Sunday, May 7, 2017

பணிக்கு திரும்பாத அரசு டாக்டர்கள்சட்டப்படி நடவடிக்கைக்கு கோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள் 06 மே2017 22:53

சென்னை 'பணிக்கு வராத அரசு டாக்டர்கள் மீது, சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.அரசு டாக்டர்கள், போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் வேலன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, 'போராட்டத்தை கைவிட்டு, டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்; இல்லையென்றால், சட்டப்படியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:

டாக்டர்களை, கடவுளின் பிரதிநிதியாக, மக்கள் கருதுகின்றனர். நீங்களே போராட்டத்தை தொடர்ந்து நடத்தினால், ஏழை, எளிய மக்கள் எங்கு செல்வர்?
அரசு டாக்டர் ஒருவர், தன் வேலை நேரம் முடிந்து விட்டது; அடுத்த டாக்டர் பணிக்கு வரும் போது, அவரை அணுகும்படி, ஒரு நோயாளியிடம் கூறியுள்ளார். ஒரு டாக்டர், இவ்வாறு கூறுவது முறை தானா?
உங்கள் போராட்டம், காந்திய வழியில் இருக்க வேண்டும். அறுவை சிகிச்சைகளை தள்ளி வைக்கக்கூடாது. உங்கள் போராட்டம், எந்த வகையிலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதையோ, அறுவை சிகிச்சை மேற்கொள்வதையோ பாதிக்கக்கூடாது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு பிளீடர் ராஜகோபாலன், ''இந்தப் பிரச்னையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என, நாங்கள் நேர்மையாக முயற்சிக்கிறோம்,'' என்றார்.

இதையடுத்து, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் தாக்கல் செய்த மனுவில், நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லாமல் போராடுவதாக கூறப்பட்டுள்ளது. எந்த பிரச்னையும் இன்றி, நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிப்பர் என, இந்த நீதிமன்றம் நம்புகிறது. பணிக்கு திரும்பாத டாக்டர்களை பொறுத்தவரை, சட்டப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

BHOPAL NEWS