Sunday, April 2, 2017

கல்யாண வரம் தருவார்.மாடம்பாக்கம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர்!

வழக்கம்போலவே அன்றைக்கும் அந்தப் பசு பால் கறக்கவில்லை. மடி வற்றிக் கிடந்தது கண்டு அதன் எஜமானனுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. கோபத்தில், அருகில் இருந்த ஒரு கழியை எடுத்துப் பசுவின் மடியிலேயே அடித்தான். வலி பொறுக்காத பசு ஓடத் துவங்கியது. ஓரிடத்தில் அதன் கால் குளம்பு எதன் மீதோ பட்டு இடற, அங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது. பசு ஒரு முனிவராக உருமாறி நின்றது.

பசுவின் கால் குளம்பை இடறச் செய்தது ஒரு சிறிய சிவலிங்கம்தான். இருகரம் கூப்பி அந்தச் சிவ லிங்கத்தை வணங்கி நின்றார் அந்த மகரிஷி. முன்னொரு காலத்தில் சிவபூஜை செய்துகொண்டிருந்த கபில முனிவர், தன்னையும் அறியாமல் ஏதோ யோசனையில் இடக்கையால் ஈஸ்வரனுக்கு தீபாராதனை செய்துவிட, சிவநிந்தை செய்த தோஷத்துக்கு ஆளானார்.
அதன் விளைவாக, பசுவாகப் பிறப்பெடுத்தார். அந்தப் பசு, மேய்ச்சல் நிலத்துக்கு அருகில் சுயம்புவாகத் தோன்றியிருந்த சிவலிங்கத்தின் மீது தினமும் பாலைச் சொரிந்து வழிபட்டு வந்தது. அதன் காரணமாகவே ஒவ்வொரு நாளும் வற்றிய மடியுடன் வீடு திரும்பியது. சிவலிங்கத்தை வழிபட்டதற்கான பலன் இப்போது கிடைத்துவிட்டது. பாவ விமோசனம் பெற்று மீண்டும் தன் சுய உருவை அடைந்தார் கபில மகரிஷி.
பின்னாளில், இறை அனுக்கிரகத்தால் இந்த அற்புதச் சம்பவங்களை எல்லாம் கனவின் மூலம் கண்டு உணர்ந்தான் சோழ மன்னன் ஒருவன். அற்புதமான அந்தச் சிவலிங்கம் ஏரிக்குள் இருப்பதை அறிந்து, லிங்கத் திருமேனியை வெளியில் எடுத்து, ஆலயம் அமைத்தான். அதுவே மாடம்பாக்கம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயம்.

கபில ரிஷி மட்டுமல்ல, அகத்தியரால் சபிக்கப்பட்ட தேவேந்திரனும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டு விமோசனம் பெற்றதாகச் சொல்கிறது தலபுராணம்.

சென்னை தாம்பரம்- வேளச்சேரி செல்லும் சாலையில் ராஜகீழ்ப்பாக்கம் சிக்னலில் இருந்து சுமார் மூன்றரை கி.மீ. தூரத்தில் உள்ளது மாடம்பாக்கம். இங்கே சோழர் காலக் கட்டுமானத்துடன் அமைந்துள்ளது ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயம்.

தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆலயம். இந்த ஆலயத்தில், சிறிய அளவில் பசுவின் கொம்பு வடிவில் திகழும் லிங்கத் திருமேனி போன்று வேறெங்கும் காண்பதரிது என்கிறார்கள். இந்தச் சிவாலயத்தில் பங்குனி உத்திர விழா விசேஷம்! இந்த விழாவின் போது நிகழும் திருக்கல்யாணம் மற்றும் தெப்போத்ஸவத்தைக் காணப் பெருங்கூட்டம் கூடும். திருமணத் தடை உள்ளவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு இதயச் சுத்தியோடு ஸ்வாமி- அம்பாளைத் தரிசித்து வழிபட, விரைவில் இல்லத்தில் கெட்டிமேளம் கொட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
Dailyhunt

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...