Sunday, June 11, 2017

கால் டாக்ஸி டிரைவர்களின் 'அன் டோல்ட் ஸ்டோரி'...!
நமது நிருபர்மீ.நிவேதன்

சென்னையில் சாலைகளை அதிகமாய் ஆக்கிரமித்திருப்பது கால் டாக்ஸிகள்தான். சென்னையில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட கால் டாக்ஸிகள் இயங்கி வருகின்றன. கால் டாக்ஸிகளை தவிர்த்து விட்டு, ஒரு நாள் கூட சென்னையை இயக்கிவிட முடியாது என்பதுதான் உண்மை. ஐ.டி நிறுவனங்கள் தொடங்கி, சாதாரண பயணிகள் வரை சென்னையில் பெரும்பான்மையோர் நம்பி இருப்பது, கால் டாக்ஸிகளைத்தான்.





இரவு பத்து மணிக்கு மேல், சென்னையின் பரபரப்பான சாலைகளில் ஆங்காங்கே கால் டாக்ஸிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருகின்றன. பத்தில் இரண்டு கார்களில் ஏ.சி தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கின்றது. மற்ற கார்கள் சலனமேயின்றி இருக்கிறது. எல்லா கார்களிலும், டிரைவர் இருக்கையில் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கிறார். காசு, பணம், துட்டு, மணி என்பதையெல்லாம் தாண்டி, ஒவ்வொரு காருக்கு பின்னாலும், நினைத்து பார்க்க முடியாத ஒரு அன்டோல்ட் ஸ்டோரி இருக்கும்!

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு அருகில், வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் தூங்கி கொண்டிருந்த ஒருவரிடம் கேட்ட போது "எனக்கு சொந்த ஊர் ராஜபாளையம். வீட்ல மொத்தம் ஆறு பேர். நான்தான் மூத்த ஆளு. பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன்; என் அப்பாவுக்கு நான் வக்கீல் ஆகணும்னு ஆசை. நல்லாதான் படிச்சேன். திடீர்னு மூணு வருசத்துக்கு முன்னாடி, அப்பா இறந்து போய்ட்டார்; குடும்பத்த காப்பாத்த, ஊர்ல ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சேன்.





வருமானம் பத்தல. அப்போதான் தெரிஞ்சவர் ஒருத்தர், சென்னைல கார் ஓட்ட ஆள் வேணும்னு இங்கே கூட்டிட்டு வந்தார். சென்னைக்கு வந்து அஞ்சு மாசம் ஆவுது. சென்னை எனக்குப் புதுசு. வழி சுத்தமா தெரியாது. கார்ல வரும் பத்தில், எட்டு பேர் நமக்கு வழி சொல்ல மாட்டாங்க; மேப் பாத்துதான் போகணும். மேப் பெரும்பாலும் நம்மள சுற்ற விட்ரும். அப்படி சுற்றும் போது, கார்ல இருக்கவங்க திட்ட ஆரம்பிச்சுடுவாங்க. நம்ம மேல தப்பே இல்லனாலும், அப்போ ஒரு வார்த்தை கூட நம்மளால திருப்பி பேச முடியாது சார்.

கட்டணம் அதிகமா இருந்தா, பயணிகள் எங்க கூடதான் சண்டை போடுவாங்க. பயண கட்டணத்துக்கும், எங்களுக்கும் சம்பந்தமே இல்லங்கற விஷயத்த படிச்சவங்க கூட ஏத்துக்க மாட்டாங்க. சிலர், 'என்னோட காச வாங்கி, நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டணு' சாபமெல்லாம் விட்டுடட்டு போவாங்க சார். எனக்கு இருக்க டார்கெட்ட முடிக்கணும்னா, காலைல 4 மணிக்கு காரை எடுக்கணும்; சில நாள் சாய்ந்திரம் ஆறு மணிக்கெல்லாம் டார்கெட் முடிச்சிருவேன். சில நாள் நைட் 12 மணிவரை ஓட்டினாலும் முடிக்க முடியாது. எப்படி பாத்தாலும் 3 மணி நேரத்துல இருந்து, 4 மணி நேரம் வரதான் தூக்கம் இருக்கும். அதுவும் கார்லதான்" என்ற போது, இவரின் தூக்கத்தை கெடுத்து விட்டமோ என்கின்ற குற்ற உணர்ச்சி, தானாகவே நம்மை ஒட்டிக் கொண்டது.



