Thursday, June 15, 2017

திருப்பதி கோயில் எதிரே பெற்றோருடன் தூங்கிய கைக்குழந்தை கடத்தல்

2017-06-15@ 01:41:34


திருமலை: திருப்பதி கோயில் எதிரே பெற்றோருடன் தூங்கிய கைக்குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவின் வஜ்ரகரூர் மண்டலம் உருவகொண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார். நள்ளிரவு 12 மணியளவில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வெங்கடேஷ் குடும்பத்தினருடன் கோயில் எதிரே உள்ள கொல்ல மண்டபம் அருகே படுத்து தூங்கினார். நேற்று காலை 7 மணியளவில் எழுந்து பார்த்தபோது, அருகில் படுத்திருந்த ஒரு வயது குழந்தை சென்னகேசவலுவை காணவில்லை. அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் ேதடியும் குழந்தை கிடைக்கவில்லை.

இதுகுறித்து வெங்கடேஷ் திருமலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், குழந்தை காணாமல்போன இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்து குழந்தையை தூக்கி ெசன்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீசார், குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் இதேபோன்று 5 வயது குழந்தை நவ்ய பெற்றோருடன் திருமலையில் உள்ள சமுதாய கூடத்தில் படுத்திருந்தபோது, மர்மநபரால் கடத்தி செல்லப்பட்டார். இந்த செய்தி சமூக வலைதளத்திலும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காட்சிகளை வைத்து தெலங்கானா மாநிலத்தில் குழந்தையை கடத்தி சென்றவர் பஸ்சில் சென்றபோது பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025