Wednesday, June 14, 2017

தியாகிக்கு ஓய்வூதியம் வழங்குவதில் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள்14ஜூன்2017 00:39

மதுரை: 'தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். கடுமையான நடைமுறைகளை பின்பற்றக்கூடாது,' என 89 வயது தியாகி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை வசந்தநகர் பாலகிருஷ்ணன்,89, தாக்கல் செய்த மனு:
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்றேன். வேலுார் மத்திய சிறையில் 1943 டிச.,23 முதல் 1944 டிச.,23 வரை அடைக்கப்பட்டேன். 

உடன் சிறையில் இருந்த தியாகி மாயாண்டி பாரதி சான்றளித்தார். மாநில அரசு அங்கீகரித்து எனக்கு தியாகி ஓய்வூதியம் வழங்குகிறது. மத்திய அரசின் ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்தேன். மத்திய உள்துறை செயலர் (சுதந்திரப் போராட்ட தியாகிகள் பிரிவு) நிராகரித்தார். அதை ரத்து செய்து ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் மனு செய்திருந்தார்.

நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் உத்தரவு: தியாகி மாயாண்டி பாரதி அளித்த சான்றிதழில், மனுதாரர் மீதான வழக்கு, கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது மற்றும் குற்றப்பத்திரிக்கை விபரங்களை குறிப்பிடவில்லை என்ற காரணத்தால் மனுதாரர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

தியாகி மாயாண்டி பாரதி அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். அவருடன் சிறையில் இருந்ததற்கான சான்றை, சக கைதிகளுக்கு மாயாண்டி பாரதி வழங்கியதை, பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஏற்று உத்தரவுகள் பிறப்பித்துள்ளன.

எப்.ஐ.ஆர்., அல்லது கைது வாரன்ட் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு, தியாகிகளிடம் எதிர்பார்க்கக்கூடாது. உடன் சிறையில் இருந்த, தியாகியின் சான்று போதுமானது. தியாகிகளிடம் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். கடுமையான நடைமுறைகளை பின்பற்றக்கூடாது.
மத்திய உள்துறை செயலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரின் மனுவில் உள்ள சில குறைபாடுகளை மாநில அரசு சரி செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். 

மத்திய அரசு மறு பரிசீலனை செய்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025