Saturday, June 10, 2017

சிங்கிள் ஃபேஸ், த்ரீ ஃபேஸ் எதைப் பொருத்தலாம்?

ஜி. எஸ். எஸ்.






மின்சாரம் பயன்படுத்துபவர்கள் பலரும் இந்த ‘சிங்கிள் ஃபேஸ்’ (Single Phase), ‘த்ரீ ஃபேஸ் ’ (Three Phase) போன்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்கள் வீட்டுக்கு ஏற்றது எது? சிங்கிள் ஃபேஸா, திரீ ஃபேஸா? இதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இவற்றைப் பற்றிய அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

சிங்கிள் ஃபேஸ் என்பதை ‘ஒரு முனை மின்சாரம்’ எனத் தமிழில் சொல்லலாம். பெரும்பாலான வீடுகளில் இத்தகைய ஒருமுனை மின்சாரம்தான் பயன்படுத்தப்படுகிறது. ஒரு முனை மின்சாரம் என்கிறோம் ஆனால், இரு வயர் வருகிறதே எனச் சந்தேகம் வரலாம். இரு வயர் இருந்தாலும் ஒன்றில்தான் ஃபேஸ் எனப்படும் பாஸிடிவ் மின்சாரம் வரும். மற்றொன்று நியூட்ரல் எனப்படும் நெகடிவ்தான். வீட்டிலுள்ள பல்புகள் மற்றும் மின்விசிறிகள் போன்றவற்றுக்கு ஒருமுனை மின்சக்தி இணைப்பே போதுமானது. தண்ணீர் இணைப்புகளுக்கு மோட்டார் பயன்படுத்தினால்கூட ஒருமுனை மின்சக்தியே போதுமானதுதான்.

த்ரீ ஃபேஸ் என்பதை மூன்று முனை மின்சாரம் எனலாம். மிக அதிக மின்சாரம் ஒரே சமயத்தில் தேவைப்படும்போது மூன்று முனை மின்சக்தி (த்ரீ ஃபேஸ் ) தேவைப்படும். தொழிற்சாலைக்கும் பெரிய வணிக வளாகங்களுக்கும் நிச்சயம் இந்த மின்சக்திதான் கொடுக்கப்படும். வீட்டில் குளிர்சாதனப் பெட்டி (Airconditioner) பொருத்தும்போதும் மூன்றுமுனை மின்சக்தி இணைப்புகள்தான் பரிந்துரைக்கப்படுகின்றன.

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

ஒருமுனை மின் சக்தி என்றால் நொடிக்கு 60 முறை என்று இதில் மின்சாரமும், வோல்டேஜுவும் மாறுபடும். இந்தியாவைப் பொறுத்தவரை ஒருமுனை மின்சாரம் 230 வோல்ட் என்கிற அளவில் உள்ளது (அமெரிக்கா என்றால் 120 வோல்ட்தான்). இந்தியாவில் மூன்று முனை மின்சார இணைப்பில் 440 வோல்ட்வரை மின்சாரம் பாயும்.

மூன்று முனை மின் இணைப்பில் மின்சுற்று என்பது மூன்று மாற்று மின் இணைப்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக மின்சாரம் இதில் ஒருபோதும் ஜீரோவைத் தொடாது. எனவே, தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்பட வாய்ப்பு மிக அதிகம். தவிர மூன்று முனை மின் இணைப்பு மூன்று மடங்கு மின்சார லோடை இதனால் தாங்க முடியும்.

வீடுகளில் மூன்று முனை மின் இணைப்பு கொண்டவர்கள் ஒன்றைக் கவனித்திருப்பீர்கள். மின்சார வாரியம் சாலைகளில் நிலத்தடியில் நிறுவும் மூன்று மின் இணைப்புகள்தான் நம் வீட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன.

இவற்றில் ஒன்றில் மின்சாரம் வழங்கப்படவில்லை என்றால்கூட, மற்ற இரண்டின் மூலம் நமக்குத் தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும். அதனால்தான் ஒருமுனை மின் இணைப்பு கொண்டவர்கள் வீட்டில் மின்சாரம் இல்லாதபோதுகூட மூன்று முனை மின் இணைப்பு கொண்டவர்களின் வீடுகளில் மின்சாரம் இருப்பதைக் காண முடிகிறது.

மூன்று முனை மின் இணைப்பு நிறுவப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் அவற்றில் ஒன்றில் மின்சாரம் வரவில்லை என்றால்கூட, வீட்டுக்குச் செல்லும் அந்த மின் இணைப்புகளையும் மின்சாரம் வந்துகொண்டிருக்கும் முனைகளுக்கு (அதற்கான சுவிட்சுகளை இயக்குவதன் மூலம்) மாற்றிக்கொள்ள முடியும்.

மூன்று முனை மின் இணைப்பு கொண்டிருந்தால் மாதாமாதம் மின்சாரக் கட்டணம் அதிகரித்துவிடுமோ என்ற கவலை வேண்டாம். இதற்கும் செலுத்த வேண்டிய கட்டணத்துக்கும் தொடர்பு கிடையாது (ஆனால், மூன்று முனை மின் இணைப்பை நிறுவுவதற்குத் தொடக்கத்தில் கொஞ்சம் அதிகம் செலவாகும்).

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...