Thursday, March 12, 2015

ஏடிஎம்மில் கள்ள நோட்டு: வாடிக்கையாளரை குற்றவாளி ஆக்குவதா?- ரிசர்வ் வங்கி, போலீஸ் அதிகாரி விளக்கம்



வங்கி நடவடிக்கைகள் பொது மக்களுக்கு எந்த அளவுக்கு எளிதாக்கப்பட்டுள்ளதோ அதே அளவுக்கு சில நேரங்களில் பெரும் தலைவலியையும் ஏற்படுத்தி விடுகிறது. அண்மைக்காலமாக வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் போது ஒரு சில கள்ள நோட்டுகளும் சேர்ந்து வருகின்றன. அவற்றை மாற்ற சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பொதுமக்கள் சென்றால் அவர் களையே குற்றவாளிகள் போல் வங்கிகள் நடத்துவதாக புகார்கள் வந்துள்ளன.

உள்ளகரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அப் பகுதி யில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கியின் ஏடிஎம் ஒன்றில் கடந்த வாரம் பணம் எடுத்திருக்கிறார். மறுநாள் அதே வங்கியின் ஆதம்பாக்கம் கிளையில் வேறு ஒருவரின் கணக்கில் பணம் செலுத்தச் சென்றிருக்கிறார். அவர் தந்த பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டு ஒன்று இருப்பதாக வங்கி ஊழியர்கள் கூறியிருக்கின்றனர். பின்னர் அவரை மேலாளரின் அறைக்கு அழைத்துச் சென்றனர். கள்ளநோட்டு என்று சொல்லப்பட்ட 500 ரூபாயை வாங்கிய மேலாளர், உடனே அதை கிழித்துப் போட் டிருக்கிறார். தொழிலதிபருக்கு பேச வாய்ப்பே தரப்படவில்லை. வங்கியை விட்டு வெளியில் வந்து யோசித்துப் பார்த்த பிறகுதான், அந்தப் பணம் அதே வங்கியின் உள்ளகரம் பகுதி ஏடிஎம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டது என்பது ஞாபகம் வந்திருக்கிறது. வங்கி மேலாளரை போனில் தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவிக்க முயன்றிருக்கிறார்; முடியவில்லை.

இதேபோல பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம்-ல் பணம் எடுத்த வேறு ஒருவர், தனது ஊழியர்களுக்கு அந்த பணத்தை சம்பளமாக கொடுத்திருக்கிறார். அதில் ஒரு ஊழியர் வங்கிக்குச் சென்றபோது 500 ரூபாய் நோட்டு கள் மூன்றை வாங்கி, கள்ளநோட்டு என்று சொல்லி கிழித்துப் போட்டி ருக்கிறார்கள். அந்த ஊழியருக்கு 1500 ரூபாய் நஷ்டம். போலீஸ் பிரச்சினை வரும் என்று சொல்லி பயமுறுத்தி வங்கியில் இருந்து அவரை அனுப்பிவிட்டார்கள்.

ஆனால், வங்கியின் ஏடிஎம் களில் கள்ள நோட்டுகளும் சேர்ந்து வருகின்றன என்ற புகாரை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன. ஏடிஎம்-ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது? யாரை அணுக வேண்டும்? இந்த கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா? என்பது குறித்து சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டோம். அவர்கள் அளித்த விவரம்:

ஏடிஎம் வாயிலாக கள்ள நோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. காரணம், ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் முன் அவை ஏடிஎம் ஃபிட் கரன்சிகளாக (ATM fit currency) மாற்றப்படுகின்றன. இதன்படி, கள்ள நோட்டுகள் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுவிடும். இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக் கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும்.

எந்த வங்கியின் ஏடிஎம் இயந்திரத் துக்குள் பணம் நிரப்பப்படுகிறதோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்படுகிறது. இந்த பணியை செய்யும் சில ஏஜென்சிகள் வங்கி யிலிருந்து மொத்தமாகப் பணத் தைப் பெற்று, அதை அந்த வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களுக்குள் நிரப்புகின்றன. இந்த ஏஜென்சிகளின் நம்பகத்தன்மையையும், உண்மைத் தன்மையையும் வங்கிகள் சோதனை செய்த பின்னரே இந்த வேலையைத் தருகின்றன.

வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ள நோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப்படுத்துவதற்கு முன்னர், ஏடிஎம் மையத்தில் இருக்கும் ரகசிய கேமராவில் சந்தேகத்துக்குரிய ரூபாய்களில் உள்ள எண்களைக் காட்டுவது அவசியம். ஏனெனில், ஏடிஎம் இயந்திரத்துக்குள் போடப்படும் ரூபாய்களில் இருக்கும் எண்கள் பதிவு ஆகாது.

அதனால் சந்தேகத்துக்குரிய தாள்களை கேமராவில் காண் பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசாரிக்கும் போது உங்களின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும். பின்னர் அந்த ஏடிஎம் எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.

ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் சந்தேகத்துக்குரிய ரூபாய் நோட்டுகளுடன் வங்கியை அணுகியதும், அவர்கள் அந்த ரூபாய் கள்ள நோட்டுதானா என்று பரிசோதிப்பார்கள். கள்ள நோட்டுதான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு, அந்த ரூபாய் நோட்டுகளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள். உங்களிடம் பெறப்பட்ட ரூபாய்த் தாள் அந்த வங்கியின் ஏடிஎம்-ல் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்று விசாரித்து தெரிந்துகொண்டு அந்த கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய் நோட்டுகளை தருவார்கள். இந்த விசாரணையில் கள்ள நோட்டை கொண்டு வந்தவர் மீது சந்தேகம் வந்தால் அவர் மீது வங்கியானது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்.

ஏடிஎம்களில் கள்ள நோட்டுகள் வந்தால் அதை வங்கி மேலாளர்கள் உடனே கிழித்து எறியக் கூடாது. முறைப்படி விசாரித்து அது கள்ள நோட்டு என்று உறுதி செய்த பிறகே கிழித்து எறிய வேண்டும். இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். அதையும் மீறி பொதுமக்கள் அளிக்கும் கள்ள நோட்டை கிழித்தால் அது குறித்து பொதுமக்கள் வங்கி குறை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கலாம்.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு, www.rbi.org.in, www.paisabolthahai.rbi.org.in என்கிற ரிசர்வ் வங்கி இணையதளங்களை பார்க்கலாம்.

இவ்வாறு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வங்கிக்கு எதிராக நடவடிக்கை

மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஏடிஎம்-ல் பணம் எடுக்கும்போது கள்ள நோட்டு சிக்கினால் சம்பந்தப்பட்ட வங்கியின் கிளைக்குச் சென்று புகார் தெரிவிக்கலாம். அப்போது, வங்கி நிர்வாகம் அவர்கள் மீது பழி சுமத்தினால் தகுந்த ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி வங்கிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் இவ்விஷயத்தில் பயப்படத் தேவையில்லை’’ என்றார்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...