Friday, June 9, 2017

தலையங்கம்
ஒரே நேரத்தில் பாராளுமன்றம், சட்டசபை தேர்தல்கள்



இந்திய அரசியல் சட்டப்படி, மத்திய அரசாங்கத்தை நிர்வகிக்க பாராளுமன்ற தேர்தலும், மாநில அரசாங்கங்களை நிர்வகிக்க சட்டசபை தேர்தல்களும் நடத்தப்படுகின்றன.

ஜூன் 09, 03:00 AM
இந்திய அரசியல் சட்டப்படி, மத்திய அரசாங்கத்தை நிர்வகிக்க பாராளுமன்ற தேர்தலும், மாநில அரசாங்கங்களை நிர்வகிக்க சட்டசபை தேர்தல்களும் நடத்தப்படுகின்றன. இதுதவிர, கிராம பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன்கள், மாவட்ட பஞ்சாயத்துக்கள், நகரசபைகள், மாநகராட்சிகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இவை எல்லாவற்றிற்குமே பதவிகாலம் 5 ஆண்டுகள்தான். கடந்த பல ஆண்டுகளாகவே பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாமே என்ற எண்ணம் வலுத்து வருகிறது. மத்திய அரசாங்கம் இதை தீவிரமாக சிந்தித்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை இணையதளத்தில் பொதுமக்களிடம் இதற்கான கருத்துகளை கேட்டறிந்தது. பொதுமக்களின் ஆதரவு இதற்கு பெருமளவில் இருந்தது. ‘நிதி ஆயோக் குழு’ கூட்டத்திலும் பிரதமர் நரேந்திரமோடி இந்த கருத்தை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

ஒவ்வொருமுறையும் பாராளுமன்ற தேர்தல் நடத்துவதற்கு ரூ.4 ஆயிரம் கோடி வரை செலவாகிறது. இதுபோல, சட்டசபை தேர்தல்கள் நடத்த மாநில அரசாங்கங்களுக்கு ரூ.300 கோடி வரை செலவாகிறது. உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தவும் கணிசமான தொகை செலவாகிக் கொண்டிருக்கிறது. ஆக, தேர்தலுக்காக ஆகும் செலவு மட்டும் இவ்வளவு அதிகமாவதை தவிர்க்க வேண்டுமென்றால், 3 தேர்தல்களையும் ஒன்றாக வைத்தால் மொத்தமே ரூ.4 ஆயிரத்து 500 கோடிதான் செலவாகும். இதுமட்டுமல்லாமல், ஒவ்வொருமுறையும், தேர்தல் நடத்துவதற்கு அரசாங்க ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் போன்ற பல்வேறு பணிகளில் இருப்பவர்களை அனுப்ப வேண்டிய நிலை இருப்பதால், அவர்களின் அன்றாடபணிகளும் பாதிக்கப்படுகின்றன. அந்த நேரங்களில் பொதுமக்களுக்கு ஆற்றவேண்டிய சேவைகள் தடைபடுகின்றன. இதுமட்டுமல்லாமல், ஒவ்வொருமுறையும் தேர்தல் நடக்கும்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடுவதால், அரசாங்கத்தால் எந்த அறிவிப்புகளையோ அல்லது நலத்திட்டங்களையோ செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.

இதற்கு எதிர்மறையான சில கருத்துகளும் கூறப்படுகின்றன. பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கவேண்டும் என்று முடிவெடுத்தால், ஒரு சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்து ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள், நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கும். ஒரு சில மாநிலங்களில் அதன் பதவி காலத்தை நீட்டிக்கவேண்டிய தேவையும் இருக்கும். ஆக, அரசியல் சட்டத்தை இதற்காக மாற்ற வேண்டியதிருக்கும் என்று சில கருத்து கூறப்படுகிறது. ஒருவேளை பாராளுமன்றத்திலோ, அல்லது ஒரு சில சட்டசபைகளிலோ எந்தக்கட்சிக்கும் முழுமையான மெஜாரிட்டி கிடைக்காமல் மறுதேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், இந்த ஒரே சமயத்தில் தேர்தல் என்ற தார்ப்பரியம் என்ன ஆகும்? என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால், இதெல்லாம் எப்போதாவது ஓரிரு தேர்தல்களில் மட்டும் நடைபெறும் என்பதால், அதை பெரிதாக பொருட் படுத்த வேண்டியதில்லை. இதேபோல், ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடந்தால், மக்களின் தேர்வு ஒரு சிலருக்கு சாதகமாக அமையவும் வாய்ப்பு இருக்கிறது. இது, சிறிய கட்சிகளை அழிப்பதற்கான முயற்சியாக போய்விடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அப்படியொரு நிலைமையும், வாய்ப்பும் இல்லை. மக்கள் தெளிவானவர்கள். 1951–ம் ஆண்டு முதல் 1967 வரை பாராளுமன்ற தேர்தலும், சட்டசபை தேர்தல்களும் ஒன்றாக நடந்திருக்கிறது. 1989–ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பின்பு உள்ள நிலைமையை எடுத்துக் கொண்டால், பல்வேறு மாநிலங்களில் 31 முறை ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், 1991, 1996–ம் ஆண்டுகளில் சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தாலும், மத்திய அரசாங்கத்துக்கும், மாநில அரசாங்கங்களுக்கும் மக்கள் வேறு வேறு கட்சிகளுக்குத்தான் ஓட்டுப்போட்டிருக்கிறார்கள். ஆகவே, வாக்காளர்கள் குழம்பி விடுவார்கள் என்ற கருத்துக்கே இடமில்லை. எனவே, பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும், ஏன் உள்ளாட்சிகளுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதே சாலச் சிறந்ததாகும்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...