Thursday, March 19, 2015

இந்த நாட்டை திருத்தவே முடியாது.. வேண்டாம் வந்துடுங்கப்பா!- டிராபிக் ராமசாமியின் மகள் கண்ணீர்



டிராபிக் ராமசாமி.. சமூக அவலங் களுக்கு எதிராக போராட முடியாமல் தவிக்கும் பெரும்பான்மை இந்தியச் சமூகத்தின் கதாநாயகன். அரசு மற்றும் தனிநபர் அதிகாரங்களுக்கு எதிராக இவர் நடத்திய போராட் டங்கள் சமூகத்தை உலுக்கியிருக்கின் றன. சென்னையில் ஒழுங்குமுறை இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க வைத்தது, தறிகெட்டு ஓடிய மீன்பாடி வண்டிகளுக்கு தடையாணை பெற்றது என இவர் சாதித்தவை ஏராளம். அதற்காக இவர் கொடுத்த விலையும் மிக மிக அதிகம். பலமுறை தாக்குதலுக் குள்ளானார். காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக தனது குடும்பத்தையே பிரிந்தார். 40 ஆண்டுகளாக குடும்பத்துக்கும் அவருக்கும் பெரியதாக பிணைப்பு இல்லை. எப்போதாவது வீட்டில் தலைகாட்டினால் உண்டு. ஒரே மகள் விஜயா. திருமணமாகி கணவர், 2 குழந்தைகளுடன் வசிக்கிறார். டிராபிக் ராமசாமியின் மனைவியும் அவர்களுடனே தங்கியுள்ளார்.

‘தி இந்து’வுக்காக விஜயாவை சந்தித்தோம். அப்பா டிராபிக் ராமசாமி பற்றி கேட்டதும் கலங்கிய கண்களுடன் பேசத் தொடங்கினார்..

‘‘அப்பான்னு ஒருத்தர் இருக்கற தையே டிவி, நியூஸ் பேப்பர்ல பார்த்துதான் தெரிஞ்சிக்க வேண்டியி ருக்கு. அதுவும் நல்லபடியாக தகவல் வருதா? டிராபிக் ராமசாமி மீது ரவுடிகள் தாக்குதல், காவல் துறையினர் கைது நடவடிக்கை - இப்படித்தான் தகவல் வருது. எந்த நேரமும் பதைபதைப்பா இருக்குங்க. நிம்மதியா தூங்க முடியலை. சரியாக சாப்பிட முடியலை.

நான் குழந்தையா இருந்தப்பவே அப்பா வீட்டுல தங்க மாட்டார். பொதுப் பிரச்சினைன்னு சுத்திட்டே இருப்பார். அதனால தனிமை யிலதான் வளர்ந்தேன். அம்மாவுக் கும் பெருசா விபரம் தெரியாது. இடையிடையே பிரச்சினை வேற. கும்பலா வந்து வீட்டை அடிச்சி, நொறுக்கிட்டுப் போவாங்க. காது கூசுற அளவுக்கு திட்டிட்டுப் போவாங்க. கண்டதை எல்லாம் வீட்டுக்குள்ள எறிவாங்க. நாங்க ஆச்சாரமான குடும்பம். எல்லாத்தை யும் தாங்கிண்டோம்.

அப்ப நான் வயசுப்பொண்ணு. வெளியே தலைகாட்ட முடியலை. உசுரை கையில பிடிச்சிட்டு இருந் தோம். வேற வழியில்லாமதான், நம்மால நம்ம குடும்பத்துக்கு பிரச்சினை வேண்டாம்னு அப்பா வீட்டை விட்டு வெளியேறிட்டார். 40 வருஷம் ஆச்சு... சிறுநீரகக் கோளா றுன்னு மூணு வருஷத்துக்கு முன்னாடி வீட்டுக்கு வந்து தங்கி னார். வந்துட்டாரேன்னு சந்தோஷப் பட்டோம். ஆனா, 6 மாசம்கூட அவரை இருக்க விடலை. கோயில் ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்டார்ன்னு 300 பேர் கும்பலா வந்து வீட்டை தாக்கிட்டுப் போனாங்க. திரும்பவும் கிளம்பிட்டார்.

அவர் எங்கே தங்குறார், எங்கே தூங்குறார், எங்கே சாப்பிடுறார்ன்னு எதுவுமே தெரியலை. நானும் அம்மாவும் ஜெயலலிதா ரசிகைகள். ஜெயலலிதான்னா அம்மாவுக்கு ரொம்ப இஷ்டம். அவங்க ஆட்சியில தான் அதிகாலை நாலு மணிக்கு வெறும் லுங்கியோட எங்க அப் பாவை கைது செஞ்ச கொடுமை நடந்திருக்கு.

மாடியில இருந்து இறக்கி கூட்டிப்போக பொறுமை இல்லாம மூணாவது மாடியிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றிருக்காங்க. ஆஸ்பத்திரி யில யூரின் டியூபை கழட்டி எறிஞ் சிருக்காங்க. அவருக்கு செக்யூ ரிட்டி போட்டிருக்காங்கங்கிறது எல்லாம் சும்மாங்க. அந்த செக்யூரிட் டிக்கே இன்னைக்கு பாதுகாப்பு இல்லை.

கடைசியாக உங்க மூலமா அப்பாகிட்ட ஒரு கோரிக்கை வைக் கிறேன். ‘அப்பா, ஒரு பொம்பளைப் புள்ளைக்கு அப்பான்னா எவ்வளவு ஆசை இருக்கும். அதுவும் ஒத்தப் பிள்ளை நான். அதைக்கூட ஆராதிக்க உங்களுக்கு நேரம் இருந்ததில்லை. எனக்கு நினைவு தெரிஞ்சு, நீங்க என்னை தூக்கிக் கொஞ்சினது இல்லை. ஒரு முத்தம் கொடுத்திருக்கீங்களா? வேண்டாம்ப்பா.. இந்த நாட்டை திருத்தவே முடியாது. இங்கே யாருக்கும் குறைந்தபட்ச மனசாட்சி கூட கிடையாது. டிவிட்டரில், வாட்ஸ் அப்பில் பாராட்டுவாங்க. ஆனா, பிரச்சினைன்னா விட்டுட்டு ஓடிடுவாங்க. பணம், காசு எதுவும் எங்களுக்கு வேண்டாம். நீங்க உசுரோட வந்தா அதுபோதும். என்னைதான் தூக்கி வெச்சி கொஞ்சலை. உங்க பேரப் பிள் ளைங்க ரொம்ப எதிர்பார்க்குது. வந்துடுங்கப்பா...’’ என உருக்கமாக பேசினார் விஜயா.

டிராபிக் ராமசாமியிடம் பேசி னோம். “அவங்களுக்கு பிரச் சினை வேண்டாம்னுதான் குடும்பத் தைவிட்டு ஒதுங்கிட்டேன். எனக்கு மட்டும் பாசம் இல்லையா? ஆனா, அவங்க மட்டுமா என் குடும்பம்? இந்த சமூகமே என் குடும்பம் இல்லையா... நான் பெத்த குழந்தைகளை படைச் சவன் பார்த்துப்பான்...” என்றார் யதார்த்தமாக.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...