சசிகலா விரும்பினால், அவர் பரோலில் வருவதற்கான ஏற்பாடு செய்யப்படும்' என்று அ.தி.மு.க அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
அ.தி.மு.க அம்மா கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன், இன்று காலை கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் கோயிலுக்குச் சென்றார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். அவரது உடல், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகாதேவனின் தாய்மாமன் டி.டி.வி.தினகரன், தஞ்சாவூர் விரைந்துள்ளார். மருத்துவமனையில் உள்ள மகாதேவன் உடலுக்கு அவர் அஞ்சலிசெலுத்த உள்ளார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரனிடம், மகாதேவன் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா வருவாரா என்று கேட்டனர். அதற்குப் பதில் அளித்த அவர், 'சசிகலா விரும்பினால் அவர் பரோலில் வருவதற்கான ஏற்பாடு செய்யப்படும்'. மகாதேவன் மரணம் குறித்து சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
No comments:
Post a Comment