இரவு 3 மணிக்கு கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா பகுதியில், காரை நிறுத்தி முகம் கழுவிக் கொண்டிருந்த ஒரு ஓட்டுநரிடம் தயங்கித் தயங்கி பேசிய போது, "கார் ஓட்ட ஆள் வேணும்னு சொல்லி, ராமநாதபுரத்துல இருந்த ஒருத்தர் என்ன சேர்த்து விட்டார். தினமும் 15 மணி நேரத்துக்கு மேல் கார் ஓட்டணும். உடம்பெல்லாம் பயங்கரமா வலிக்கும். எந்த வலியையும் பொருட்படுத்தாமதான் ஓட்டிட்டு இருக்கேன். ஒரு நாள் ரொம்ப களைப்புல காரை நிப்பாட்டி தூங்கிட்டேன். பத்து நிமிசத்துல கார் ஓனர் போன் பண்ணி, ''எதுக்கு கார் ஒரே இடத்துல நிக்கிதுன்னு?'' கேட்டாரு. எனக்கு தூக்கிவாரிப் போட்ருச்சி. ஒருத்தர் கண்காணிப்புல வேலை பாக்குறது, எவ்வளவு பெரிய கஷ்டம் தெரியுமா?" என்று அவர் சொன்ன போது, அவர் நரம்பிற்குள் இருந்த வலியை எனக்கும் கடத்தியிருந்தார்.

"வீட்ல இருக்கவங்க, நான் சென்னைல சந்தோசமா இருக்கேனு நம்பிட்டு இருக்காங்க. அந்த சந்தோசத்த கெடுத்துட கூடாதுனுதான் எல்லாத்தையும் சகிச்சுகிட்டு வண்டி ஓட்டிட்டு இருக்கேன். நேரத்துக்கு சாப்பாடு இல்லை. தூக்கம் இல்லை. நிம்மதி இல்ல. இப்படி இல்லை என்ற வார்த்தையில்தான் வாழ்க்கையே இருக்கு" என்கிறார் மற்றொரு ஓட்டுநர்.

''காரில் வருகிற பயணிகளிடம் பேசக் கூடாது; வருகிற எல்லா அழைப்புகளையும் ஏற்றாக வேண்டும். ஏற்கவில்லையென்றால் உடனடியாக ஃபைன் தொகை. காரைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; குறித்த நேரத்தில் பிக்கப் எடுத்தாக வேண்டும்'' என்பதில் தொடங்கி, பல்வேறு பிரச்னைகளைக் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் எதிர்கொண்டாக வேண்டும்.

பணம் என்ற ஒன்றையே குறிக்கோளாய் வைத்து, கார் ஓட்டுகிற பத்தில் ஆறு ஓட்டுநர்களுக்கு முதுகுவலி, மலச்சிக்கல் போன்ற உடல் உபாதைகள் இருக்கிறது என்பது வேதனையான விஷயமாக இருக்கிறது. இரவு நேரங்களில் சென்னை சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் டேக்ஸி கா(ர)ர்களின் பின்னால் இருக்கிற கதைகளையும் வலிகளையும் உணர முடியுமானால், "டிரைவர் தானே" என அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது என்பதுதான் உண்மை. மனதையும் கண்களையும் எவ்வளவு திடப்படுத்தி வைத்திருந்தாலும், எதிரில் இருக்கிற சில மனிதர்கள் அதை திரவமாக்கி விடுகிறார்கள்!

- ஜார்ஜ் ஆன்டனி

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...