Monday, June 5, 2017

கணவரை துப்பாக்கியால் சுட்ட வழக்கு: அறிவுரை கூறி மனைவிக்கு ஜாமின்

பதிவு செய்த நாள்05ஜூன்  2017   06:04


பெங்களூரு: கணவரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில், மனைவிக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

பெங்களூரைச் சேர்ந்தவர் சாய்ராம், 52; தனியார் நிறுவன உரிமையாளர். இவரது மனைவி அம்சவேணி, 48. மது குடிக்கும் பழக்கம் உள்ள இருவரும், மே 5ம் தேதி மாலை, ஒசூர் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, தகராறு ஏற்பட்டது. காரில் இருந்து தப்பிய கணவரை விரட்டி சென்று அம்சவேணி, துப்பாக்கியால் சுட்டார். காயமடைந்த சாய்ராம், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

சூர்யநகர் போலீசார், அம்சவேணியை கைது செய்து விசாரித்த போது, மகளின் திருமண விஷயத்தில், தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சண்டையாக மாறி, கணவரை மனைவி, துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்டது. 

அம்சவேணியிடம் விசாரணை நடத்திய போலீசார், நேற்று முன்தினம், தேவனஹள்ளி செஷன்ஸ் நீதிமன்றத்தில் கூறியதாவது:
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதே, இவர்களின் சண்டைக்கு முக்கிய காரணம் என, தெரியவந்துள்ளது. பனசங்கரியில் வசிக்கும் நண்பர் சேகர் குப்தாவிடம், எட்டு லட்சமும், விஜயா வங்கியிலும் சாய்ராம், கடன் வாங்கியுள்ளார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனை அடைக்க முடியவில்லை. வங்கி அதிகாரிகள், கடனை அடைக்கும்படி நெருக்கடி கொடுத்தனர்.
தமிழகத்தின் தேன்கனிகோட்டையில், அம்சவேணி பெயரில் துவங்கப்பட்ட செங்கல் தொழிற்சாலையும் நஷ்டத்தில் மூழ்கியது. இதனால் தம்பதியரிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. 

இதுதவிர, சாய்ராம் ஒருமுறை, உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தன் விலை மதிப்புள்ள கைக்கடிகாரம், மோதிரத்தை மனைவியிடம் கொடுத்திருந்தார். மருத்துவமனையிலிருந்து திரும்பியதும், அதை திருப்பி கேட்ட போது, காணாமல் போய்விட்டதாக கூறினார். இதனால் மனைவி மீது சாய்ராம் கோபமடைந்தார்.
இந்த நிலையில், வங்கியிலிருந்து, கடனை அடைக்கும்படி நெருக்கடி வந்ததால், சம்பவம் நடந்த அன்று தம்பதியர், வங்கி சென்று, கால அவகாசம் கேட்டு, வீடு திரும்பினர். அப்போது, தம்பதியரிடையே வழக்கம் போல் சண்டை நடந்து, அம்சவேணி துப்பாக்கியால் சாய்ராமை சுட்டார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

அம்சவேணி ஜாமின் கோரி, தாக்கல் செய்திருந்த மனு குறித்தும், நேற்று முன்தினம் விசாரணை நடந்தது. 

அப்போது அம்சவேணி, 'என் பாதுகாப்புக்காக, துப்பாக்கி வைத்திருந்தேன். சம்பவ நாளன்று, எங்களிடையே ஏற்பட்ட சண்டையில் சாய்ராம், துப்பாக்கியால், என்னை நோக்கி சுட்டதில், கார் கண்ணாடி நொறுங்கியது. அதன்பின், துப்பாக்கியின் பின் பகுதியால், என் முகத்தில் அடித்தார். என் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக, அவரது கையிலிருந்த துப்பாக்கியை பறித்து சுட்டேன்' என தெரிவித்தார். 

விசாரணையின் போது, நீதிமன்றத்தில் இருந்த சாய்ராமிடம் நீதிபதி, துப்பாக்கி குண்டு பாய்ந்த இடத்தை காண்பிக்கும்படி கூறினார். தன் தொடையில் குண்டு பாய்ந்த இடத்தை சாய்ராம் காண்பித்தார். 

தம்பதியிடம் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, 'நீங்கள் இருவருமே படித்தவர்கள். நீங்களே இப்படி நடந்து கொண்டிருக்க கூடாது. மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்' என அறிவுரை கூறி, அம்சவேணிக்கு ஜாமின் வழங்கினார்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...