Sunday, April 9, 2017

ஆர்.கே.நகர் சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா திடீரென்று டெல்லிக்கு சென்றார். 
 
சென்னை, 

ஆர்.கே.நகர் சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா திடீரென்று டெல்லிக்கு சென்றார். அங்கு இந்திய தலைமைத் தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதியிடம் அறிக்கை தாக்கல் செய்கிறார். ராஜேஷ் லக்கானியும் இன்று டெல்லி செல்கிறார்.

விக்ரம் பத்ரா 

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கு, இதுவரை இல்லாத அளவில் கூடுதலாக கண்காணிப்புக் குழுக்கள், பறக்கும்படை, தேர்தல் பார்வையாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவையெல்லாம் போதாது என்று கருதி, தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இணையாக சிறப்பு தேர்தல் அதிகாரியாக விக்ரம் பத்ராவையும் தேர்தல் கமி‌ஷன் நியமித்துள்ளது.

வருமான வரி சோதனை 

கடந்த 6–ந்தேதி அவர் பதவி ஏற்றுக்கொண்டார். உடனடியாக ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று பார்வையிட்ட அவர், 7–ந் தேதியன்று தலைமைத் தேர்தல் அதிகாரி, சென்னை போலீஸ் கமி‌ஷனர், மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் வீடு உள்பட பல முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

டெல்லி சென்றார் 

இந்த சூழ்நிலையில், விக்ரம் பத்ரா நேற்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு திடீரென்று புறப்பட்டு சென்றார். அங்கு அவர், தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக அவர் சேகரித்த தகவல்கள் மற்றும் கருத்துகள் அடங்கிய அறிக்கையை நசீம் ஜைதியிடம் விக்ரம் பத்ரா தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.

தள்ளிவைக்கப்படுமா? 

ஆர்.கே.நகரில் பல தரப்பிலும் செய்யப்படும் பணபட்டுவாடா, அதற்கான ஆதாரங்கள், குற்றச்சாட்டுகள் போன்றவை அந்த அறிக்கையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தேர்தலை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்துவிட்டு, பின்னர் வாக்குப்பதிவை நடத்தலாமா? என்று ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

அவகாசம் இல்லை 

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 4–ந் தேதி இரவுக்குள் புதிய எம்.எல்.ஏ. தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதி காலியாகி ஜூன் 5–ந் தேதியுடன் 6 மாதம் நிறைவடைகிறது.

இந்த சூழ்நிலையில், 12–ந்தேதி நடைபெற இருக்கும் வாக்குப்பதிவை தள்ளி வைக்க காலஅவகாசம் அதிகம் இல்லை. அப்படி தள்ளி வைத்தாலும் பணப்பட்டுவாடா நிறுத்தப்பட்டுவிடுமா என்பது சந்தேகம்தான். எனவே, வாக்குப்பதிவை தள்ளிவைப்பதாக அறிவிப்பதற்கு முன்பு சில சிறப்பு நடவடிக்கைகளை தேர்தல் கமி‌ஷன் எடுத்தாக வேண்டும்.

இல்லாவிட்டால், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு மேலும் கால அவகாசத்தையும் வாய்ப்பையும் கொடுத்ததாக அது அமைந்துவிடக்கூடும்.

தகுதி இழப்பு 

இதுபோன்ற ஒரு சூழ்நிலையை தேர்தல் கமி‌ஷன் சந்தித்தது இல்லை. வேட்பாளர் தவறிழைத்தது ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டால், தற்போதைய நடைமுறைப்படி அவர் மீது போலீசில் புகார் செய்து வழக்கு பதிவு வேண்டுமானால் செய்யலாம். அது கோர்ட்டு, விசாரணை என்ற பாதையில் செல்லும். ஆனால் குறிப்பிட்ட வேட்பாளர் என்று யாரையும் தகுதி இழப்பு செய்வதற்கு தற்போதைய நடைமுறைப்படி இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

2 அணிகளும் விளக்கம் 

முன்னதாக அ.தி.மு.க. அம்மா அணி நிர்வாகிகள், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் நேற்று தலைமைச் செயலகத்தில் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், இரட்டை இலை சின்னத்தை தவறாக பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுபோல அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பிலும், தேசிய கொடியை தவறாக பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி அளித்து மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனுக்களை தேர்தல் கமி‌ஷனுக்கு ராஜேஷ் லக்கானி அனுப்பி உள்ளார்.

ராஜேஷ் லக்கானி 

இதற்கிடையே ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த பணபட்டுவாடா தொடர்பான விரிவான அறிக்கையை ராஜேஷ் லக்கானியிடம் தேர்தல் கமி‌ஷன் கேட்டு உள்ளது. 10–ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.

எனவே, அதை நேரில் சமர்ப்பிப்பதற்காக அவர் டெல்லிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை)செல்கிறார்.

அமலாக்கப் பிரிவு 

இந்த நிலையில், அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் பல பிரமுகர்களின் வீடுகளில் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் பார்வையிட்டதாக கூறப்படுகிறது.

அமலாக்கப் பிரிவு சார்பில் வழக்கு தொடரப்பட்டால் கைது நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...