Thursday, June 21, 2018

வாக்கிங் சென்றபோது கணவன் கண் எதிரிலேயே மனைவிக்கு நேர்ந்த கொடுமை!


துரை.வேம்பையன்

கரூர் அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்ட தம்பதியிடம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், கணவன் கண் எதிரிலேயே மனைவியிடம் ஆறரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.



கரூரை அடுத்த வெங்கமேடு காவல் சரகத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா (31). இவரது கணவர் பால்ராஜ். தம்பதியான இருவரும் நேற்று காலை நடைப்பயிற்சிக்காக அருகில் உள்ள வெண்ணெய் மலைப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது இருசக்கர மோட்டார் வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள், சங்கீதாவின் கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு வாகனத்தில் ஏறி தப்பித்துச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சியுற்ற சங்கீதா, உதவி கேட்டு கத்தினார். மர்மக் கும்பலை அவரது கணவர் பால்ராஜ் துரத்திக்கொண்டு சென்றார். ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் பைக்கில் தப்பிச் சென்றனர். நகையைப் பறிகொடுத்த சங்கீதா வெங்கமேடு காவல் நிலையத்தில் அளித்த தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதுகுறித்து தெரிவித்த கரூர்வாசிகள் சிலர், 'கரூர் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை தலைவிரிச்சாடுது. தினமும் இதுபோன்ற கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்கள் ஆள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளிலேயே நடைபெறுகின்றன. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம், தண்ணீர் கேட்பதுபோல் போய், அவர்கள் அசந்த நேரத்தில், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை அபகரித்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பிவிடுகிறார்கள். ஆனால், இப்படி தொடர் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத கரூர் காவல்துறை, பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகார்களுக்கும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், கொள்ளையர்கள் கொட்டம் கரூரில் அதிகமாகியுள்ளது" என்றார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 29.01.2026