Sunday, June 11, 2017

தவறாக அனுப்பிய மெஸேஜை திரும்பப்பெறலாம் - அசத்தலான வாட்ஸ்அப்-ன் புதிய வசதிகள்!

கருப்பு

வாட்ஸ்அப் பார்க்காமல் ஒரு நாளைக்கூட இன்றைய தலைமுறையினரால் கடத்திவிட முடியாது. அலுவலகப்பணி காரணமாகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உரையாடவும் வாட்ஸ்அப் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 120 கோடிப்பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடிப்பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.



வாட்ஸ்அப் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கு முன், டெஸ்ட்டர்களுக்கான பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தி சோதிப்பது வழக்கம். அதன்பின் தான் புதிய வசதிகள் அனைத்தும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படும். சமீபத்தில் வெளியான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (Beta Version - 2.17.210), அசத்தலான சில புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை விரைவில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படலாம்.

மெஸேஜை திரும்பப்பெறலாம் :

வாட்ஸ்அப்பில் தவறுதலாக ஒரு மெஸேஜை அனுப்பிவிட்டு, அதை நீக்கவோ அல்லது திரும்பப்பெறவோ முடியாமல் சிரமப்பட்டிருப்போம். மெஸேஜை டெலீட் செய்தால் அனுப்பியவரின் சாட்டில் மட்டுமே அது நீக்கப்படும். ஆனால், ரிசீவர் மொபைலில் அந்த மெஸேஜ் அப்படியே இருக்கும். பீட்டா வெர்ஷனில் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது வாட்ஸ்அப். மெஸேஜை திரும்பப்பெற்றுக்கொள்ள 'Unsend' என்ற ஆப்ஷன் பீட்டா வெர்ஷனில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திரும்பப்பெற நினைக்கும் மெஸேஜை செலக்ட் செய்ததும், திரையின் மேலே மெனு ஒன்று தோன்றும். அதில் 'Unsend' ஆப்ஷனை கிளிக் செய்தால், உடனடியாக மெஸேஜ் திரும்பப்பெறப்படும். ஆனால், மெஸேஜ் அனுப்பி ஐந்து நிமிடங்களுக்குள் மட்டுமே அதைத் திரும்பப்பெற முடியும். அதற்கு மேல் நேரமாகியிருந்தால் மெஸேஜை திரும்பப்பெற முடியாது. ரிசீவர் மொபைலில் இருந்தும் அந்த மெஸேஜ் உடனடியாக நீக்கப்பட்டு, அன்சென்ட் செய்யப்பட்ட விவரம் மட்டும் தெரிவிக்கப்படும்.

லைவ் லொக்கேசன் :

வாட்ஸ்அப்பில் ஓர் இருப்பிடத்தின் மேப்பை எளிதாகப் பகிர்ந்துகொள்ளக்கூடிய லொக்கேசன் ஆப்ஷன் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த மேப்பில் குறிப்பிட்ட இடம் எங்கே இருக்கிறது என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். இதேபோல, நடமாடும் ஒரு நபரின் அப்போதைய இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் வகையில் 'லைவ் லொக்கேசன்' ஆப்ஷனையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு நபர் தனது லைவ் லொக்கேசனை மற்றொரு நபருக்கு அனுப்பினால், அதன் மூலம் அந்நபர் பயணிக்கும் இருப்பிடங்களின் லொக்கேசனை அறிந்துகொள்ள முடியும். பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் லைவ் லொக்கேசனைப் பகிர்ந்துகொள்ள முடியும்.


டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் :

வாழ்வின் அத்தனை இனிமையான தருணங்களையும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது தான் தற்போதைய ட்ரெண்ட். புகைப்படம், வீடியோ, Gif போன்ற எந்த ஃபார்மட்டிலும் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ள முடியும். 24 மணிநேரம் இந்த ஸ்டேட்டஸை மற்றவர்களால் பார்க்க முடியும். இந்த பீட்டா வெர்ஷனில் டெக்ஸ்ட் (Text) வடிவில் கலர் பேக்ரவுண்ட் உடன் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ளும் ஆப்ஷனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மெஸேஜில் Bold, Italic, Strike Through போன்ற எழுத்துருவின் வடிவங்களை மாற்றிக்கொள்வது போல, டெக்ஸ்ட் ஸ்டேட்டஸிலும் மாற்றிக்கொள்ளலாம்.

இவை அனைத்தும் தற்போது வாட்ஸ்அப் பீட்டா பயனாளிகளுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், Unsend வசதியானது ரூட் அக்சஸ் கொடுத்தபின், Xposed framework இன்ஸ்டால் செய்தால் மட்டுமே வேலை செய்யும். அனுப்புனரும், பெறுநரும் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தினால் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். இந்த வசதிகள் சில மாற்றங்களோடு விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...