Sunday, June 11, 2017


நவீன வசதிகளுடன் தயாராகும் புதிய பேருந்து நிலையம்

By எ.கோபி  |   Published on : 11th June 2017 04:40 AM  |   
urapakkam
தென் மாவட்டப் பயணிகளுக்கென நவீன வசதிகளுடன் ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கத்தில் அமையவிருக்கும் புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என சிஎம்டிஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாரிமுனையில் புறநகர்ப் பேருந்து நிலையத்தில் கடும் நெரிசல் காரணமாக, பல்வேறு வசதிகளுடன் கோயம்பேட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
கடும் நெரிசலில் சிக்கித் தவிக்கும்..: ஆனால், நாள்கள் செல்ல செல்ல கோயம்பேடு பகுதிக்கு வருவதே பெரிய சிக்கலாக வருகிறது.
குறிப்பாக, தென்மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் தாம்பரம், கிண்டி, வடபழனி வழியாகவும், பெருங்களத்தூரிலிருந்து புற வழியாக சாலை வழியாக நெற்குன்றம் வந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தை சென்றடைய வேண்டியுள்ளது.
இதனால், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் செல்லும் போதும், வரும்போதும், தாம்பரம், பெருங்களத்தூரை கடந்து வருவதில் கடும் நெரிசலை சந்திக்கவேண்டியள்ளது. இதனால், தென் மாவட்ட பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
6 ஆண்டுகளாக..: நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு, கடந்த 2011 இல் தென்மாவட்ட பயணிகளுக்கென புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்பிறகு, நிலம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு, ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கத்தில் 88.53 ஏக்கர் அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நந்திவரம் கோயில் நிலம், கிளாம்பாக்கம் முதுமக்கள் தாழி பகுதி ஆகியவற்றால் நடைமுறைச் சிக்கல் நிலவுகிறது. இருப்பினும், அதை தீர்க்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, வரும் செப்டம்பரில் அடிக்கல் நாட்டி, புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சிஎம்டிஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மேலும் சிஎம்டிஏ வட்டாரங்கள் கூறியதாவது:
தென் மாவட்ட பயணிகளுக்காக ஊரப்பாக்கம் அருகே நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்ட பணிகள் குறித்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான பேருந்துகளுக்கு..: அவ்வகையில், தென் மாவட்ட பேருந்துகள் மட்டுமின்றி, இதர பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் 2.5 ஆயிரம் அரசு, ஆம்னி பேருந்துகளுக்கு மேல் கோயம்பேடு அரசு, ஆம்னி பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றன. இதில், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதியிலிருந்து பேருந்துகள் வந்து செல்வதுமாக உள்ளன.
இதனால், பெருங்குளத்தூர், தாம்பரம், ஜிஎஸ்டி சாலைப்பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில், தென் மாவட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு செல்ல உள்ளது. அத்துடன், ஆம்னி பேருந்துகளும் அப்பகுதிக்கு இடம் மாற்றப்படவுள்ளன.
துரிதமாகும் பேருந்து நிலைய பணிகள்: அதன்படி, புதிய பேருந்து நிலையத்தில் தென் மாவட்ட பேருந்துகள் நிறுத்துவதற்கான பிரத்யேக நிறுத்தப்பகுதிகள், பணிமனை, பயணிகளுக்கென உணவுக்கூடம் உள்பட பல்வேறு வசதிகளுடன் கட்டமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. அதுபோல், விரைவுப் பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகள் உள்பட அனைத்து தென் மாவட்ட வெளியூர் பேருந்துகள் சென்று, வருவதற்கு ஏதுவான நுழைவுப்பகுதி, வெளியேறும் பகுதிகள் அமைக்கப்படவுள்ளன.
நெரிசல் இல்லாத வகையில்..: அதுபோல், ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து ஓர் இணைப்புச் சாலையும் கேளம்பாக்கத்திலிருந்து வண்டலூர் வழியாக புதிய பேருந்து நிலையத்துக்கு ஓர் இணைப்புச் சாலையும் அமைக்கப்படவுள்ளது. மேலும், பெருங்களத்தூர்-செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் வாகன நெரிசல் ஏற்படாதவாறு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்த அனைத்து பணிகளுக்கும் சிஎம்டிஏ, வீட்டுவசதித்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளன.

    No comments:

    Post a Comment

    Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

    Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...