Sunday, April 16, 2017

போலி சான்றிதழ் மூலம் அரசு வேலை 25 ஆண்டு ஊழியருக்கு அபராதம்

பதிவு செய்த நாள்15ஏப்  2017   22:37

சென்னை, போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்து, 25 ஆண்டுகளாக பணியாற்றியவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவு தொகை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலுார் மாவட்டம், ராணிப்பேட்டை அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில், அலுவலக உதவியாளராக சுப்ரமணியன் என்பவர், 1982ல் பணியில் சேர்ந்தார். கடைசியாக, 2007ல், அகரத்தில் உள்ள, அரசு உயர்நிலை பள்ளியில் பணியாற்றினார். 25 ஆண்டுகளாக பணியில் இருந்துள்ளார்.

இவரது பிறந்த தேதி, கல்வி தகுதி குறித்து, 2005 டிசம்பரில் புகார் வந்தது. போலி ஆவணங்களை சமர்பித்து, வேலையில் சேர்ந்ததாக, புகார் கூறப்பட்டது. இதையடுத்து, சுப்ரமணியனிடம் விளக்கம் பெறப்பட்டது.போலி ஆவணங்களை சமர்பித்திருப்பதாக, கல்வித்துறை முடிவு செய்து, 2007 ஆகஸ்ட்டில், சுப்ரமணியத்தை பணியில் இருந்து விடுவித்து, வேலுார் மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்ரமணியன் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் தாக்கல் செய்த, மாற்று சான்றிதழில் உள்ள முத்திரையில், 'தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பள்ளிகொண்டா' என, குறிப்பிடப்பட்டுள்ளது. 1970ல், இந்த சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 என அழைக்கப்படும், மேல்நிலைப் பள்ளி முறை, 1978 - 79ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன், எஸ்.எஸ்.எல்.சி., என, இருந்தது. அப்படி இருக்கும் போது, 1970ல் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழில், மேல்நிலைப் பள்ளி என, குறிப்பிட்டு வழங்கியிருக்க முடியாது.மனுதாரர் சமர்ப்பித்த மாற்று சான்றிதழ், போலியானது தான். போலி சான்றிதழை சமர்ப்பித்து, வேலையில் சேர்ந்து, 25 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார். 

அவர் செய்த பாவத்துக்காக, கிரிமினல் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால், கல்வி துறை அதை மேற்கொள்ளவில்லை.இந்த கட்டத்தில், கிரிமினல் வழக்கு நடவடிக்கை எடுக்க தேவையில்லை என, இந்த நீதிமன்றமும் கருதுகிறது. அவரை, பணியில் இருந்து விடுவித்த உத்தரவு சரியானதே. இந்த உத்தரவு பிறப்பித்த பின், விருப்ப ஓய்வு அளிக்கும்படி, மனுதாரர் கேட்டுள்ளார். அவ்வாறு கோருவதில் நியாயம் இல்லை.எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சட்டவிரோத செயல் மூலம் வேலையில் சேர்ந்து, 25 ஆண்டுகளாக ஆதாயம் அடைந்தாலும், அதை வசூலிப்பதற்கு பதில், வழக்கு செலவு தொகையாக, 50 ஆயிரம் ரூபாய் விதிக்கிறேன். அந்த தொகையை, உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு செலுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...