Monday, March 16, 2015

கிரீன் டீ இன்றைய இளைஞர்களின் சாய்ஸ்!

கருப்பட்டி காபி, சுக்கு காபி, இஞ்சி டீ, கருஞ்சீரக கஷாயம் குடித்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது... இது கிரீன் டீ காலம்! குண்டு உடம்பைக் குறைக்க, சரும சுருக்கமின்றி இளமையுடன் இருக்க என ஏராள விளம்பரங்களுடன் வரும் கிரீன் டீ இன்றைய இளைஞர்களின் சாய்ஸ்!

பல தரப்பினரும் கொண்டாடும் கிரீன் டீ உண்மையில் உடலுக்கு நன்மை செய்கிறதா? அதை எவ்வாறு அருந்த வேண்டும்? ஒரு நாளைக்கு எத்தனை முறை பருகலாம்?உணவியல் நிபுணர் அபிநயாராவிடம் கேள்விகளை வைத்தோம்.

‘‘கமீலியா சினஸிஸ் என்ற தாவரத்தின் இலைகளில் இருந்து கிரீன் டீ தயாரிக்கப்படுகிறது. முதன்முதலில் சீனாவில்தான் கிரீன் டீ பழக்கம் தோன்றியது. கொதிக்கும் நீரில் இலைகளை கிள்ளிப்போட்டு கிரீன் டீ தயாரித்தார்கள். அங்கிருந்து படிப்படியாக மற்ற ஆசிய நாடுகளுக்குப் பரவியது. கடந்த 2 ஆண்டுகளில்தான் இந்தியாவில் கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உடல்நலம் குறித்த அக்கறையும், கிரீன் டீக்கு பெரிய அளவில் செய்யப்படும் விளம்பரங்களும்தான் முக்கிய காரணம்.

கிரீன் டீ ‘ஆன்டிஆக்சிடென்ட்’ ஆகச் செயல்படுகிறது. உடலில் உள்ள ‘ஃப்ரீ ரேடிகல்ஸ்’ எனப்படும் நச்சுப்பொருட்கள் செல்களை பாதிக்காமல் தடுக்கிறது. ஃப்ரீ ரேடிகல்ஸ் ஆக்சிடைஸ் அடைந்து செல்களை பாதித்தால், உடலில் உள்ள கொழுப்புகள் கரையாமல் தங்கிவிடும். இதனால் பருமன் ஏற்படும். போதுமான அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் முறையாக நடந்து, உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும். இதனால், உடலில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் தடுக்கவும் கிரீன் டீ உதவுகிறது.

கொழுப்புகளை கரைத்து பருமன் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மையும் கிரீன் டீக்கு உண்டு. இதனால்தான் எடை அதிகமுள்ளவர்களுக்கு கிரீன் டீ குடிக்கச் சொல்லி அறிவுறுத்துகிறோம். எடை குறைவானவர்களும் கிரீன் டீ அருந்தலாம். பொதுவாக 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கிரீன் டீ குடிக்கலாம்.உடலை எதிர்ப்பு சக்தியுடன் வைத்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் பழங்கள், பச்சைக்காய்கறிகள் போன்றவற்றிலும் இருக்கிறது என்பதால், சமச்சீர் உணவு அவசியம். வைட்டமின் சி, வைட்டமின் இ ஆகிய சத்துகளும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகளாக செயல்படக்
கூடியவை.

வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்கள், வைட்டமின் இ அதிகமுள்ள பாதாம் பருப்பு, சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைஉணவில் சேர்ப்பது நலம் தரும். கிரீன் டீக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. நீரிழிவு பிரச்னை உள்ளவர்களும், நீரிழிவு வருவதற்கு முந்தைய நிலையில் உள்ளவர்களும் கிரீன் டீ அருந்தி பயன் பெறலாம். வயதாகும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்கள் வராமல் தடுக்கும் வேலையையும் கிரீன் டீ செய்கிறது. இப்படி ஆன்டி ஏஜிங் காரணியாகவிளங்குவதால், அழகு சாதனப்பொருட்கள் பலவற்றில் மூலப்பொருளாக கிரீன் டீ சேர்க்கப்படுகிறது.

கிரீன் டீ பைகளை சுடுநீரில் மூழ்கச் செய்து, அதில் கிடைக்கும் இயற்கையான டீயைக் குடிப்பதே நல்லது. அதிகபட்சம் 3 வினாடிகளுக்கு மேல் டீ பைகளை நீரில் மூழ்கச்செய்யக் கூடாது. சிலர் கிரீன் டீயில் சர்க்கரையோ, தேனோ கலந்து குடிப்பார்கள். இதனால் கிரீன் டீ உடலை ‘டீடாக்ஸ்’ செய்து நச்சுகளைவெளியேற்றும் தன்மையை இழந்துவிடும். எதுவும் கலக்காமல் லேசான துவர்ப்புத் தன்மையுடன் கூடிய கிரீன் டீ குடிப்பதே நல்லது. இருப்பினும், சிறிய துண்டு எலுமிச்சைச்சாறு பிழிந்து குடிக்கலாம். இது நச்சுகளை வெளியேற்றும் தன்மையை அதிகப்படுத்தும்.

அதிகபட்சம் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கப் மட்டுமே குடிக்க வேண்டும். ஒரு கப் என்பது 150 முதல் 200 மி.லி. வரை மட்டுமே. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே? கிரீன் டீயிலும் கஃபைன் என்னும் வேதிப்பொருள் உள்ளது. அதிகமாக கஃபைன் உடலில் சேர்ந்தால் உணர்வூக்கியாகச் செயல்பட்டு தூக்கம் வருவதைக் கெடுக்கும். மன அழுத்தம், குழப்பம், பதற்றம் உள்பட மனநலம் சார்ந்த பல பிரச்னைகளைஉருவாக்கும். கர்ப்ப காலத்திலும், பால் கொடுக்கும் காலகட்டத்திலும் கிரீன் டீயை தவிர்ப்பது நல்லது. இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் போன்றவை கர்ப்ப காலத்தில் குறைவாக இருக்கும்.

அப்போது கிரீன் டீ அருந்தினால், இதிலுள்ள டேனின் என்ற வேதிப்பொருள் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் போன்ற சத்துகள் உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுத்துவிடும். இதனால் சத்துக்குறைபாடு ஏற்பட்டு கர்ப்பம் கலைவதோ, குறைப் பிரசவமோ கூட ஏற்படலாம். உணவு சாப்பிடும் ஒரு மணி நேரத்துக்கு முன் அல்லது உணவு சாப்பிட்ட பின் ஒரு மணி நேரம் கழித்தே கிரீன் டீ அருந்த வேண்டும். சாப்பிட்ட உடனே அருந்தினால் உணவில் உள்ள சத்துகள் உறிஞ்சப்படுவதை வெகுவாகக் குறைத்துவிடும்.

கிரீன் டீயில் ஆன்டி-பாக்டீரியல் காரணிகளும், ஆன்டி-ஃபங்கல் காரணிகளும் இருப்பதால், பற்களில் சொத்தை விழாமல் இருக்கச் செய்யும். ஆனால், அதிகமாக கிரீன் டீகுடித்தால் பற்களில் கறையை ஏற்படுத்தும். கிரீன் டீ பல்வேறு சுவைகளில் கிடைக்கிறது. ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற இயற்கையான பழச்சாறு சுவைகளில் கிடைக்கும் கிரீன் டீயை அருந்துவதால் வைட்டமின் சத்துகள் சற்றுக் கூடுதலாக கிடைக்கும்...’’

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...