Sunday, June 4, 2017

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்!

ஜி.லட்சுமணன்

இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற நவீன மின்னணுச் சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. விளைவு, தேவையானபோது சமைத்துச் சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து, ஃப்ரிட்ஜில் வைத்துகொள்கிறோம். அதை விரும்பும்போது மீண்டும் மைக்ரோவேவ் அவனிலோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. எப்போதும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பமும், அப்படிச் சாப்பிட்டால்தான் ஆரோக்யம் என்ற தவறான எண்ணமும்தான் இதற்குக் காரணம். `உணவுகளை இப்படிச் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், அதிலுள்ள சத்துகள் குறைந்துபோய்விடும். அதுவே உடல் ஆரோக்யத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும்’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், `இது ஃபுட் பாய்ஸனிங் தொடங்கி இதய நோய், புற்றுநோய் போன்ற பெரிய நோய்கள் வரை வழிவகுத்து, உயிருக்கே உலைவைத்துவிடும்’ என்றும் எச்சரிக்கிறார்கள். அந்த வகையில் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

சிக்கன்

கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம்ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது. ஒரு முறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்றால், சாண்ட்விச்சாகச் செய்து சாப்பிடலாம்.



கீரை

கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.



முட்டை

முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.



காளான்

காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.



சாப்பாடு

அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.



உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும்போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.



சமையல் எண்ணெய்

எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.



பீட்ரூட்


பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...