Saturday, June 10, 2017

அது பிளாஸ்டிக் முட்டை பப்ஸே இல்லையே..!’ - காவல்துறை, உணவுப் பாதுகாப்புத்துறையின் சால்ஜாப்பு

நமது நிருபர்




திருவள்ளூர் மணவாள நகரில் உள்ள தியேட்டர் சிற்றுண்டியில் முட்டை பப்ஸ் வாங்கி சாப்பிட்ட மூன்று இளைஞர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இது, பேக்கரி உரிமையாளர், முட்டை வியாபாரிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர், ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சூர்யா. அதே பகுதியைச் சேர்ந்த தயாளனின் மகன் அஜீத், பாஸ்கரின் மகன் சிரஞ்சீவி. சூர்யா, அஜீத், சிரஞ்சீவி ஆகிய மூன்றுபேரும் நண்பர்கள். இவர்கள், திருவள்ளூர் மணவாள நகரில் உள்ள தியேட்டரில் தி மம்மி என்ற ஆங்கிலப்படத்துக்கு நேற்று மாலை சென்றனர். படத்தின் இடைவேளையில் மூன்றுபேரும், தியேட்டரில் உள்ள சிற்றுண்டியில் முட்டை பப்ஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அந்த, முட்டை பப்ஸ் கடினமாக இருந்துள்ளது.



இதுகுறித்து சிற்றுண்டி ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் சரிவர பதில்சொல்லவில்லை. சிரஞ்சீவி முட்டை பப்ஸை சாப்பிட முடியாமல் அதை நிறுத்திவிட்டார். சூர்யாவும் அஜீத்தும் பப்ஸை சாப்பிட்டு முடித்துள்ளனர். இதன்பிறகு தியேட்டருக்கு சென்று படத்தைப் பார்த்துள்ளனர். அப்போது, சூர்யாவுக்கும் அஜீத்துக்கும் திடீரென வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் சோர்ந்துபோனதால், பயந்துப்போன சிரஞசீவி, போன் மூலம் வீட்டுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக ஏரிக்கரைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தியேட்டருக்கு வந்தனர். அவர்கள், சூர்யா, அஜீத்தை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதற்கிடையில் ஆத்திரமடைந்த மக்கள் தியேட்டரை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மணவாளநகர் போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார் அங்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டு மக்கள் அங்குகிருந்து கலைந்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் தியேட்டரில் அடுத்த படக்காட்சி ரத்து செய்யப்பட்டது.




இந்த சம்பவம் தொடர்பாக சிரஞ்சீவி கூறுகையில், "நான் மற்றும் என்னுடைய நண்பர்கள் சூர்யா, அஜீத் ஆகிய மூன்று பேரும் தியேட்டரில் உள்ள கேன்டியனில் முட்டை பப்ஸ் சாப்பிட்டோம். பப்ஸில் உள்ள முட்டை, பிளாஸ்டிக் போல இருந்தது. இதுகுறித்து கேட்டபோது ஒன்றுமில்லை என்று கேன்டியன் ஊழியர்கள் பதிலளித்தனர். என்னால் பப்ஸை சாப்பிட முடியவில்லை. ஆனால், சூர்யா, அஜீத் ஆகிய இரண்டு பேரும் பப்ஸை முழுவதுமாக சாப்பிட்டனர். பின்னர், படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது, இரண்டு பேரும் தலைசுற்றல், வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டது. இருவரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். ஆனால், நாங்கள் கொடுத்த புகாருக்கு இதுவரை போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "தியேட்டரில் உள்ள கேன்டியனுக்கு அந்தப்பகுதியில் உள்ள பேக்கரியிலிருந்து முட்டை பப்ஸ் சப்ளை செய்யப்ட்டுள்ளது. இதனால் பேக்கரி உரிமையாளரிடம் விசாரணை நடந்துவருகிறது. மேலும், பப்ஸிக்குப் பயன்படுத்திய முட்டையை வாங்கிய வியாபாரியிடமும் விசாரித்து வருகிறோம். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். புகாரை வாங்கிவிட்டோம். விசாரணை நடந்துவருவதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்றனர்.



திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் இந்த சம்பவத்தில் பெரியளவில் அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுபோல காவல்துறையினரும், பெரிய இடத்து விவகாரம் என்பதால் வழக்கில் அக்கறை செலுத்தாமல் சாப்பிட்டது பிளாஸ்டிக் முட்டை பப்ஸே இல்லை என்று வழக்கை முடிக்க முயற்சிப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. தியேட்டரில் சாப்பிட்ட முட்டை பப்ஸை முறையாக ஆய்வு செய்வதோடு, சம்பந்தப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்கின்றனர் ஏரிக்கரைப் பகுதி மக்கள்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலரை தொடர்பு கொண்டபோது அவர்கள் பதிலளிக்கவில்லை

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...