Monday, June 19, 2017

சீருடைக்குப் பணம் செலுத்த முடியாததால் பள்ளியே ஆடைகளைக் களைந்த பரிதாபம்! 

ஞா. சக்திவேல் முருகன்

பீகார் மாநிலம் சிக்ராலா கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி பி.ஆர். எஜூகேஷன் அகாடமி. இந்தப் பள்ளி தனது பள்ளி மாணவர்களுக்குக் கட்டண அடிப்படையில் சீருடை வழங்கி இருக்கிறது. இரண்டு மாணவிகள் சீருடைக்கு பணம் செலுத்தாததால் அவர்களின் உடைகளைக் கழற்றி வாங்கிக்கொண்டு வீட்டுக்கு அனுப்பி இருக்கிறது பள்ளி நிர்வாகம். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (16.06.2017) நடந்திருக்கிறது.





பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளும் சகோதரிகள். ஒருவர் முதல் வகுப்பிலும், மற்றொரு மாணவி இரண்டாம் வகுப்பிலும் படிக்கிறார்கள். இவர்களது தந்தை சாஞ்சன் சாஹ் வெள்ளிக்கிழமை மகள்களை அழைக்க பள்ளிக்குச் சென்றிருக்கிறார். வகுப்பு ஆசிரியையோ, உடனடியாக சீருடைக்கான பணத்தைச் செலுத்திவிட்டு மகள்களை அழைத்துச் செல்லும்படி சொல்லி இருக்கிறார். சாஹ் இரண்டு பெண் குழந்தைகளின் சீருடைக்கான பணம் செலுத்துவதற்கு கொஞ்சக் கால அவகாசம் கேட்டிருக்கிறார். ஆனால், அவரது கண் முன்னாலேயே, அனைத்து ஆசிரியர்களுக்கும் மத்தியில் இரண்டு பெண் குழந்தைகளின் ஆடைகளையும் களைந்து வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

சாஹ், வழி தெரியாமல் காவல் நிலையத்தை நாடி இருக்கிறார். இவரது கதறலில் காவல்துறை பள்ளியின் மீது வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. 'இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் பள்ளியின் முதல்வரையும், வகுப்பு ஆசிரியையும் கைது செய்து இருக்கிறோம்' என்கிறார் காவல் துறை அதிகாரி ராஜேஷ்குமார். மாநில கல்வி அமைச்சர் அஷோக் சௌத்ரி 'இந்தச் சம்பவத்தை உடனடியாக விசாரித்து பள்ளியின் மீதும், சம்பந்தப்பட்டவர்களின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறி இருக்கிறார்.

நாடு கல்வியில் முன்னேறி என்ன பயன்... கல்வி நிறுவனங்களும், ஆசிரியர்களும் மாற வேண்டாமா?

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025