Tuesday, June 13, 2017

திருமலையில் புதிய தரிசன வரிசை அமல்

By DIN  |   Published on : 12th June 2017 10:27 AM  |   
tirupati
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் புதிய தரிசன வரிசை அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானின் தரிசனம் காண வரும் பக்தர்கள் காத்திருப்பு அறைகளைக் கடந்து ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்த பின், தரிசனத்துக்காக கோயிலுக்குள் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் 2 தரிசன வரிசைக்குள் அனுப்பி வருகின்றனர். ஒன்று கொடிமரம், வெள்ளி வாயில் வழியாக தங்க வாயிலை அடைந்து தரிசனத்துக்குச் செல்வது. மற்றொன்று மகாதுவாரம் அருகில் உள்ள படிகாவலி இடதுபுறம் உள்ள ரங்கநாயகர் மண்டப வெளிப்புறம், கல்யாண உற்சவ மண்டபம் வழியாக வெள்ளி வாயில், தங்க வாயிலை அடைந்து தரிசனத்துக்குச் செல்வது.
இதில் காத்திருப்பு அறைகளில் இருந்த பக்தர்கள் ஒரே நேரத்தில் மகா துவாரம் வழியாக கோயிலுக்குள் நுழைந்தாலும், இந்த இரு தரிசன வரிசை காரணமாக தரிசன நேரம் மாறுபடுகிறது.

இதுகுறித்து பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் அதிருப்தி தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகள் கோயிலுக்குள் படிகாவலி அருகில் உள்ள துலாபார மண்டபத்தின் பக்கமிருந்து திருமலை ராயர் மண்டபம், கல்யாண உற்சவ மண்டபம் வெளிப்புற தரிசன வரிசை வழியாக வெள்ளி வாயிலை அடைய புதிய தரிசன வரிசையை ஏற்படுத்தி உள்ளனர்.

இதன் மூலம் படிகாவலியிலிருந்து கொடிமரம், வெள்ளி வாயில் வழியாக தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்களுக்கும், புதிய தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கும் 2 முதல் 5 நிமிடங்கள் மட்டுமே தரிசன நேரம் மாறுபடும். இந்த புதிய தரிசன வரிசை கடந்த சனிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025