Friday, June 15, 2018

தொழில் தொடங்கலாம் வாங்க! - 16: ‘ஒற்றை ஆள்’ போதாது!

Published : 23 May 2017 10:28 IST

டாக்டர் ஆர்.கார்த்திகேயன்



விளையாட்டைப் போல வியாபாரத்தில் ஜெயிக்கவும் நல்ல அணி தேவை. முதன் முதலாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல அணி அமைப்பது பெரும் சவால். ஆனால் உங்கள் வெற்றிக்குப் பெரும் பலம் உங்கள் அணிதான். இதை உணராதவர்கள் தங்கள் வெற்றியைத் தாமதப்படுத்துகிறார்கள்.

காலத்துக்கும் செய்ய முடியுமா?

உங்களின் முதல் சில பணியாளர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்களின் பங்களிப்பு உன்னதமானது. அவர்கள் உங்களை நம்பி வந்தவர்கள். அவர்களை வளர்த்து, அவர்கள் மூலம் நிறுவனத்தை வளர்க்கும் கலையை அறிந்தவர்கள் தொழிலைப் பெருக்குவார்கள்.

இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நடைமுறையில் பலருக்கு சிரமமான காரியம் இதுதான். பொதுவாகத் தொழில் தொடங்குபவர்கள் எல்லாவற்றையும் தானே செய்ய நினைப்பார்கள். இதற்குப் பல காரணங்கள். நிறைய சம்பளம் கொடுத்து நல்ல பணியாளர்களை ஆரம்ப நிலையில் அமர்த்துவது கடினம். அதே போல தொழிலின் நிச்சயமின்மை பலரை வேலைக்கு வைக்க இடம் கொடுக்காது. இருப்போரையும் எல்லா வேலைகளையும் செய்ய வைக்கும். முக்கிய வேலைகள் அனைத்தையும் முதலாளியே செய்வார். இப்படி ஆரம்பிக்கும் பழக்கம் பலரைக் கால காலத்துக்கும் அதையே செய்யவைக்கும்.

பயம் எதற்கு?

தனி ஆளாய் எல்லாம் செய்வதில் உள்ள பெருமையும் தனித்தன்மையும் உங்களைக் கிறங்கடிக்கும். நேரம் பார்க்காமல் வேலை செய்வது பிடிக்கும். எல்லா அதிகாரமும் பொறுப்பும் உங்களிடம் சேரும். நீங்கள் இல்லாமல் ஒன்றும் நடக்காது என்ற நிலை வரும். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொழில் நடக்கும் என்று தோன்றும். மற்றவர்களை நம்பிக் கொடுத்தால் நம்மைப் போல வேலை செய்ய மாட்டார்கள் என்று நீங்களே செய்வீர்கள். வேலைப் பளு சேர, பணியாளர்களின் திறமையின்மையை குறை சொல்வீர்கள். நல்ல ஆட்கள் கிடப்பதில்லை எனச் சொல்லிச் சொல்லியே, நல்ல ஆட்களை இழப்பீர்கள்.

இந்த சுழற்சியில் சிக்கித்தான் பல சிறு தொழில்கள் ‘ஒற்றை ஆள்’ தொழில்களாய் குன்றிக் கிடக்கின்றன.

பல முதலாளிகள் தங்களைவிடத் திறமையான பணியாளர்களை ஏற்றுக்கொள்வதில்லை. தான் சொல்வதுதான் சரி; அதைக் கேட்டு நடப்பதுதான் பணியாளர்களின் கடமை என்று எண்ணுபவர்கள் மற்றவர்களின் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறுகிறார்கள். பலர் தங்கள் வேலையை பிரித்துக் கொடுத்தால் அதிகாரம் போய்விடும் என்று பயப்படுவார்கள். சிலர் பணியாளர்களிடம் எல்லாம் சொல்லிவிட்டால் தொழில் ரகசியம் தெரிந்துவிடும் என்று நினைப்பார்கள். எல்லாம் தெரிந்துவிட்டால் போட்டியாளர்கள் ஆகிவிடக்கூடும் என்றுகூட நினைப்பவர்கள் உண்டு.

