Monday, June 19, 2017

ஒரு வாரத்தில் காலியாகும் நீர்த்தேக்கங்கள்: தண்ணீர் கவலையில் சென்னைவாசிகள்!

சென்னை: சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நான்கு முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு இன்னும் ஒரு வாரத்தில் காலியாக இருப்பதால்,கடும் குடிநீர் பஞ்சத்தை சென்னைவாசிகள் எதிர்நோக்க உள்ளனர்.

தமிழகத்தின் தலைநகரமான சென்னையின் குடிநீர் தேவையை தீர்ப்பதில் நான்கு நீர்த்தேக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் மற்றும் செங்குன்றம் ஆகியவையே அந்த நீர்த்தேக்கங்களாகும். இவற்றிலிருந்துதான் தினமும் சென்னையின் குடிநீர் தேவைக்கு நீர் எடுக்கப்படுகிறது.

ஆனால் தற்பொழுது செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் சோழவரம் ஆகிய மூன்று நீர்த்தேக்கங்களும் தற்பொழுது முழுமையாக வறண்டு விட்டன. மீதமுள்ள செங்குன்றம் நீர்த்தேக்கத்தில் இருந்து மட்டுமே எடுத்து சென்னைக்குஜ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஒரு நாளைக்கு இருபது மில்லியன் லிட்டர் என்ற அளவில் தற்பொழுது நீர் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதுவும் வரும் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே தாங்கும் என்பதுதான் சென்னைவாசிகளின் கவலைக்குரிய விஷயமாகும்.

நேற்றைய நிலையை பொறுத்த வரை குறிப்பிட்ட நான்கு நீர்த்தேக்கங்களிலும் சேர்த்து அவற்றின் மொத்த கொள்ளளவில் ஒரு சதவீதம் மட்டுமே நீர் அளவு இருக்கிறது.

கடந்த ஆண்டு இதே நேரத்தில் இந்த அளவு 41% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையை உத்தேசித்து தமிழக அரசு தற்பொழுது சென்னையை சுற்றியுள்ள கல் குவாரிகளில் உள்ள குட்டைகளில் தேங்கியுள்ள நீரை, சென்னைக்கு வினியோகம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025