Friday, May 5, 2017

காலி வாட்டர் கேன் உடன் 600 ரூபாய்... மாடர்ன் டாய்லெட் ரெடி!- அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்
சி.ய.ஆனந்தகுமார்

என்.ஜி.மணிகண்டன்




ஒரு காலி வாட்டர் கேன்களை கொண்டு என்ன செய்துவிட முடியும் என நாம் நினைக்கலாம், ஆனால் துர்நாற்றம் வீசிய பள்ளி கழிப்பறையை, வெறும் 600ரூபாய் செலவில் “மாடர்ன் டாய்லெட்”ஆக மாற்றி சாதித்துள்ளார்கள் திருச்சி அரசுப் பள்ளி மாணவர்கள். இதற்கு தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள ஏ.குரும்பப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சுமார் 97 மாணவர்கள் படிக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை, இந்தப் பள்ளியின் சிறுநீர் கழிப்பறை, மிகமோசமான நிலையில், மாணவர்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக இருந்தது. அந்தக் கழிப்பறையில் இருந்து, சிறுநீர் வெளியேற வசதிகள் இல்லாததால், அதன் துர்நாற்றம் பள்ளி வகுப்பறை வரை வீசம். இதனால் மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, அந்தப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாண முடிவெடுத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து கொஞ்சம் பணம் சேமித்து, கழிப்பறைக்கு பெயிண்ட் அடித்து சுத்தம் செய்ய ஆரமித்தார்கள். அடுத்து, மாணவர்களான சுபிக் பாண்டியன், சந்தோஷ், ராகுல், தயாநிதி மற்றும் பிரபாகரன் உள்ளிட்டோர் அடுத்த நடவடிக்கைகள் குறித்து யோசித்தனர். அப்போதுதான், அப்படி கிளிக் ஆனதுதான் வெறும் 600செலவில் பள்ளி கழிப்பறையை,“மாடர்ன் டாய்லெட்” ஆக மாற்றும் யோசனை.

அடுத்து நடந்த மாற்றங்களை பகிர்ந்து கொண்டார் ஆசிரியர் கேசவன்,

“ஆரம்பத்தில் துர்நாற்றம் வீசிய கழிப்பறையால் அதைப் பயன்படுத்தும் மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களையும் உருவாகி, மாணவர்களின் வருகை மிகவும் குறைந்தது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை உணர்ந்தோம்.



அதனால் மாணவர்களும் நாங்களும் சேர்ந்து கழிப்பறையைச் சுத்தம் செய்தோம், அதன்பிறகு, ‘அடுத்து என்ன செய்வது’ என யோசித்துக்கொண்டிருந்தோம். அப்போது, கழிப்பறையில் யூரின் பேசின்கள் அமைத்தால் செலவு அதிகமாகும், அதனால் குறைந்த செலவில் நவீன பேஷன்களை அமைக்கலாம் என்றும், பயன்படுத்தப்பட்ட மினரல் வாட்டர் கேனை, ஆல்டர் செய்து, யூரின் பேஷனாக பயன்படுத்தலாம் என மாணவர்கள் யோசனை கூறினார்கள். இந்த பேஷனை “மறு சுழற்சி” செய்யலாம்’ என்பதால் அவர்கள் கருத்தை ஏற்றுக்கொண்டோம்.

அடுத்து கொஞ்சம் காசு சேகரித்து, 20லிட்டர் “காலி” வாட்டர் கேன்களை கடையிலிருந்து வாங்கி வந்து, கத்தரிக்கோல், இரம்பம் கொண்டு சிறுநீர் தொட்டியை போன்று, தேவைக்கு ஏற்றார்போல கேனை வெட்டி, பெயிண்ட் அடித்து அச்சு அசல் சிறுநீர் தொட்டியாகவே மாற்றினோம்.

அந்தக் கழிவறை குழாய்களின் மூலம் சிறுநீர் எளிதில் வெளியேறும் வகையிலும், வடிகால் அமைப்பைச் சரியாக உருவாக்கி, மாணவர்களின் உயரத்திற்கு ஏற்ப, தேவையான இடங்களில் பொருத்தி இருக்கிறோம். இப்போது பேஷனுடன் வடிகால் குழாய் முறையே இணைத்திருப்பதன் மூலம், பாதுகாப்பான “மாடர்ன்” சிறுநீர் கழிப்பிடம் தயாரானது. வெறும் 600 ரூபாயில் கழிப்பறையை “மாடர்ன் டாய்லெட்” ஆக மாற்றி, அதையே பயன்படுத்தி வருகின்றோம்.

முறையே நாங்கள் பராமரிப்பதால் பிரச்னைகள் இல்லை. ஆரோக்கியமான கழிவறையை நாங்களே உருவாக்கி இருக்கிறோம். இதற்கு “Design For Change–2016” எனும் அமைப்பு, தேசிய அளவில் மிகச்சிறந்த சிறந்த ஐந்து படைப்புகளில் ஒன்றாக தேர்தெடுத்தது. இந்த விருதுக்கான தேர்வில், 27மாநிலங்களில் உள்ள பள்ளிகள் கலந்து கொண்டன. குறிப்பாக தமிழக அளவில் 39பள்ளிகள் வந்திருந்தன. இதில் எங்கள் பள்ளி தமிழக அளவில் முதலிடமும், தேசிய அளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்தது. கட்ந்த டிசம்பர் மாதம், குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் நடந்த விழாவில், மாணவர்களும் நாங்களும் கலந்துகொண்டு, விருது மற்றும் 50ஆயிரம் ரூபாய் ரொக்கம் வாங்கினோம். இந்த விருது எங்கள் மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.



இப்போது நாங்கள், எங்கள் பள்ளியைப்போலவே, மற்ற பள்ளிகளிலும் இந்த முறையை பரவலாக்க முடிவு செய்து, ஆசிரியர்கள் ஒன்றாக கூடும் “CRC” மையங்களுக்கு மாணவர்களுடன் சென்று, விளக்கிக்கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். இந்த முறையைப் பள்ளிகளில் மட்டுமல்லாமல், வீடுகள், பொது இடங்களிலும் பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல், எங்கள் மாணவர்கள், மினரல் வாட்டர் கேனில், பள்ளி மற்றும் வகுப்பறைக்குத் தேவையான குப்பைத் தொட்டி, பூந்தொட்டி, பக்கெட், குப்பை அள்ள முரம்’ என பல உபயோகமான பொருட்களை உருவாக்கி, அதையே பயன்படுத்தி வருகிறோம். மாணவர்களுக்குள் இருக்கும் திறமையையும் சிந்திக்கும் ஆற்றலையும் ஆசிரியர்களான நாங்கள் தூண்டிவிட்டோம். அவர்கள், ஆர்வத்தோடு செயல்பட்டார்கள்.

மாணவர்களிடம் சிந்தித்து செயல்படும் திறன் அதிகம் உண்டு. அவற்றை தூண்டிவிடும் பணியை ஆசிரியர்கள் செய்தால் போதும், மாணவர்கள் ஜொலிப்பார்கள். அதைதான் நாங்கள் செய்தோம்” என்றார் புன்னகையுடன்.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.12.2025