ஒரு தலைக்கு பதில் பல தலைகள்

ஆனால் நிஜத்தில் உங்கள் பலம் உங்களிடம் உள்ள மக்கள்தான். தொழில் தொடங்கிய நாள் முதல் வரும் எல்லாச் சவால்களையும் தனி ஆளாக சமாளிக்க நினைப்பது முட்டாள்தனம். ஒரு தலைக்கு பதில் பல தலைகள் யோசித்தால் பல புதிய சிந்தனைகள் வரும். அவை அனைத்தையும் தலைவர் ஒப்புக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் எல்லா நேரத்திலும் உங்களுக்கு யோசனைகள் சொல்லக் கூடிய ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

நல்ல ஆலோசனைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரும். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடையும்போது கோபத்தில் அவர்களுக்குத் தெரியாமலேயே ஆலோசனைகளை அள்ளி வீசுவார்கள். கூட்டாளிகள் பிரச்சினையின்போது மாற்று வழிகள் சொல்லுவது உண்டு. எல்லோரையும்விடத் தொழிலில் ஊறித் திளைக்கும் பணியாளருக்குத்தான் அதிக யோசனைகள் இருக்கும். அதனால் பணியாளர்கள் சொல்லும் யோசனைகள்தான் மிகவும் சக்தி வாய்ந்தவை. புத்திசாலி முதலாளிகள் பணியாளர்களை ஊக்கப்படுத்தி, தொழிலுக்கு தேவையான முன்னேற்ற சிந்தனைகளை வளர்ப்பார்கள். அதில் தொழிலாளர்களுக்கு வளர்ச்சி உண்டு. தொழிலும் வளரும்.

சந்தை மாற்றம் முக்கியம்

புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு அனுபவம் மிக்க, சந்தையின் சிறப்பான பணியாளர்கள் கிடைப்பார்கள் என்று சொல்ல முடியாது. எல்லாரும் பெரிய நிறுவனங்களில் ஸ்திரமான வேலைக்கு செல்வதைத்தான் விரும்புவார்கள். இதனால்தான் நல்ல பணியாளர்களைப் பெற பல புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நல்ல சம்பளத்துடன், நிறுவனப் பங்குகளையும் அளிக்கிறார்கள். பெரிய கம்பெனிகளில் கிடைக்காத பெரும் பதவிகளைக் கொடுக்கிறார்கள். சில இடங்களில் கூடுதல் சம்பளமும் கொடுக்கிறார்கள். இவை எதற்காக? தொழில் தொடங்கியவர் மட்டும் தனியாகப் போராட முடியாது என்று உணர்ந்ததால்தான்.

அடுத்த கட்டப் பணியாளர்கள் சிறப்பாக இயங்கினால்தான் நிறுவனர் உள் வேலைகளைவிடத் தொழிலை வளர்க்கும் வேலைகளில் கவனம் செலுத்த முடியும். வரவு செலவுக் கணக்கைப் பார்த்துச் சுழித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தால் சந்தை மாற்றங்கள் தெரியாது. அதனால் கீழே உள்ளவர்களிடம் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, வியாபாரத்தைப் பெருக்கும் வியூகம் பற்றியும், அடுத்த கட்ட வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பது பற்றியும் யோசிக்கலாம்!

இரண்டு வழிகள்

பிறந்த குழந்தையை பேணுவது போலத்தான் புதிய நிறுவனத்தைப் பேணுவதும். ஆக, மக்கள் செல்வத்தை பேணுவது முதலாளியின் கடமை. பணியாளர்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்கள், முகவர்கள் என தொழில் சமந்தப்பட்ட அனைத்து மனிதர்களின் சிந்தனையும் திறனும் உங்கள் தொழிலுக்குத் தேவை.

ஆட்கள் கிடைப்பதில்லை என்று அங்கலாய்ப்பதைவிட, கிடைத்த ஆட்களுக்கு நன்கு பயிற்சியளித்து திறம்பட அவர்களிடமிருந்து உற்பத்தித்திறனை பெருக்குகிறோமா என்று முதலில் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

திறமையான ஆட்களை தேடுவது ஒரு வழி. இருக்கின்ற ஆட்களின் திறமையை பெருக்குவது இன்னொரு வழி. இரண்டு வழிகளும் மனித வளத்தை பெருக்கச் செய்யும். உங்கள் பணியாளர்களை நன்கு பார்த்துகொள்ளுங்கள், அவர்கள் உங்கள் தொழிலை நன்கு பார்த்துக் கொள்வார்கள்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...