Wednesday, June 6, 2018

சாரத்திலிருந்து கீழே விழுந்ததால் மூச்சு நின்ற இளைஞர் உயிர் பிழைத்த அதிசயம்: ஸ்ரீஇராமச்சந்திரா மருத்துவரின் சிகிச்சையால் தப்பினார்

Published : 05 Jun 2018 11:16 IST

சென்னை



தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மனோகரன்.

சாரத்திலிருந்து விழுந்தவருக்கு அந்த வழியாக வந்த ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை இதய நல மருத்துவர் நேரடியாக சிகிச்சை அளித்து உயிர் பிழைக்கச் செய்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பூந்தமல்லி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(46). பந்தல் போடும் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை காலை போரூர் மேம்பாலம் அருகே சாரத்தில் ஏறி வேலையில் ஈடுபட்டபோது கீழே விழுந்து மயங்கிக் கிடந்தார்.

அப்போது அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக காரில் வந்த ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை இதயநல மருத்துவர் டாக்டர் நாகேந்திர பூபதி இறங்கிச் சென்று பார்த்தார்.

சுற்றியிருந்தவர்கள் மின்சார அதிர்ச்சியால் மனோகரன் கீழே விழுந்திருக்கக் கூடும் என கூறியதைக் கேட்டு அவரை பரிசோதித்தார்.

அப்போது மனோகரனுக்கு நாடித்துடிப்பு இல்லாததும், மூச்சு இல்லாததும் தெரிந்தது. உடனே அவரது நெஞ்சை மீண்டும் மீண்டும் அழுத்தி செயற்கை முறையில் செயல்படச் செய்ய முயன்றார். ஆம்புலன்ஸை அழைப்பதற்காக அருகில் இருந்த சவீதா பல்கலைக்கழக மாணவர் ஒருவரிடம் நெஞ்சை தான் செய்தபடியே அழுத்திக் கொண்டே இருக்கச் சொல்லிவிட்டு ஸ்ரீ இராமச்சந்திரா அவசர சிகிச்சைப் பிரிவுக்கு போன் செய்தார்.

ஆம்புலன்ஸ் வந்தவுடன் அதில் அவரை ஏற்றி டிஃபிபிரிலேட்டர் மூலம் மின்சார ஷாக் கொடுக்கப்பட்டது. உடன் வாய் வழியாக குழாயை செலுத்தி நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது.

ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள மனோகரனுக்கு தற்போது செயற்கை சுவாசக் கருவி விலக்கப்பட்டு, நன்றாக குணமடைந்து வருகிறார். இன்று அவருக்கு ஆஞ்சியோகிராஃபி எடுக்கப்பட்டு, ஏற்கெனவே அவருக்கு இதய நோய் இருந்ததா என கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...