Wednesday, March 4, 2015

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 5) தொடங்குகிறது. மொத்தம் 8.43 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இந்தத் தேர்வு மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக 2,377 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும்.

இதில் முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும். 10.15 முதல் 1.15 வரை தேர்வு நடைபெறும்.

மாணவர்கள் 3 மணி நேரம் எந்தவித சிரமும் இல்லாமல் தேர்வு எழுதுவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் 3,000-க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதும் உதவியாளர்களைக் கேட்டுள்ளனர். அரசாணையின்படி, தகுதியுள்ள அனைவருக்கும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களே பெரும்பாலும் தேர்வு உதவியாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். எனவே, உதவியாளர்களை வழங்குவதில் எந்தவித சிரமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தேர்வு மையங்களுக்குத் தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை தனித்தேர்வர்களாக 42,693 பேர் எழுத உள்ளனர்.

60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்: தேர்வுப் பணிகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள், கல்வித் துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

10 தேர்வறைகளுக்கு ஒருவர் என்ற வீதத்தில் 4,500-க்கும் மேற்பட்டோர் தேர்வு மையங்களைக் கண்காணிக்க உள்ளனர். அதோடு, மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்களுக்கு தேர்வுப் பணிகளை மேற்பார்வையிட மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் ஏற்கெனவே தங்களுக்குரிய மாவட்டங்களுக்குச் சென்று தேர்வு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

மாணவிகள் அதிகம்: பிளஸ் 2 தேர்வை 3 லட்சத்து 90,753 மாணவர்களும், 4 லட்சத்து 52,311 மாணவிகளும் எழுத உள்ளனர். மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை 60 ஆயிரம் அதிகமாக உள்ளது. இந்தத் தேர்வை புழல் சிறைவாசிகள் 77 பேர் எழுதுகின்றனர்.

கூடுதல் நேரம்: இந்தத் தேர்வுகளில் கற்றலில் குறைபாடுடையவர்கள், பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுதும் உதவியாளர், ஒரு மொழிப்பாடம் தவிர்ப்பு, கூடுதலாக ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

விடைத்தாள்களைக் கொண்டுவர ஏற்பாடு: கடந்த ஆண்டைப் போலவே, தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு, அதே வாகனங்களில் விடைத்தாள் கட்டுகளை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் கட்டுகள் சேகரிக்கும் மையங்களுக்குக் கொண்டுசெல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில்...: சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 144 தேர்வு மையங்களில் 53 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

புதுச்சேரியில்...: புதுச்சேரியில் 33 தேர்வு மையங்களில் 14 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...