Sunday, March 8, 2015

மகளிர் தினம்: இந்தியாவின் ஒரே முஸ்லிம் பெண் விமானி என்ன சொல்கிறார்!



'இந்த சமுதாயம் உங்களை என்னவாகவும் நினைத்து விட்டு போகட்டும்... ஆனால் உங்கள் கனவுகளை இந்த சமுதாயத்தால் அழிந்து விட மட்டும் அனுமதித்து விடாதீர்கள் '' என்கிறார் இந்தியாவின் ஒரே முஸ்லிம் விமானியான ஷாரா ஹமீத் அகமது.

''என்னை சந்திப்பவர்களிடம், நான் எனது பெயரை சொன்னால், உங்கள் பெயரை திருப்பி ஒருமுறை சொல்லுங்கள் என்பார்கள். பிறகு அந்த பெயரை கூர்ந்து கேட்பார்கள். நீங்கள் எப்படி விமானியாக என்று எதிர்முனையில் இருப்பவரின் புருவம் விரியும். ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்து கொண்டு இவர் எப்படி இந்த துறைக்கு வந்தார் என்பதுதான் அவர்களது ஆச்சரியத்துக்கு காரணம். சாரா என்றால் கிறிஸ்தவப் பெண் என்று பலரும் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அக்மார்க் இஸ்லாமிய பெண்ணான நான்தான் 600 பெண் விமானிகள் பணிபுரியும் இந்திய விமானத்துறையில் உள்ள ஒரே இஸ்லாமிய பெண்'' என சிலாகிக்கிறார்.

ஆனால் விமானியாக சாரா பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. முதலில் குடும்பத்தினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு. பெண் என்பவள் திருமணம் புரிந்து கொண்டு குழந்தைகளை பெற்றுத்தள்ள வேண்டிய எந்திரம் என்பதுதான் அவரது குடும்பத்தாரின் பார்வை. முதலில் தந்தை ஹமீத் அகமதுவிடம் இருந்துதான் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் சாராவின் மனஉறுதியை பார்த்து,சாரா மீது தந்தைக்கு இரக்கம் வந்திருக்கிறது.

தொடர்ந்து சாராவின் தந்தை, அமெரிக்காவில் வசிக்கும் தனது விமானி நண்பர் ஒருவரிடம் தனது மகளின் ஆசை குறித்து பேசியிருக்கிறார். அந்த நண்பர், ''டேய் நீ கொடுத்து வைத்தவன்டா... உன் மகள் விமானியாக ஆசைப்படுகிறாளா? எந்த தடையும் போடாதே... அவளை முதலில் விமானியாக்கி விட்டு மறுவேலை பார்'' என்று உத்தரவே போட்டிருக்கிறார். அதற்கு பின்னரே, சாராவுக்கு தந்தையிடம் இருந்து பச்சை சிக்னல் கிடைத்திருக்கிறது. அப்படிதான் சாராவின் விமானிக் கனவு பறக்கத் தொடங்கியது.

கடந்த 2007ஆம் ஆண்டுவாக்கில் இரட்டைகோபுரம் தகர்ப்பு காரணமாக அமெரிக்காவில் இஸ்லாமிய மாணவ- மாணவிகளுக்கு படிக்க விசா கிடைப்பது கடினமாக இருந்தது. ஆனால் சாராவுக்கு அந்த பிரச்னையெல்லாம் எழவே இல்லையாம். எளிதாகவே விசா கிடைத்ததாம். படிப்பு முடிந்ததும் தாய்நாட்டில் விமானியாக வேலை பார்க்க வேண்டும் என்ற லட்சியத்துடனே சாரா இந்தியா திரும்பினார்.

தற்போது ஸ்பைஸ்ஜெட்டில் பணிபுரிந்து வரும் 25 வயது சாராவை நிறைய பேர் திருமணம் செய்து கொள்ள முன் வருகிறார்கள். ஆனால், அவர்கள் முன் வைக்கும் ஒரே நிபந்தனை, சாரா வேலையை விட்டு விட வேண்டும் என்பதுதான். இப்படி கேட்பவர்களிடம் உங்கள் மகன் வேலையை விட்டு விட்டு எனது மகளுடன் செட்டிலாகி விடுவாரா? என்று திருப்பி கேட்கிறார் எனது தந்தை என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார் சாரா.

முஸ்லிம் பெண்களுக்கு என்ன அறிவுரை சொல்ல நினைக்கிறீர்கள் என்றால், ''இந்த சமுதாயம் உங்கள் கனவுகளை கொலை செய்ய அனுமதித்து விடாதீர்கள். ஏனென்றால் நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள் சாராவைப் போல'' என்கிறார்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...