Friday, June 16, 2017


வரி பிடித்தம் செய்த வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு

பதிவு செய்த நாள்16ஜூன்2017 00:05

சென்னை:நிரந்தர வைப்பு தொகைக்கு, கூடுதலாக வரி பிடித்தம் செய்த வங்கி, இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையை சேர்ந்த முருகேசன் தாக்கல் செய்த மனு:சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில், எனக்கு சேமிப்பு கணக்கு உள்ளது. இத்துடன், என் பெயரில், ஏழு நிரந்தர வைப்பு தொகை கணக்குகளும் உள்ளன. இந்த கணக்குகளுக்கு கிடைக்கும் வட்டி வருவாயில், கூடுதலாக, 7,168 ரூபாய், வரி பிடித்தம் செய்யப்பட்டது.கூடுதலாக பிடித்தம் செய்த தொகையை, என் கணக்கில் வரவு வைக்க கோரினேன்; வங்கிமறுத்துவிட்டது. பிடித்தம் செய்யப்பட்ட தொகையுடன், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

வழக்கு விசாரணையில், 'வங்கியின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, உரிய சேவை வழங்கப்பட்டு உள்ளது. தங்கள் தரப்பில் தவறில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, வங்கி வாதிட்டது.இந்த வழக்கில், நீதிபதி ஜெயபாலன், நீதித்துறை உறுப்பினர் கலையரசி பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் சமர்ப்பித்த ஆவணங்களை பார்க்கும் போது, வங்கி சேவையில் குறைபாடு உள்ளது. பிடித்தம் செய்யப்பட்ட, 7,168 ரூபாய் மனுதாரருக்கு வழங்குவதுடன், இழப்பீடாக, 5,000 ரூபாயும், வழக்கு செலவு, 5,000 ரூபாயும், வங்கி நிர்வாகம், ஆறு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025