மதுரை: அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ துறைகளில், பதிவாளர் பணியிடங்களை உருவாக்குமாறு வெளியிடப்பட்டுள்ள அரசாணைக்கு, டாக்டர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 21 அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் உள்ளன. இங்குள்ள ஒவ்வொரு மருத்துவ துறைக்கும், ஒரு தலைவர் மற்றும் அவரின் கீழ் தலைமை மருத்துவர்களும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, மருத்துவ மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த மருத்துவ துறைகளின் கீழ் பதிவாளர் பணியிடங்களை உருவாக்குமாறு, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மருத்துவமனை டீன், இந்திய மருத்துவ கவுன்சில் 'நோடல்' அதிகாரியுடன் இணைந்து கவுன்சில் விதிமுறைகளை அமல்படுத்துதல், கருத்தரங்கு, பயிற்சி பட்டறை நடத்துதல், மாணவர்களின் வருகைப் பதிவை பராமரித்தல், மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை ஊடகம் மூலம் வெளியிட ஊக்கப்படுத்துதல் போன்ற பணிகள் பதிவாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இருப்பினும், அவர்கள் கற்பித்தல், நோயாளிகளை கவனித்தல் போன்ற பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் எனவும், பதிவாளர் பணிக்காக எந்தவித ஊக்கத்தொகையும் வழங்கப்படாது எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூத்த போதகர், உறைவிட பயிற்சியாளர், உதவி பேராசிரியர் போன்றவர்கள் பதிவாளர்களாக நியமிக்கப்படுவர்.
ஆனால், புதிய பதவியால் நோயாளிகள் நலன் பாதிக்கப்படும் என டாக்டர்களில் ஒரு தரப்பினர் அப்பதவிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: சென்னை, மதுரை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 30க்கும் மேற்பட்ட மருத்துவ துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் ஒருவரை பதிவாளராக நியமிப்பதால், பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள் இல்லாத நிலை
ஏற்படும்.பதிவாளராக பட்டயப் படிப்பு முடித்தவர்களும் நியமிக்கப்படுவர் என்பதால், 'சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்' டாக்டர்களும் அவர்கள் கட்டுப்பாட்டில் பணி செய்யும் நிலை ஏற்படும்.
சமீபத்தில் தொலைதுார கிராமங்களில் பணி செய்யும் அரசு டாக்டர்கள் பட்ட மேற்படிப்பில் சேர, ஆண்டுக்கு 10 சதவீத கூடுதல் மதிப்பெண் வழங்க கூடாது என போராடிய, அரசு டாக்டர் சங்கத்தை போராட்டத்தில் இருந்து விலக வைப்பதற்காக இந்த அரசாணையை அரசு பிறப்பித்துள்ளது. கவுன்சில் விதிமுறைகள் படி பதிவாளர் பதவியே கிடையாது, என்றனர்.
No comments:
Post a Comment