Saturday, April 22, 2017

உங்கள் மொபைல் பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும்? #MobileTips
கார்க்கிபவா





மொபைல்போன் மலிவாகிவிட்டது. ஆனால், அதன் உதிரிபாகங்கள் விலை குறைவதே இல்லை. டச் ஸ்க்ரீன் மாற்ற நேர்ந்தால், மொபைல் விலையில் பாதியை கேட்கிறார்கள். போலவே, பேட்டரியை மாற்றுவதென்றாலும் அதிக பணத்தை கொடுக்க வேண்டியிருக்கிறது. பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும், என்ன காரணங்களால் பேட்டரி செயலிழக்கும் என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.

1) அடிப்படையான விஷயத்தில் இருந்தே தொடங்குவோம். நீண்ட நேரம் சார்ஜில் இருந்த பின்னும் மொபைல் ஆன் ஆகவே இல்லையென்றால், பேட்டரி கதை முடிந்தது என அர்த்தம். புது பேட்டரி மாற்றுவதற்கு முன் அதே மாடல் பேட்டரி கிடைத்தால் போட்டு செக் செய்யலாம். விலை மலிவு என்பதற்காக போலி பேட்டரிகளை வாங்க வேண்டாம். அது நன்றாக இருக்கும் மொபைலையும் சேர்த்து கெடுத்துவிடும்.

2) சில பேட்டரிகள் வலுவிழுந்த யானையை போன்றது. தனக்குள் சக்தியை ஸ்டோர் செய்து, அதிலிருந்து மொபைலுக்கு அனுப்பும் திறனை இழந்திருக்கும். சார்ஜ் போட்டால், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மொபைல் இயங்கும். சார்ஜில் இருந்து எடுத்த உடன் மொபைல் ஆஃப் ஆகிவிடும். இந்த பேட்டரியை உடனே மாற்ற வேண்டும். ஆபத்துக்கு உதவுவதாக எப்போதும் சார்ஜிலே போட்டு பயன்படுத்தினால், அது மொபைலையே வீணடித்துவிடும்.

3) அனைத்து ரீசார்ஜபிள் பேட்டரிகளும் சூடாகும். ஆனால், அந்த சூடு வெளியே தெரியாத அளவுக்கு தயாரிக்கப்படும். அதையும் மீறி, பேட்டரி சூடானால் அதன் வாழ்நாள் முடிவை நெருங்குகிறது எனப் பொருள். அதே சமயம், எப்போது சூடாகிறது என்பதை கவனிக்கவும். நீங்கள் அதிக நேரம் வெயிலில் சுற்றினால், அதனால் கூட மொபைல் சூடாகலாம். காரில் சென்றால் கூட வெயில் படும் இடத்தில் மொபைல் நீண்ட நேரம் இருந்தால் சூடாகும்.

4) பேட்டரி குண்டாகும். நோக்கியா 3310 காலங்களில் இது அதிகம் நடந்தது. காரணம், இரவு முழுவதும் சார்ஜில் போட்டு வைத்ததே. இப்போது வரும் சார்ஜர்கள், மொபைல் 100% சார்ஜ் ஆனதும் தானாக ஆஃப் ஆகிவிடும் என்பதால், பேட்டரிக்கு அந்தப் பிரச்னை இருப்பதில்லை. ஆனாலும், வேறு சில காரணங்களால் பேட்டரி குண்டாகலாம். இப்போது பெரும்பாலான மொபைல்களில் பேட்டரியை தனியே எடுக்க முடியாது. அதனால் பேட்டரி உருமாறியிருக்கிறதா என்பதை ஸ்பின் டெஸ்ட் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஸ்பின் டெஸ்ட் என்றதும் பெரிய விஷயம் என நினைக்க வேண்டாம். சமதளத்தில், பேட்டரி இருக்கும் திசை கீழிருக்கும் படி மொபைலை வைக்கவும். இப்போது மொபைலை பம்பரம் போல சுற்றிவிட்டால், குண்டான பேட்டரி சுற்றும்.



5) ஆண்ட்ராய்டு யூஸர்கள் *#*#4636#*# என்ற எண்ணை டயல் செய்யலாம். உங்கள் பேட்டரியின் தற்போதைய மெடிக்கல் ரிப்போர்ட்டை அது சொல்லிவிடும்.

6) சில பேட்டரிகள் நன்றாக சார்ஜ் ஏறும், 50% குறையும் வரை பிரச்னை இருக்காது. ஆனால், அதன் பின் சில நிமிடங்களிலே மொத்த சார்ஜும் குறைந்து மொபைல் ஆஃப் ஆகிவிடும். இதுவும், பேட்டரியின் பிரச்னைதான். இப்படி, சக்தி சீராக ஏறி இறங்காமல் இருந்தால் அந்த பேட்டரியையும் மாற்றி விடுவது நல்லது.

பேட்டரியை மாற்றும்போது முடிந்தவரை அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டரில் கொடுத்து மாற்றுவது நல்லது. ஏனெனில், சில சமயம் மொபைல் பிரச்னையை நாம் பேட்டரி பிரச்னை என எண்ணி விடலாம். சர்வீஸ் சென்டரில் அதை சோதித்து சொல்லிவிடுவார்கள்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...