Wednesday, May 24, 2017

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு; அரசியல் வட்டாரத்தில் புதிய புயல்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று சந்தித்து பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் புதிய புயலை உருவாக்கியுள்ளது.
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு; அரசியல் வட்டாரத்தில் புதிய புயல்

மே 24, 2017, 02:46 AM

சென்னை,

அ.தி.மு.க. கட்சியில் பிளவு ஏற்பட்டு அ.தி.மு.க. அம்மா அணி, அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி என்று இரண்டு கட்சிகளாக செயல்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க. அம்மா அணியில் 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

கட்சி உடைந்த போது அவர்களிடம் அ.தி.மு.க. அம்மா பிரிவின் தலைமை சார்பில் பல்வேறு வாக்குறுதிகள், கூவத்தூரில் தங்கியிருந்தபோது வழங்கப்பட்டிருந்தன. கட்சி, ஆட்சி ரீதியில் பொறுப்புகள் தரப்படும் என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால் அ.தி.மு.க. அம்மா அணியின் தலைமைக்கு வந்த நெருக்கடி காரணமாக அந்த வாக்குறுதிகள் கவனிக்கப்படாமல் விடப்பட்டன. தற்போது அந்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தி எம்.எல்.ஏ.க்கள் பலர், ஆட்சி நிர்வாகத்தை வற்புறுத்தி வருகின்றனர். இது முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களுமான தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன், செந்தில் பாலாஜி உள்பட 8 எம்.எல்.ஏ.க்கள் 22–ந் தேதியன்று தலைமைச் செயலகத்துக்கு வந்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர்.எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

அ.தி.மு.க. அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்ததாக அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதைப் பின்பற்றி எம்.எல்.ஏ.க்கள் பலர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசத்தொடங்கிவிட்டனர்.

அவரவர் தொகுதியில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகளைக் கொண்டு வந்து முதல்–அமைச்சரிடம் தெரிவிப்பதாக பெயரளவுக்கு வெளியே கூறப்பட்டாலும், உண்மையான கோரிக்கை என்பது கூவத்தூர் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது என்று அ.தி.மு.க. அம்மா அணி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.10 எம்.எல்.ஏ.க்கள்

இதுபற்றி எம்.எல்.ஏ. ஒருவரிடம் கேட்டபோது, ‘‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும், அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ற காலகட்டம் இது. எனவே தற்போது சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்’’ என்றார்.

இந்த சூழ்நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் எடப்பாடி கே.பழனிசாமியை மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. தென்னரசு, மணப்பாறை சந்திரசேகர், விளாத்திகுளம் உமா மகேஸ்வரி, திருப்பூர் குணசேகரன், ராதாபுரம் இன்பதுரை, மண்ணச்சநல்லூர் பரமேஸ்வரி, பெரியகுளம் கதிர்காமு, ஈரோடு மேற்கு கே.வி.ராமலிங்கம், பெரம்பூர் வெற்றிவேல், தியாகராயநகர் சத்யா ஆகியோர் முதல்–அமைச்சரை சந்தித்தனர்.நாடாருக்கு பிரதிநிதித்துவம்

அவர்களுடன் அவர்களின் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்–அமைச்சரிடம் கொடுத்துள்ளனர்.

அமைச்சரவையில் நாடார் சமுதாயத்திற்கு இடமில்லாத சூழ்நிலை இருப்பதால் அதுகுறித்து முதல்–அமைச்சரிடம் ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை கூறியதாகத் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி இன்பதுரையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சுதந்திரம் அடைந்த பிறகு தமிழகத்தில் அமைந்த அமைச்சரவைகளில் நாடார் சமுதாய மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போதுள்ள அமைச்சரவையில் அவர்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பது உண்மைதான்.

ஆனால் நான் முதல்–அமைச்சரிடம் தொகுதிப் பிரச்சினை தொடர்பான சில கோரிக்கைகளை முன் வைத்தேன். அரசுத் திட்டங்களுக்கு நிலம் அளிக்கப்படும்போது, 6 மடங்கு விலையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.கடல் அரிப்பு

அதன் அடிப்படையில் சிறப்பு சட்டத்தை உருவாக்கி, மாவட்ட கலெக்டருக்கு கூடுதல் அதிகாரம் அளித்து, மக்களுக்கு நஷ்டஈட்டை வழங்கி, தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

அதுபோல பெருமணல், கூட்டப்புளி, கூடுதாழையில் கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். இதற்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தனியாக சந்தித்து பேசினேன். இவ்வாறு அவர் கூறினார்.புதிய புயல்

தொகுதி சம்பந்தப்பட்ட பிரச்சினை என்ற பெயரில், தற்போது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முதல்–அமைச்சரை எம்.எல்.ஏ.க்கள் சந்திக்கத் தொடங்கியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் புதிய புயலை கிளப்பி இருக்கிறது. இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சமும் உருவாகியிருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025