Thursday, March 19, 2015

சிட்டுக்குருவிகளை காப்பாற்றுவோம்

ஒருகாலத்தில் செல்வசெழிப்புக்கு எடுத்துக்காட்டாக சிட்டுக் குருவிகளைத்தான் சொல்வார்கள். எங்கு சிட்டுக்குருவிகள் அதிகமாக இருக்கிறதோ, அங்கு விவசாயம் செழித்தோங்குகிறது என்பார்கள். பொதுவாக காகமும், சிட்டுக்குருவியும் மனிதர்கள் வாழும் பகுதிகளில்தான் அதிகம் இருக்கும். மக்களை சார்ந்தே இதன் வாழ்க்கையும் இருக்கும். சிட்டுக்குருவிகள் அடர்ந்த காடுகளிலோ, மலைகளிலோ, மனித நடமாட்டம் இல்லாத இடங்களிலோ பெரும்பாலும் காணப்படுவதில்லை. வீடுகள் அதிகமாக இருக்கும் இடங்களில் அதிலும் குறிப்பாக, உணவு தானியங்கள் சிதறிக்கிடக்கும் இடங்களில்தான் அதிகமாக வசிக்கும். மனிதர்களோடு பழகாவிட்டாலும், மனித நடமாட்டம் இருக்கும் இடத்தில்தான் அதிகமாக காணப்படும். இந்த செல்லக்குருவிகள் பயிர்களில் உள்ள கதிர்களை கொத்துவது கிடையாது. வீணாக கிடக்கும் உணவு தானியங்கள், சின்னஞ்சிறு பூச்சிகளைத்தான் கொத்தி தின்னும். மென்மையான இதயம் கொண்ட சிட்டுக்குருவிகள், வீடுகளில் ‘கீச் கீச்’ என்று கத்திக்கொண்டு, தத்தி தத்தி நடந்துவந்து கீழே கிடக்கும் உணவு தானியங்கள், சிதறிக்கிடக்கும் உணவுப்பொருட்களை கொத்தி கொத்தி உண்ணும் அழகை காண கண்கோடி வேண்டும் என்பார்கள். அவ்வப்போது வீடுகளில் சிந்திக்கிடக்கும் தண்ணீரையும், பாத்திரங்களில் உள்ள தண்ணீரையும் போய் குடித்துக்கொண்டே இருக்கும். தண்ணீர் இல்லையென்றால், சிட்டுக்குருவி இல்லை. மைனா, லவ் பேர்ட்ஸ், கிளி, கோழி போல வீடுகளில் கூண்டுகளில் அடைத்து வளர்க்க முடியாது என்றாலும், தானாகவே வீடுகளில் உயரமான இடங்களில் வைக்கோல், சிறு சிறு குச்சிகள், கந்தல் துணிகளை வைத்து கூடு கட்டி குடியிருக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக சிட்டுக்குருவி இனம் அழிந்துகொண்டே இருக்கிறது. இதற்கு காரணம், நவீன வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடுகட்ட எந்தவித வசதியும் இல்லை. அவைகளுக்கான உணவுப்பொருட்கள் வீடுகளில் சிந்திக் கிடப்பதுமில்லை, யாரும் போடுவதும் இல்லை. தண்ணீரும் கிடைப்பதில்லை. மேலும், இந்த சிட்டுக்குருவிகள் மின்சார விசிறியில் சிக்கியும் உயிரிழந்துவிடுகிறது. செல்போன் டவரில் இருந்து வெளியாகும் காந்த கதிர்களை சிட்டுக் குருவிகளின் மென்மையான இதயம் தாங்கமுடியாமல் நின்றுவிடுகிறது. எல்லாவற்றையும் விட பெரிய கொடுமை என்னவென்றால், செக்ஸ் பலத்துக்கு ‘சிட்டுக்குருவி லேகியம்’ என்று இந்த சிறு பறவைகளை கொன்று தயாரிக்கிறார்கள். அழிந்துவரும் இந்த சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்ற ‘உலக சிட்டுக்குருவி தினம்’ நாளை 20–ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த இனத்தை காப்பாற்றுவது மக்களிடம் தான் இருக்கிறது. ஓரிரண்டு சிட்டுக்குருவிகள் தென்படும்போது சிறிது தானியத்தை 2 நாட்கள் தொடர்ந்து போட்டால் வரத் தொடங்கிவிடும். பல இடங்களில் அழிந்துவரும் சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்ற பறவை ஆர்வலர்கள் சிறிய மண்பானை குடுவைகளை வீடுகளில் வைப்பதை எல்லோரும் பின்பற்றலாம். கோடைகாலத்தில் இதுபோன்ற பறவைகளுக்காக வீடுகளில் உயரமான இடத்தில் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்தால் சிட்டுக் குருவிகளுக்கு புத்துயிர் கொடுக்கமுடியும். கோடையில் மக்களுக்காக தண்ணீர் பந்தல்களை வைக்க அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் முற்படும் போது, வாயில்லா இந்த ஜீவன்களுக்கும் தண்ணீர் வழங்கினால், இந்த உயிர்களையும் காப்பாற்றலாமே!

சென்னையில் இந்திய கால்நடைகளை நேசிக்கும் இயக்கம், இதற்காக பொதுமக்களுக்கு ஆங்காங்கு வைக்க குவளைகள் வழங்கியது. இதுபோல, சென்னை மாநகராட்சி ஆணையராக ராஜேஷ் லக்கானி இருந்தபோது, மாநகராட்சி பூங்காக்களில் சிட்டுக்குருவி போன்ற பறவைகளுக்காக மரங்களில் அவைகளுடைய கூடுகள்போல வைத்து, உணவு தானியங்கள் போடுவதற்கும், தண்ணீர் வைப்பதற்கும் வசதி செய்ய முயற்சி எடுத்தார். அவர் மாற்றப்பட்டபோது, அந்த முயற்சியும் நின்றுபோனது. அவரை பின்பற்றி, சென்னை உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையர்கள், செயல் அதிகாரிகள் பூங்காக்களில் இந்த வசதிகளை செய்துகொடுத்தால், பொதுமக்களும் ஆர்வத்தோடு பங்கேற்பார்கள். ‘சிட்டுக்குருவிகளை காப்பாற்றுவோம்’, செல்ல பறவைகளுக்கு வாழ்வு கொடுப்போம்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...