Monday, June 19, 2017

இறந்ததாக கருதி புதைக்கச் சென்றபோது பச்சிளம் குழந்தைக்கு உயிர் வந்தது!

By DIN  |   Published on : 19th June 2017 02:40 AM  |    
தில்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் இறந்ததாக கூறப்பட்ட பச்சிளம் குழந்தையை புதைக்கச் சென்றபோது, அக்குழந்தைக்கு உயிர் இருப்பதை உறவினர்கள் கண்டுபிடித்தனர். மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த இச்சம்பவம், தலைநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக குழந்தையின் தந்தை ரோஹித் கூறியதாவது:
சப்தர்ஜங் மருத்துவமனையில் எனது மனைவிக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் குழந்தை பிறந்தது. குழந்தையை பரிசோதித்த செவிலியர், அது மூச்சுவிடவில்லை என்று தெரிவித்தார். பின்னர், குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவரும், செவிலியரும் கூறினர். இதைத் தொடர்ந்து, எனது
குழந்தையை ஒரு பையில் சுற்றி, புதைப்பதற்காக கொடுத்துவிட்டனர்.
குழந்தையை எடுத்துச் சென்ற நாங்கள், புதைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தோம். புதைப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன் எனது குழந்தை இருந்த பை அசைவதை எனது சகோதரி கண்டுபிடித்தார். இதையடுத்து, பையை திறந்த பார்த்தபோது, குழந்தைக்கு உயிர் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுசென்றோம். பின்னர், சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்
பட்ட எனது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாங்கள் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், எங்களது குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டிருக்கும். மருத்துவர்களின் அலட்சியத்தால் எனது குழந்தையின் உயிர் பறிபோக இருந்தது. இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளேன் என்றார் ரோஹித்.
இதுதொடர்பாக சப்தர்ஜங் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஏ.கே.ராய் கூறுகையில், 'சம்பந்தப்பட்ட குழந்தை, 22 வாரங்களே ஆன குறைமாத குழந்தையாகும். இதுபோன்ற குழந்தைகள் உயிர் பிழைப்பது மிகவும் அபூர்வமானது. அந்த குழந்தை பிறந்ததும் எந்த அசைவும் சுவாசமும் இல்லாமல் இருந்துள்ளது. குழந்தை இறந்துவிட்டது என்று தெரிவிப்பதற்கு முன் முறையாக பரிசோதிக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025