Friday, June 16, 2017

ரயில் நிலையம் தனியாருக்கு... தொடக்கப்புள்ளி


இந்திய ரயில்வே துறையை தனியார்மயப்படுத்த வேண்டும் என்கிற பேச்சு சில ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் ரயில்வேயின் நஷ்டம் குறைந்து, வருவாய் அதிகரிக்கும் என்கிறது அரசு. மேலும் நவீன கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடுகளையும் இதன் மூலம் திரட்ட முடியும் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால் தொழிற்சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ரயில்வேயை தனியார்மயமாக்கினால் அது பொதுச் சேவை துறையாக இயங்க முடியாது. இதனால் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட சுமைகள் மக்களுக்கு ஏற்படும் என்பது இவர்களது வாதம். இந்த நிலையில் கடந்த வாரத்தில் மத்திய அரசு தொடங்கியுள்ள ரயில் நிலைய தனியார்மயமாக்க திட்டம் ரயில்வே தனியார் மயத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது.
போபால் அருகில் உள்ள ஹபீப்கஞ்ச் நகர ரயில் நிலையம்தான் தற்போது தனியார் வசம் சென்றுள்ளது. இந்த ரயில் நிலையத்தை சர்வதேச தரத்துக்கு மாற்ற அந்த நகரத்தைச் சேர்ந்த பன்சால் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது மத்திய அரசு.

அரசு தனியார் கூட்டு திட்டத்தின் (PPP) அடிப்படையில் 8 ஆண்டுகளுக்கு இந்த ரயில் நிலையத்தை நிர்வகிக்கவும் செயல்படுத்தவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையத்துக்கு சொந்தமான 17,245 ச.மீ நிலமும் 45 ஆண்டு குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ.100 கோடியும், ரயில்வே நிலத்தை வர்த்தக ரீதியாக மேம்படுத்த கிட்டத்தட்ட ரூ.350 கோடியும் பன்சால் குழுமம் முதலீடு செய்ய உள்ளது.
உலக தரம் வாய்ந்த போக்குவரத்து மையம், ஷாப்பிங் மால், உணவகங்கள், பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளை இந்த நிறுவனம் அமைத்து அதை நிர்வகிக்க உள்ளது. சோலார் எனர்ஜி உள்ளிட்ட பல கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.

முக்கியமாக ஆபத்து காலத்தில் நான்கு நிமிடங்களில் ரயில் நிலையத்தை விட்டு பயணிகள் வெளியே செல்வதற்கான வசதிகளும் உருவாக்கப்பட உள்ளன.
இந்த ரயில் நிலையத்தைத் தொடர்ந்து ஆனந்த் விஹார், பிரிஜ்வாசன், சண்டீகர், காந்தி நகர், சிவாஜிநகர் மற்றும் புணே ரயில் நிலையங்களை தனியார் வசம் அளிப்பதற்கான முனைப்புகளிலும் ரயில் நிலைய மேம்பாட்டு ஆணைய நிறுவனம் இறங்கியுள்ளது.

ரயில் நிலைய தனியார் மயமாக்கம், இந்திய ரயில் போக்குவரத்தில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதே உண்மை. இனி வரும் நாட்களில் ரயில்வேயில் அடுத்தடுத்த மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அதன் தொடக்கப்புள்ளிதான் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025