Wednesday, June 6, 2018

தலையங்கம்

11–ம் வகுப்பிலிருந்தே ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி





இந்தியா முழுவதிலும் மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடக்கிறது.

ஜூன் 06 2018, 03:00

இந்தியா முழுவதிலும் மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடக்கிறது. இந்த ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வை இந்தியா முழுவதும் 12 லட்சத்து 69 ஆயிரத்து 922 மாணவர்கள் எழுதினார்கள். இதில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 562 மாணவர்கள் தேர்ச்சிப்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 1 லட்சத்து 14 ஆயிரத்து 602 மாணவர்கள் ‘நீட்’ தேர்வை எழுதினார்கள். இதில் 45 ஆயிரத்து 336 மாணவர்கள் தேர்ச்சிப்பெற்றுள்ளனர். அதாவது 39.55 சதவீத மாணவர்கள்தான் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சிப்பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 32 ஆயிரத்து 570 மாணவர்கள்தான் தேர்ச்சிப்பெற்றிருந்தனர். சதவீத அடிப்படையில் 0.72 சதவீத மாணவர்கள் கடந்த ஆண்டைவிட கூடுதலாக தேர்ச்சிப்பெற்றுள்ளனர். இந்த வகையில் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டால், தமிழ்நாடு கடைசி 2 இடங்களுக்கு மேலாக 3–வது இடத்தில் இருக்கிறது. அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களெல்லாம் முதல் 10 இடங்களில் இடம்பெற்றிருப்பதை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் தேர்ச்சிவிகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பட்டியலை பார்த்தால், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா மட்டும் 720–க்கு 676 மதிப்பெண்கள் பெற்று 12–வது இடத்தில் இருக்கிறார். ஆந்திரா மாணவர்கள் 5 பேர் முதல் 50 இடங்களில் இடம்பெற்றுள்ளனர். ‘நீட்’ தேர்வில் தேர்ச்சிப்பெறுவதற்கு பள்ளிக்கூட படிப்பு இருந்தால் மட்டும் போதாது, அதற்கான பயிற்சிகளும் மாணவர்களுக்கு தேவையாக இருக்கிறது. ஏனெனில், மாணவி கீர்த்தனா கூட பயிற்சி மையத்தில் 2 ஆண்டுகளாக படித்திருக்கிறார். ஆக, பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் பயிற்சிகள்தான் ‘நீட்’ தேர்வுக்கு உறுதுணையாக இருக்கிறது.

பிளஸ்–2 தேர்வில் கடந்த ஆண்டு 1,125 மதிப்பெண்கள் எடுத்தும் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற முடியாமல், இந்த ஆண்டும் ‘நீட்’ தேர்வு எழுதி தேர்வு பெறாததால் விழுப்புரம் மாவட்டம் பெரவளுரில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துவிட்டார். ஆக, இவரைப்போன்ற மாணவிகளுக்கு நல்லபயிற்சி அவசியம். தமிழக அரசும் 412 மையங்களில், 8,362 பிளஸ்–2 மாணவர்களுக்குத்தான் இலவச ‘நீட்’ பயிற்சியை கடைசியாக சிலமாதங்களில் அளித்துவந்தது. இதில் 1,336 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிப்பெற்றுள்ளனர். 24,720 மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதியுள்ளனர். தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகளில் தவறு இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு கருணை மதிப்பெண்கள் வழங்கவும் கோரிக்கை இருக்கிறது. இந்த ஆண்டுமுதல் 11–வது வகுப்பிலிருந்தே ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை கல்விஆண்டின் தொடக்கத்திலிருந்தே தீவிரமாக தொடங்கவேண்டும். பயிற்சியின் தரமும் அதிகமாக இருக்கவேண்டும். ஏராளமான மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெறவேண்டும் என்பதை ஒரு இலக்காக வைத்து, கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே இதற்குரிய முயற்சிகளை கல்வித்துறை செய்யவேண்டும். இந்த ஆண்டு 1, 6, 9, 11–ம் வகுப்பு பாடத்தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, அடுத்த ஆண்டு மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்குமான பாடத்தரம் உயர்த்தப்படவேண்டும். 11, 12–வது வகுப்பு பாடத்திட்டத்தின் தரம் நிச்சயமாக அதிக மாணவர்கள் தேர்ச்சிக்கு வழிவகுக்கும்.

No comments:

Post a Comment

MP High Court Orders Medical College To Return Original Documents Of Student Who Wished To Leave His Seat & Return To Home State

MP High Court Orders Medical College To Return Original Documents Of Student Who Wished To Leave His Seat & Return To Home State Anukrit...