Sunday, April 9, 2017

ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்கள் சிக்கியது பற்றி தேர்தல் கமிஷனுக்கு வருமான வரி இலாகா அறிக்கை அனுப்பியது. 
 
சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை மாலையுடன் அங்கு பிரசாரம் ஓய்கிறது.

பண பட்டுவாடா புகார்

கடந்த ஒரு வாரமாக, ஆளும் கட்சி தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தன. ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் ரொக்க பணம் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு வழங்க எங்கிருந்து பணம் வருகிறது?, எப்படி கொண்டு வரப்படுகிறது?, எப்போது வினியோகிக்கப்படுகிறது? என்பதை தேர்தல் கமிஷன் உன்னிப்பாக கண்காணித்தது.

35 இடங்களில் அதிரடி சோதனை

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் காலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வசிக்கும் அரசு இல்லம், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீடு, சென்னை, புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல்லில் உள்ள அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடு, சென்னையில் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அவரது அறை, திருச்சியில் உள்ள அவரது கல் குவாரி உள்ளிட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது.

இதேபோல், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான ஆர்.சரத்குமார் வீடு, சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை சாலிகிராமத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமியின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம்

அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நேற்றுமுன்தினம் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை நேற்று அதிகாலை 4 மணிக்குத்தான் நிறைவடைந்தது. தொடர்ந்து, 22 மணி நேரம் அங்கு நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

விஜயபாஸ்கர் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் 4 பக்கங்கள் நேற்று மாலை சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில் ஆர்.கே.நகர் தொகுதியில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 836 வாக்காளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.94 கோடியே 73 லட்சத்து 44 ஆயிரம் பணம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

மேலும், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமியின் வீட்டிலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை

தமிழகத்தில் 35 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் எவ்வளவு?, சிக்கிய ஆவணங்கள் என்னென்ன? என்பது பற்றிய விவரங்களை அறிக்கையாக தயாரிக்கும் பணியில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இந்த பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 4 மணி அளவில் வருமான வரித்துறையினரின் அறிக்கை, இ-மெயில் மூலம் இந்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தேர்தல் ரத்து ஆகுமா?

தேர்தல் கமிஷன் அதிகாரிகள், வருமான வரித்துறையினரின் அறிக்கையையும், கைப்பற்றப்பட்ட ஆவண நகல்களையும் ஆய்வு செய்கின்றனர். அதன் அடிப்படையிலேயே தேர்தல் கமிஷனின் நடவடிக்கை இருக்கும்.

எனவே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடக்குமா?, அல்லது ரத்து ஆகுமா? என்பது விரைவில் தெரியவரும். 

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...