Sunday, April 16, 2017

மருத்துவ நுழைவுத்தேர்வு கட்டாயம்; சென்னையில் மத்திய மந்திரி திட்டவட்ட அறிவிப்பு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேருவதற்கு ‘நீட்’ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (பொது நுழைவுத்தேர்வு), இந்த ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16, 05:45 AM

சென்னை,

மருத்துவ நுழைவுத்தேர்வு கட்டாயம்; சென்னையில் மத்திய மந்திரி திட்டவட்ட அறிவிப்பு


மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் இந்த ‘நீட்’ தேர்வு அடுத்த மாதம் 7–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.

ஆனால், இந்த தேர்வுக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது என அனைத்து அரசியல் கட்சிகளும் கூறி போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

இந்த பொது நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு வழங்கக் கோரி தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலை பெறுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன.நுழைவுத்தேர்வு கட்டாயம்

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, டெல்லியில் இருந்து நேற்று சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (‘நீட்’) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும் இந்த தேர்வுகளை நடத்த வேண்டும், தமிழ்நாட்டிலும் அதை நடத்த வேண்டும் என்று நாங்கள் தெளிவுபடுத்தி விட்டோம்.

கிராமப்புற மாணவ, மாணவிகள் இந்த தேர்வு எழுதுவதற்கு சிரமப்படுவார்கள் என்று தமிழக அரசு கருதுகிறது.கிராமப்புற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு

அதற்காகத்தான், மாநில கல்வி திட்டத்தின்கீழ் (பிளஸ்–2) படித்த மாணவர்களும், கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்களும் மருத்துவ படிப்பு படிப்பதற்கு ஏதுவாக தங்களது மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீட்டு கொள்கையின்படி இடஒதுக்கீடு வழங்குவதற்கு முழு சுதந்திரம் உண்டு; அதன்படி அவர்கள் கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு செய்து கொள்ளலாம் என்று அவர்களிடம் (தமிழக அரசிடம்) கூறி இருக்கிறேன்.

இடஒதுக்கீடு என்பது மாநில அரசின் திட்டம் என்ற வகையில், இந்த ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டியது தமிழக அரசை சேர்ந்தது ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.விதிவிலக்கு கிடையாது

‘‘இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படுமா?’’ என்று மத்திய மந்திரி ஜே.பி.நட்டாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், ‘‘இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்பதை கடந்த ஆண்டே நாங்கள் கூறி, தெளிவுபடுத்தி விட்டோம்’’ என்று பதில் அளித்தார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்துகளுக்காக வந்துள்ளன. நீட் என்பது நாடு முழுவதும் ஒரே ரீதியிலான தகுதி தேர்வு, இது நல்ல பலன்களை தரும், நாம் அதில் தொடர்ந்து முன்செல்லவேண்டும் என்று கூறிவிட்டோம்’’ என்று குறிப்பிட்டார்.

இதன் மூலம் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு கிடையாது என்பதை அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.தடை இல்லை

இந்த நீட் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்தி, முடிவுகளை அறிவித்து, அகில இந்திய அளவில் மாணவர்களின் தர வரிசை பட்டியலை (ரேங்க் பட்டியல்) மத்திய அரசின் பொது சுகாதாரப்பணிகள் இயக்குனரகத்துக்கு வழங்கும். அதை வைத்து தனது தரப்பிலான 15 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு கவுன்சிலிங் நடத்தும். மற்றபடி மாநில வாரியான முடிவுகளை மாநிலங்களுக்கு சி.பி.எஸ்.இ. அனுப்பி வைக்கும்.

எனவே தமிழ்நாட்டில் கிராமப்புற மாணவர்களுக்கு, குறிப்பாக மாநில கல்வி திட்டத்தின்கீழ் பிளஸ்–2 படித்த மாணவ, மாணவிகளுக்கு மாநில அரசு சிறப்பு இட ஒதுக்கீட்டை வழங்க தடை ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...