Saturday, June 23, 2018

மாநில செய்திகள்

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக, சென்னையில் சி.பி.ஐ. விசாரணை தீவிரம்





லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட அதிகாரிகளின் பட்டியல் சேகரிப்பு டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், குட்கா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஜூன் 23, 2018, 05:45 AM

சென்னை,


குட்கா ஊழல் வழக்கு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்காகும்.

இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டன. சென்னை செங்குன்றத்தில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் போன்ற போதைப்பொருட் கள் அந்த குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

மேலும் குட்கா மற்றும் பான்பராக் விற்பனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டறியப்பட்டது. அந்த சோதனையின்போது, ரகசிய டைரி ஒன்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டெடுத்தனர். அந்த டைரியில் குட்கா விற்பனையில் வரி ஏய்ப்பு செய்வதற்கு அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடந்தையாக செயல்பட்ட தகவல்கள் இருந்தன.

மத்திய கலால் வரித்துறை, தமிழக உணவு பாதுகாப்பு துறை, சுகாதாரத்துறை, போலீஸ் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ரூ.47 கோடி வரை மாமூல் கொடுக் கப்பட்டதாக ரகசிய டைரியில் தகவல் எழுதப்பட்டு இருந்தது.

குட்கா ஊழல் வழக்கில் ஒரு அமைச்சர், 2 டி.ஜி.பி.க்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். குட்கா விற்பனைக்கு மாமூல் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார்கள். அந்த கடிதம் காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஐகோர்ட்டு உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி டெல்லி சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் குட்கா ஊழல் பிரச்சினை தொடர்பாக கடந்த மே மாதம் வழக்குப்பதிவு செய்தார். வழக்குப்பதிவு செய்தவுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார்கள். லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே பதிவு செய்திருந்த வழக்கு விவரங்களை சி.பி.ஐ. போலீசார் முதல்கட்டமாக கேட்டு அறிந்தனர்.

பின்னர் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் 8 பேர் சென்னையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். குட்கா ஊழல் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் பெயர் பட்டியலை சி.பி.ஐ. அதிகாரிகள் சேகரித்து வந்தனர்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, நேற்று சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் செயல்படும் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்துக்கு டெல்லியில் இருந்து வந்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர்.

உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். குட்கா ஊழல் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் பட்டியல் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் பெற்று கொண்டனர்.

இதேபோல் பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி முக்கிய ஆவணங்களை சேகரித்தனர்.

பின்னர் விசாரணையை முடித்துக்கொண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றுவிட்டனர்.

விரைவில் குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ‘சம்மன்’ அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு பாதுகாப்பு துறையை அடுத்து சுகாதாரத்துறை, போலீஸ்துறையை சேர்ந்த அதிகாரிகளிடமும், சி.பி.ஐ. போலீசார் ‘சம்மன்’ அனுப்பி விசாரணை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குட்கா ஊழல் வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கி இருப்பதால், இந்த வழக்கில் அடுத்தடுத்த திடீர் திருப்பங் கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Air India cancels flights to New York and Newark

Air India cancels flights to New York and Newark Press Trust of India New Delhi  25.01.2026 Air India has cancelled its flights to New York ...