அமைச்சர்கள் மீது சாதாரண வழக்கு வருமான வரித்துறை கடும் அதிருப்தி
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்திய போது, அத்துமீறி நுழைந்து, ஆவணங்களை பறித்து செல்ல முயன்ற அமைச்சர்கள் மீது, சாதாரண பிரிவில், போலீசார் வழக்கு தொடர்ந்திருப்பது, வருமான வரித்துறையினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ச.ம.க., தலைவர் சரத்குமார் வீடுகளில், 7ம் தேதி, வருமான வரித்துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர். தகவலறிந்து,
அமைச்சர்கள் காமராஜ், ராதாகிருஷ்ணன், ராஜு, டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர், அங்கு விரைந்தனர்.
அவர்களை, பாதுகாப்பு பணியில் இருந்த, மத்திய படையினர் தடுத்தனர். எதிர்ப்பை மீறி,அமைச்சர்கள் உள்ளே நுழைந்தனர். அங்கு, சோதனையில் ஈடுபட்ட, வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியதோடு, ஆவணங்களை அழிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பை மீறி, அத்துமீறி உள்ளே நுழைந்தது; பணி செய்ய விடாமல் தடுத்தது; ஆவணங்களை அழிக்க முயன்றது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள், சென்னை போலீஸ் கமிஷனர், கரண் சின்ஹாவிடம், 12ம் தேதி புகார் அளித்தனர்.புகார் அடிப்படையில், அபிராம புரம்போலீசார், அமைச்சர்கள் மீது, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நான்கு பிரிவுகளிலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிறை தண்டனை இருந்தாலும், அபராதம் மட்டும்
செலுத்தி, விடுதலையாகவாய்ப்பு உள்ளது. மேலும், அவர்கள் எளிதாக முன்ஜாமின் பெற முடியும்.மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர்களே, சட்டத்தை மீறி, அதிகாரிகளுக்கு இடையூறு செய்த நிலையில், அவர்கள் மீது, சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்தது, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. - நமது நிருபர் -
No comments:
Post a Comment