலும் சரி, பத்திரிகைகள் தரும் ஆலோசனைக ளானாலும் சரி, அவற்றை செயல்படுத்த வேண்டிய மாபெரும் பொறுப்பு நிர்வாகத்திடம்தான் இருக்கிறது. அதனால்தான், சர்தார் வல்லபாய் பட்டேல், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அகில இந்திய பணிகளான சிவில் சர்வீசஸ் பணிகளை இரும்புச் சட்டம் என்று வர்ணித்தார். பல நேரங்களில் அரசு ஊழியர்களும், அதிகாரவர்க்கங்களும், அரசியல்வாதிகளின் சட்டத்துக்கு புறம்பான ஆணைகளுக்கு அடிபணிந்து செல்வதால்தான் நிர்வாகத்தில் பல கோளாறுகள் ஏற்படுகின்றன. ஊழலுக்கு வித்திடுகின்றன.

இந்திய குடிமைப்பணிகள் தினம் என்று அழைக்கப் படும் சிவில் சர்வீசஸ் தினத்தில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, ‘சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு ‘‘ஆமாம் சாமி’’ போடுபவர்களாக அதாவது, ‘யெஸ் மேன்’களாக இருக்கக்கூடாது. அரசியல் வாதிகள் ஏதாவது தவறான உத்தரவுகளை பிறப்பித்தால், தைரியமாக அதை செய்யமுடியாது என்று கூறி, அதற்கான விதிகளை எடுத்துக்காட்டுங்கள். உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக செயல்படாதீர்கள். அரசியல்வர்க்கம் தவறு இழைக்கும்போது, அவர்கள் தவறை சட்டப்பூர்வமாக தவறு என்று சுட்டிக்காட்டி, அந்த கோப்புகளில் கையெழுத்து போடாதீர்கள். அரசின் பொதுவான நலனையும்,
ஏழை மக்களின் நலனையும் மனதில் வைத்துக் கொண்டு எந்த முடிவையும் எடுப்பதில் தயக்கம் காட்டாதீர்கள். பாரபட்சம் இல்லாமல், உங்களுக்கு ‘பொறுப்பு கடமை’ இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள்’ என்று அறிவுரை கூறினார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற இந்திய ஆட்சிப்பணிகள் அதிகாரிகள் எப்படி செயல்படு கிறார்களோ, அதை பின்பற்றித்தான் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் தங்கள் பணியை ஆற்று வார்கள். பல அதிகாரிகள் தாங்கள் நேர்மையாக இருக்கும் போது, திறமையாக இருக்கும்போது, முதல்–அமைச்சரோ, அமைச்சர்களோ மற்றும் அரசியல் ரீதியான தலைவர்களோ சொல்வதற்கெல்லாம் ‘ஆமாம் சாமி’ போடாமல் தைரியமாக பணியாற்றிய பல உதாரணங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது.

பெருந்தலைவர் காமராஜர் முதல்–அமைச்சராக இருந்தபோது, திருநெல்வேலியில் ஒரு காங்கிரஸ்காரரின் சினிமா தியேட்டரை காலையில் திறந்தார். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த பசுபதி இதை சற்று நேரத்துக்கு முன்பு காமராஜரின் கவனத்துக்கு கொண்டு சென்று, ‘ஐயா இந்த தியேட்டரில் சில அடிப்படை வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை’ என்று மிக துணிச்சலோடு தெரிவித்தார். உடனே காமராஜர், ‘நான் திறந்து வைக்கிறேன்; நீங்கள், உங்கள் கடமையைச் செய்யுங்கள்’ என்று கூறினார். அதன்படி காமராஜர் காலையில் தியேட்டரை திறந்து வைத்தார். அடுத்த சில மணி நேரத்தில் மாவட்ட கலெக்டர் பசுபதி அந்த தியேட்டருக்கு ‘சீல்’ வைத்தார். இப்படிப்பட்ட முன்உதாரணங்களை இப்போதுள்ள சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் பின்பற்றினால், காலம்காலமாக அந்த அதிகாரிகளின் பணி மக்களால் போற்றப்படும், பின்பற்றப்படும். நேர்மையும், துணிச்சலும், ஊழலும் இல்லாதவகையில், உயர் அதிகாரிகள் செயல்பட வேண்டும். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கேப்டன் நாகராஜன் எப்போதும் சொல்வதுபோல, ‘ஆளும்வர்க்கம் சொல்வதையெல்லாம் கேட்கவில்லை என்று இடமாறுதல் செய்தாலும், அவர்களுக்கு பின்னால் இருக்கிற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அடைமொழிகளை அவர்களைவிட்டு யாராலும் எடுக்க முடியாது. உச்சகட்டமாக ஒரு பணியி லிருந்து இன்னொரு பணிக்குத்தான் மாற்ற முடியுமேதவிர, வேறு எதுவும் செய்யமுடியாது. தவறுக்கு துணை போக மாட்டோம்’ என்ற உறுதியை அனைத்து சிவில் சர்வீசஸ் அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டால், நிர்வாகம் தூய்மையாக இருக்கும், வேகமாக செயல்படும்.

No comments:

Post a Comment

NEET PG cut-off slashed to 7th percentile for general category

NEET PG cut-off slashed to 7th percentile for general category  IN GUJARAT, 642 SEATS VACANT  TIMES NEWS NETWORK  14.01.2026 Ahmedabad : Aft...